Published:Updated:

"இனி பல்கலைக்கழகங்களிலும் ஒலிக்கும் பறை!’’ பட்டயப்படிப்பான பறையாட்டக் கலை

ஐஷ்வர்யா
"இனி பல்கலைக்கழகங்களிலும் ஒலிக்கும்  பறை!’’  பட்டயப்படிப்பான பறையாட்டக் கலை
"இனி பல்கலைக்கழகங்களிலும் ஒலிக்கும் பறை!’’ பட்டயப்படிப்பான பறையாட்டக் கலை

தி மனிதனுக்கு மொழிகள் இருந்ததில்லை. அக்காலத்தில் சொற்களும் இருந்ததில்லை. அவர்களுக்கு வயிற்றுப்பசிக்காக வேட்டையாடத் தெரிந்திருந்தது. வேட்டையாடிய விலங்குகளை சாப்பிட்டு, அதன் தோலினை மிச்சப்படுத்தி ஆடையாக்கிக் கொண்டார்கள். மரக்கிளைகளில் உலர்த்தப்பட்ட தோலில் குச்சிகள் உரச அதிலிருந்து ஓசை உண்டானது. அதுதான் பின்னாளில் தமிழர்களின் ஆதித் தாளக்கருவியான பறையாக பரிமாணம் எடுத்தது. பறை அடித்து மக்களை ஒன்று கூட்டவும், செய்தி அறிவிக்கவும், பழங்காலத்தில் இந்தக் கருவி பயன்பட்டு வந்தது. நாளடைவில் அப்படிச் செய்தி அறிவித்தவர்கள் மட்டுமே அதனை கையில் ஏந்தி வாசிக்க வேண்டும் என்று சமூக ரீதியாக இந்தக் கருவி ஒடுக்கப்பட்டது. சமூகத்திற்காகவும் மக்களின் கொண்டாட்ட மனநிலைக்காகவும் வாசிக்கப்பட்ட கருவி, நாளடைவில் இறப்புக்கான இசைக்கருவி மட்டுமே என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டது. தொழில் கொண்டு மக்கள் பிரிக்கப்பட்டது போய், இசைக் கலை கொண்டும் மக்கள் பிரிக்கப்பட்டார்கள்.

பறை இசை என்பது அனைத்து மக்களுக்குமானது, குறிப்பிட்ட சமூகத்துக்கானது என்று ஒதுக்குவது கலை மீதான தவறான கண்ணோட்டம். பறை ஆதி தொடங்கி இசைக்கப்படும் உலகப் பொதுக் கருவி என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் அதனை மீட்டுக் கொண்டுவர பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் இருக்கும் பல்வேறு தமிழ் இசைக் குழுக்கள், சாவுக்கான இசைக்கருவி பறை என்பதை உடைத்து, அது வாழ்வுக்கானது என்று விழாக்கள், சமூக நிகழ்வுகள், பொது இடங்கள் என பல்வேறு தளங்களுக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக மக்களும் தங்களது விழாக்களில் முக்கிய அடையாளமாக பறையை முன்னிறுத்தி வருகிறார்கள். அரசும் அதற்கு ஆதரவு அளித்து வருகிறது. பல இசைக்கருவிகளுடன் பறையும் இணைந்து உருவாகும் ஆல்பங்கள் என சர்வதேச அளவிலும், ஜல்லிக்கட்டு, நெடுவாசல் போராட்டம் என சமூக அளவிலும் மற்ற எந்த கருவிக்கும் இல்லாத சிறப்பாக சமூகத்தின் அனைத்து எல்லைகளையும் தொடும் வகையில் பறையாட்டத்திற்கான தனிச்சிறப்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில், மீட்டெடுக்கப்பட்டுவரும் பறை இசைக்கு கல்வி உருவாக்கம் கொடுக்கும் வகையில், நிமிர்வு கலையகம் மற்றும் அதன் பறை இசைப் பள்ளி செயல்பட்டு வருகின்றது. மற்ற எல்லா இசைக்கருவிகளுக்கும் இருப்பது போலவே பறையிசைக்கு என்று தனியாக இசைக்குறிப்புகள் வடிவம் கொடுத்து, மக்கள் அனைவரும் எளிய முறையில் பறை இசையைக் கற்றுக்கொள்ள வழிவகை செய்து வருகின்றனர் கலையகத்தினர். இதன் அடுத்தகட்டமாக பாரதியார் பல்கலைக்கழகம், தற்போது நிமிர்வு கலையகத்தின் இசைக் குறிப்புகள் வரையறுக்கப்பட்ட பறையாட்டப் பயிற்சியை ஓராண்டு பட்டயப் படிப்பாக அறிவித்துள்ளது. பறையாட்டக் கல்விக்கான தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி. ஓராண்டின் முடிவில் கற்று முடித்ததற்கான பல்கலைக்கழகச் சான்றிதழ் வழங்கப்படும். பறை இசைக்கு என தனியாக இசைக்குறிப்புகள் வரையறுக்கப்பட்டு அது பாடத்திட்டமாக அறிவிக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது இதில் இருக்கும் கூடுதல் சிறப்பு. ஒடுக்கப்பட்டவர்களின் இசை, ஒடுக்கப்படும் இசை என்னும் தவறான கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கப்படும் பறையை, மக்கள் அனைவரிடமும் கொண்டுசேர்க்கும் வகையிலான அடுத்தகட்ட நகர்வு இது. பறையால் இணைவோம்!

தொடர்புக்கு: +91 96592 77222, +91 95244 03311

-ஐஷ்வர்யா