Published:Updated:

வாடகை சைக்கிள், சட்டி சோறு, ஆடலும் பாடலும்! - #WeekEndRewind

வாடகை சைக்கிள், சட்டி சோறு, ஆடலும் பாடலும்! - #WeekEndRewind
வாடகை சைக்கிள், சட்டி சோறு, ஆடலும் பாடலும்! - #WeekEndRewind

வாடகை சைக்கிள், சட்டி சோறு, ஆடலும் பாடலும்! - #WeekEndRewind

பால்ய கால நினைவுகள்ங்கிறது எப்போதும் திகட்டாத பால்கோவா. அவற்றை நினைவுகளால் அள்ளி அள்ளித் தின்னலாம். எப்போ வேணும்னாலும் எல்லோர் வாழ்விலும் நிகழும் அப்படிச் சில எத்திக்கும் தித்திக்கும் பலகார நினைவுகள் இதோ...

* இன்னைக்குத் திரும்புன பக்கமெல்லாம் ஸ்கூட்டரும் பைக்கும் இருக்கு. ஆனா சின்ன வயசுல சைக்கிளை கூட நாம அப்படிப் பார்க்க முடியாது. அப்போவெல்லாம் 1 ரூபாய்க்கும் 2 ரூபாய்க்குமா வாடகை சைக்கிள் பிடிச்சு தெருத்தெருவா சுத்தியதை எப்போ நினைச்சாலும் எத்திக்கும் தித்திக்கும்தானே..! #அந்த ரெண்டு ரூவாய்க்கு நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்!

* ஊர் ஊருக்கு கோழிப்பண்ணை மாதிரி பள்ளிக்கூடங்களைத் திறந்து நாள்பூராம் நண்டுசிண்டுகளை போட்டு அடைச்சி வெச்சிக்கிறாங்க. ஆனால் பத்து வருஷத்துக்கு முன்னாடிவரைக்கும் ஸ்கூல் வாசல்ல தள்ளுவண்டில விற்பாங்களே கொய்யா, மாங்கா, எலந்தைப்பழ இத்யாதிகள்... அதை அடிச்சிபிடிச்சி வாங்கி, வெறுப்பேத்துற ஃப்ரெண்ட் கடுப்பாகுற மாதிரி வக்கணை காட்டிச் சாப்பிட்ட நாட்கள் எல்லாம் கண்ணுமுன்னாடி வந்து வந்து போகுதே!

* குளுகுளு அறைக்குள்ளே ஆப்ஸ் கேமும், வீடியோ கேமும் விளையாடி சோர்வடையறாங்க பசங்க இப்போ. ஆனா பம்பரம், கோலி, கிட்டிப்புள், பாண்டினு சீஸனுக்கு ஒரு விளையாட்டு வருமே... அதையெல்லாம் சளைக்காம கண்விழிச்சதுலேர்ந்து இருட்டுற வரை போறபோக்குல வெயிலும் புழுதியும் பார்க்காம போட்டி போட்டு விளையாடிட்டு தாய்க்குலத்துக்கிட்ட தாறுமாறா வசவு வாங்கிக் கொண்டாடுனதெல்லாம் எத்திக்கும் தித்திக்குமா இல்லையா? #யய்யாடி... என்னா அடி?

* யாரோ ஒரு வீட்டுக்காரங்க புது வீடு கட்ட மணலும் செங்கல்லும் வாங்கித் தெருவுல கொட்டி வெச்சிருப்பாங்க. ஆனா அப்போதைய கனவில் இன்ஜினீயர்களா வாழ்ற நம்ம குட்டி வானரப்படை சின்னச்சின்னதா பல வீடுகள் கட்டி செங்கல்லை வெச்சு பஸ் விட்டு விளையாடினா விரட்டியடிப்பாங்க. இப்போ நிஜமாவே இன்ஜினீயரிங் படிச்சிட்டு வேலை கிடைக்காம திரியும்போது ‘நல்லவேலை அப்பவே நாம வீடுகட்டிட்டோம்’னு மனசைத் தேத்திக்கிடவா, இல்லை அப்பவே வருங்காலத்தில் உனக்கு வேலை கிடைக்காதுன்னு நம்ம இன்ஜினீயரிங் மூளைய ஓடஓட விரட்டுனவங்களை தீர்க்கதரிசின்னு நினைச்சி மனசுக்குள்ளேயே புழுங்கவானு அப்பப்போ நெஞ்சம் கொஞ்சம் எகிறி மிதிக்கும்.

* பல வீடுகளில் டாய்லெட் இல்லாம இருந்த காலத்தில், செப்டிக் டேங்க்னா என்னன்னே தெரியாத வயசுல, திண்ணை மாதிரி ஆங்காங்கே சில வீடுகளில் இருக்கிற செப்டிக் டேங்க்தான் ஆடல்பாடல் அரங்கேறும் கலையரங்கம். அங்கே நடந்த டான்ஸ் பெர்பார்மன்ஸையெல்லாம் இன்னிக்கு ஜோடியிலேயும் பார்க்க முடியாது... மானாட மயிலாடலையும் பார்க்கமுடியாது. ஒரே கூத்தா இருக்கும். 

* எந்த ஃப்ரெண்ட் வீட்டுல அப்பா அம்மா ரெண்டு பேரும் வேலைக்குப் போறாங்களோ அந்த வீடுதான் சகலத்துக்குமான சோதனைக்கூடம். ஒரு டிஷ்ஷும் பண்ணத் தெரியாதுன்னாலும் கடுகையும் சோம்பையும் அள்ளிக் கொட்டி தினுசு தினுசா சமையல் செய்து சட்டிச்சோறு கட்டியதும் சுவை அனுபவமே..!

* வீட்டுப்பாடம் கொடுக்கிறது டீச்சர் கடமைன்னா அதை விட்டுக்கொடுக்காம தட்டிக்கழிச்சது நம்ம பெருமை. சிலேட்ல எழுதிட்டு வரச்சொன்னா பேக் உள்ளே வெச்சு, பள்ளிக்கூடத்துக்குக் கொண்டு வரும்போது அழிஞ்சதாவும், நோட்ல எழுதச்சொன்னா தம்பிப்பாப்பா கிழிச்சிட்டதாவும் கப்சா விட்டது கதகத சமாளிப்பு.

* சாக்குபோக்குச் சொல்லி, கோக்குமாக்கு பண்ணி டீச்சரைக் குழப்பி, திட்டமிடாம செய்த திகுதிகு சேட்டைகள் தித்திக்கும் ஞாபகமே...டியூசன் என்றால் படிக்க மட்டுமில்லை. காதலுக்கு தூதுபோதல், வீட்டுவேலைகளுக்கு ஒத்தாசை செய்தல், குழந்தைகளைப் பராமரித்தல், கடைகளுக்குப் போய்வருதல்னு எக்கச்சக்கமா சில்லறை வேலை பார்த்து டிமிக்கி கொடுத்தது தாறுமாறுன்னா, இதெல்லாம் வீட்டுக்கு தெரியவரும்போது அப்பாவும், அம்மாவும் ரவுண்ட் கட்டி வெளுப்பாங்களே... அப்போ வெளிப்படுறது தக்காளிச்சோறுதான். என்ன ஒண்ணு, எத்திக்கும் கொஞ்சம் ரத்தம் வெளிப்படும். சண்டையில கிழியாத சட்டையா..?

- வெ.வித்யா காயத்ரி
மாணவப் பத்திரிகையாளர்.

அடுத்த கட்டுரைக்கு