Published:Updated:

நம்ம நட்பு வட்டத்துல, நம்ம கதிரா.. ராஜாவா? #Friends

நம்ம நட்பு வட்டத்துல, நம்ம கதிரா.. ராஜாவா? #Friends
நம்ம நட்பு வட்டத்துல, நம்ம கதிரா.. ராஜாவா? #Friends

"சாரிடா கதிர் கொஞ்சம் லேட்டாயிடுச்சு.." சொல்லிக்கொண்டே, தான் வந்த வண்டியை நிறுத்தினான் ராஜா.

"கொஞ்சம் இல்ல, நிறையவே லேட், ஆமாம் ராஜா, எப்பவுமே சொன்ன நேரத்துக்கு எங்கேயும் வரமாட்டியா..? இதென்ன உன் பழக்கமா? இல்ல வேண்டுதலா?"

"அதெல்லாம் இல்லடா, வர்ற வழியில போன் வந்துட்டேயிருந்தது, வண்டிய நிறுத்தி நிறுத்தி பேசிட்டே வந்தேன்... அதான்..."

"நீ காரணத்தை கண்டுபிடிச்சுட்டுதான் தப்பே செய்ய ஆரம்பிப்ப, வாரத்துல சண்டே ஒரு நாள் தான் லைப்ரேரி போறோம், அது உனக்கு பிடிக்கலயா. சரியா 4 மணிக்கு வரச்சொன்னேன், நீ என்னடானா, 5 மணிக்கு வர்றே. சரி சரி வண்டியை ஓரங்கட்டி நிறுத்திட்டு சீக்கிரம் வா, பேசிகிட்டே நடப்போம்"

ராஜா வண்டியை ஓரமாக நிழலில் நிறுத்திவிட்டு கதிரைப் பார்த்துச் சொன்னான், "ஒரு மேடையில் பேசுவதற்கு தாமதமாக வந்த கவியரசு கண்ணதாசன்... 'சிலருக்கு இந்து மதம் பிடிக்கும், சிலருக்கு இஸ்லாம் மதம் பிடிக்கும், சிலருக்கு கிருத்துவ மதம் பிடிக்கும், எனக்கு எப்போதுமே தாமதம் பிடிக்கும்; அப்படினு சொன்னாராம்" என ராஜா  சிரித்துக்கொண்டே சொல்ல..

"அது மேடை சுவராஸ்சியத்துக்காக கண்ணதாசன் சொன்னது. அதே கண்ணதாசன்தான்.. 'காலத்தை மறந்தா திரும்ப வராது கவனத்தில் வை.., பார்வையிலே தெளிவிருந்த பாதை வெகு தூரமில்லை' அப்படினும் சொல்லியிருக்கிறார். அது ஞாபகத்துக்கு வராதோ உனக்கு?"

"போதும் விடுடா, நான் என்னமோ பெரிய தப்பு பண்ணிட்ட மாதிரி குத்திக்காட்டிக்கிட்டே வர. இதுக்கலாமாவா புத்தி சொல்வாங்க..?"

"இது அறிவுரை இல்லடா, பெரியவங்க சொன்ன அனுபவ உரை. நம் இலக்கை அடைவதற்கான முதல் வழியே சரியான நேரத்தில் சரியானதை செய்வதுதான். எந்த ஒரு வெற்றிக்கு முன்னும், இதுபோன்ற சின்னச் சின்ன பொறுப்புணர்ச்சிதான் தடையாகவே இருக்கு. இத ஆழமா யோசிச்சா உனக்கே புரியும். நமக்கு சின்னச் சின்ன விஷயங்கள்ல புரிதல் இருந்தாலே வெற்றி வசப்பட்டு விடும். நீ ஏன் இன்னும் 8 அரியர்ஸ் வச்சிருக்கேனு இப்ப புரியுதா? ஒன்னு தெரிஞ்சிக்க.. போனா திரும்ப வராதது உயிர், இளமை, நேரம்  இந்த மூணும்தான் னு சொல்லுவாங்க”

"திடீருனு பெரிய வார்த்தையெல்லாம் பேசுறே, ஆனாலும் எனக்கு ஏதோ நல்லதுதான் சொல்லவர்றேனு புரியுது.’’

"கலாய்க்கறதானே?” 

"அப்படி இல்ல மச்சி, என்னை நீ புரிஞ்சு வச்சிருக்கதுனால, எனக்கு உறைக்கிற மாதிரி அழகா, பக்குவமா இப்படி சொல்ற"

"அது சரி!"

’’அதுக்கு இல்ல மச்சி, இதே டயலாக்க.. என் அண்ணாவோ, அப்பாவோ, மாமாவோ, தாத்தாவோ சொல்லியிருந்தா... அதுல நாலு உதவாக்கர வந்திருக்கும்... வெட்டிப்பய வந்திருக்கும், தெண்டச் சோறு வந்திருக்கும்...’’

"இப்ப நான் என்ன சொல்லிட்டேனு, என்னைய இந்த கலாய்.. கலாய்க்கற?"

"இனிமே பாருடா.., என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும், ஏன் ஒவ்வொரு நிமிஷமும் நானே செதுக்குறேன்டா"

"மத்தத செதுக்குறது இருக்கட்டும், முதல்ல நம்மள செதுக்குவோமா?!, புத்தகத்தை படிக்கிறத சொன்னேடா" என்று பேசிக்கொண்டு உள்ளே நுழைந்தார்கள். 

ஒரே ஒரு விஷயம்தான் நண்பர்களே. நம் நட்பு வட்டத்திலும் ராஜா, கதிர் என்ற கேரக்டரில் ஆட்கள் இருப்பார்கள். கதிர், எதையுமே நேரத்துக்கு செய்ய வேண்டும், நம்மால் நண்பர்கள் நேரம் வீணாகக்கூடாது என்று நினைப்பவன். ராஜா ‘அடப்போங்க பாஸு’ டைப். 

ராஜா ‘போங்க பாஸு’ என்றிருப்பது ஓகே. ஆனால், அதனால் கதிர் போன்றோர் பாதிக்கப்படக்கூடாது அல்லவா?

ஓகே.. நீங்கள் ராஜாவா.. கதிரா? 

 - ரா.அருள் வளன் அரசு