Published:Updated:

நடராஜன் குறித்து சேதுராமன் பகீர் தகவல்! உண்ணாவிரதத்தில் பன்னீர்செல்வம் அதிர்ச்சி

நடராஜன் குறித்து சேதுராமன் பகீர் தகவல்! உண்ணாவிரதத்தில் பன்னீர்செல்வம் அதிர்ச்சி
நடராஜன் குறித்து சேதுராமன் பகீர் தகவல்! உண்ணாவிரதத்தில் பன்னீர்செல்வம் அதிர்ச்சி
நடராஜன் குறித்து சேதுராமன் பகீர் தகவல்! உண்ணாவிரதத்தில் பன்னீர்செல்வம் அதிர்ச்சி

படம்:கே.ஜெரோம்


இன்னும் இரண்டு மாதத்தில் நாங்கள்தான் சிஎம்; எங்களுக்கு ஒரு தலையணை போதும் என்று நடராஜன் தனது நெருக்கமானவர்களிடம் பேசியதாக அகில இந்திய முவேந்தர் முன்னணி கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். உண்ணாவிரத மேடையில் இவ்வாறு அவர் பேசியது பன்னீர்செல்வத்தை அதிர்ச்சியடைய வைத்தது.

ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணைக் கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் 36 இடங்களில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் பன்னீர்செல்வம் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. உண்ணாவிரத மேடையில் மதுசூதனன், பொன்னையன், பி.ஹெச்.பாண்டியன் உள்ளிட்டவர்கள் அமர்ந்துள்ளனர்.

இந்த உண்ணாவிரதத்தில் பத்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குவிந்துள்ளனர். மேலும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் வந்த வண்ணம் இருக்கின்றனர். அவர்கள், ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணைக்கோரி, அங்குள்ளவர்களிடம் மனு கொடுத்து வருகின்றனர். மனு வாங்குவதற்காக கவுன்டர் அமைக்கப்பட்டுள்ளது. மனு கொடுப்பவர்களின் பெயர் மற்றும் செல்போன் நம்பர்கள் அங்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே, உண்ணாவிரதம் நடக்கும் இடத்துக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் வந்தார். அப்போது, பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து அவர் பேசுகையில், "ஏழு மாதங்களுக்கு முன்பு பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை சசிகலா கணவர் நடராஜன் நடத்தினார். அப்போது, நெருங்கிய பத்திரிகையாளர்களிடம் நடராஜன் மனந்திறந்து பேசினார். 'இன்னும் இரண்டு மாதத்தில் நாங்கள்தான் சிஎம்' என்று நடராஜன் கூறியுள்ளார். இதனைக் கேட்டு பத்திரிகையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போதுதான் தேர்தல் நடந்து நான்கு ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது என்று பத்திரிகையாளர்கள் கூறியுள்ளனர். அதற்கு நடராஜன், 'எங்களுக்கு கோடியெல்லாம் ஒரு பிரச்னையே அல்ல. நாங்கள் நினைத்தால் சிஎம் ஆகிவிடுவோம். எங்களுக்கு ஒரு தலையணை இருந்தால்போதும் என்று கூறினார்' என அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார் சேதுராமன்.

உண்ணாவிரத மேடையில் நடராஜன் பற்றி சேதுராமன் பேசியது பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

- சி.தேவராஜன்