Published:Updated:

விலங்குகளுக்கு டேங்கரில் தண்ணீர் கொண்டு போகும் விவசாயி!

விலங்குகளுக்கு டேங்கரில் தண்ணீர் கொண்டு போகும் விவசாயி!

விலங்குகளுக்கு டேங்கரில் தண்ணீர் கொண்டு போகும் விவசாயி!

விலங்குகளுக்கு டேங்கரில் தண்ணீர் கொண்டு போகும் விவசாயி!

விலங்குகளுக்கு டேங்கரில் தண்ணீர் கொண்டு போகும் விவசாயி!

Published:Updated:
விலங்குகளுக்கு டேங்கரில் தண்ணீர் கொண்டு போகும் விவசாயி!

மிழகத்தில் கடந்த 142 ஆண்டுகளாக காணாத வறட்சியை சந்திக்கவுள்ளது என அறிவித்திருக்கிறார் தமிழக அமைச்சர் வேலுமணி. '142 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் தமிழகம் இப்படியொரு வறட்சியை சந்திக்கிறது. தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 62 சதவிகிதம் மழைப்பொழிவு குறைந்துள்ளது. இரண்டு பருவமழைகள் பொய்த்துவிட்டதால் இப்படிப்பட்ட வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளோம். நீரை சிக்கனமாக மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பிரசாரம் செய்யப் போகிறோம்" என செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்துள்ளார் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. ஏற்கெனவே தமிழகத்தின் பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது; இந்த வறட்சி ஊருக்குள் வாழும் மக்களை மட்டுமல்ல. வனங்களுக்குள் வாழும் விலங்குகளையும், பறவைகளையும் கூட பாதித்துள்ளது. பல இடங்களில் தற்போது விலங்குகள் தண்ணீர் அருந்துவது இயற்கையான அருவிகளைலோ, குளங்களிலோ இல்லை; மனிதர்கள் வைக்கும் தண்ணீர் தொட்டிகளில்தான் நீர் அருந்துகின்றன. இந்த சூழல் நம் ஊரில் மட்டுமல்ல. கென்யாவில் கூடத்தான். கென்யாவில் இருக்கும் சாவோ வெஸ்ட் நேஷனல் பார்க்கிலும் வனவிலங்குகள் இதேபோல வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றின் தாகத்தை தீர்க்கும் பணியை பல மாதங்களாக திறம்பட செய்து வருகிறார் பேட்ரிக் மலுவா என்னும் விவசாயி ஒருவர்.

சாதாரண விவசாயியான பேட்ரிக் விநியோகிக்கும் தண்ணீர்தான் இந்த விலங்குகளுக்கு ஜீவாதாரம். அந்த அளவிற்கு தண்ணீர்ப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன இந்த விலங்குகள். கடந்த ஒரு வருடமாக அந்தப் பகுதியில் இருந்த நீர்நிலைகள் முற்றிலுமாக வறண்டுவிட அங்கிருந்த விலங்குகள் பல அந்த இடத்தில் இருந்து வெளியேறியிருக்கின்றன. எப்போதும் வேட்டைக் காரர்களால் மட்டுமே ஆபத்தை சந்திக்கும் விலங்குகளுக்குப் புதிய எதிரியாக முளைத்தது இந்த வறட்சி. இதனால் காட்டெருமைகள், வரிக்குதிரைகள், யானைகள், மான்கள் எனப் பல விலங்குகள் பாதிக்கப்பட்டது; சில விலங்குகள் அருந்த நீரின்றி மாண்டன. இதைப் பார்த்து வருந்திய பேட்ரிக் உடனே ஒரு ட்ரக்கை வாடகைக்கு எடுக்கிறார். சரணாலயத்தில் மிகவும் வறட்சியான இடங்களுக்கு சென்று, அந்த ட்ரக் மூலம் தண்ணீரை விநியோகித்திருக்கிறார். இப்படி இவர் தண்ணீர் கொண்டுவருவதைப் பார்த்து, தினமும் இவருக்காக காத்திருக்கின்றன விலங்குகள். 

வறட்சியின் போது தண்ணீரை அதிக விலைவைத்து வைப்பதுதானே 'மனித இயல்பு?' ஆனால் இவரோ சொந்த செலவில், சுமார் 70 கி.மீ தூரம் தள்ளியிருக்கும் விலங்குகளுக்கு 12,000 லிட்டர் அளவுள்ள தண்ணீரை தினமும் இலவசமாக விநியோகித்து வருகிறார். தற்போது இந்த செலவுகளை சமாளிப்பதற்காக ஒரு இணையதளத்தை உருவாக்கியிருக்கிறார் பேட்ரிக். அதில் வரும் பணம் மூலம் விரைவில் சொந்தமாக ட்ரக் வாங்கவும், பூங்காவுக்குள்ளேயே ஒரு போர்வெல் அமைக்கவும் திட்டமிட்டுள்ளார். இந்த சேவைக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவியத் துவங்கியதும் உதவிகளும் கிடைக்கத் துவங்கியிருக்கின்றன. இதன் மூலம் ஒருநாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை தண்ணீர் விநியோகம் செய்கிறார் பேட்ரிக்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவர் தினமும் நீலநிற லாரியில் வருவதை உணர்ந்து கொண்ட விலங்குகள், இவரின் லாரியைக் கண்டதுமே உற்சாகமாகி விடுகின்றன. இவர் தண்ணீரைக் கொண்டு, பூங்காவிற்குள் இருக்கும் வறண்ட குட்டைகளை நிரப்பும் வரை பொறுமையாகக் காத்திருந்து நீர் அருந்தி செல்கின்றன. யானை, வரிக்குதிரை, பறவைகள், மான்கள், ஒட்டகச்சிவிங்கி, காட்டெருமை என எல்லா மிருகங்களும் ஒன்றாக நீர் அருந்திவிட்டு செல்கின்றன. "விலங்குகள் தண்ணீர் இன்றி துன்பப்படுவதையும், இறப்பதையும் தினமும் பார்ப்பது என்பது மிகவும் வேதனையான ஒன்று. அந்த வேதனையை தாங்க முடியாமல்தான் இந்த முடிவை எடுத்தேன். ஒருவேளை இதுவும் இல்லையெனில் அவை இறந்துவிடும் என நினைக்கிறேன். 

ஒருநாள் இரவு சுமார் 500 காட்டெருமைகள் தண்ணீர் அற்ற குளத்தை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தன. நான் தூரத்தில் எனது லாரியுடன் வனப்பகுதிக்குள் நுழைந்ததுமே அவை என்னையும், தண்ணீரையும் அடையாளம் கண்டுகொண்டுவிட்டன. அவை தண்ணீரை மோப்பம் பிடித்துவிடுகின்றன" என்கிறார் பேட்ரிக். இந்த விஷயத்தால் கென்யாவில் வாட்டர் மேன் என அழைக்கப்படும் அளவிற்கு பிரபலமாகிவிட்டார் இவர். அதுமட்டுமின்றி அடுத்த தலைமுறை குழந்தைகளிடமும் வனவிலங்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, கென்யாவில் உள்ள சில பள்ளிகளுக்கு சென்று, உரையாற்றியும் வருகிறார். "அடுத்த தலைமுறையினர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினால்தான், அவர்களும் எதிர்காலத்தில் விலங்குகளை காப்பார்கள்" என நம்பிக்கையுடன் கூறுகிறார் பேட்ரிக். குடிக்க நமக்கே தண்ணீர் கிடைக்காத சமயங்களில் வனவிலங்குகளைப் பற்றியெல்லாம் எப்படி சிந்திப்பது என நீங்கள் கேட்கலாம். நாம் இவரைப் போல சேவை எல்லாம் செய்ய வேண்டாம். நம் வீட்டு மாடியில், சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைத்தால் கூடப் போதும். வானில் பறக்கும் சிறுபறவைகளின் தாகம் கொஞ்சமாவது தணியும்.

- ஞா.சுதாகர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism