Published:Updated:

கால் போனால் என்னங்க? நம்பிக்கை இருக்குல்ல... நாய்க்குட்டி பற்றி நெகிழும் சென்னை தம்பதி!

கால் போனால் என்னங்க? நம்பிக்கை இருக்குல்ல... நாய்க்குட்டி பற்றி நெகிழும் சென்னை தம்பதி!
கால் போனால் என்னங்க? நம்பிக்கை இருக்குல்ல... நாய்க்குட்டி பற்றி நெகிழும் சென்னை தம்பதி!

தினமும் அதிகாலையில் மெரினா கடற்கரையில் வாக்கிங் செல்கிற ரிஷியைப் பின்தொடரவும் ரசிக்கவுமே ஒரு கூட்டம் சேர்கிறது. ரிஷியினால் கிடைக்கிற பிஸ்கட்டை சாப்பிட்டு வந்த வழியே திரும்பிப் போகாமல், அவன் நடப்பதை ரசித்தபடி நகராமல் இருக்கின்றன மெரினா நாய்ஸ். 

''ரிஷி கம்பீரமா வாக்கிங் பண்றதைப் பார்த்தவங்களுக்கு அவன் இப்ப சக்கரவண்டி உதவியோட வாக்கிங் பண்றது வித்தியாசமா இருக்கு. ரிஷிக்கு அதைப் பத்தியெல்லாம் கவலையே இல்லை. தன்னால மறுபடி நடக்க முடியுதுங்கிறதுல அவனுக்கு அப்படியோர் சந்தோஷம்..'' 

வாஞ்சையுடன் ரிஷியின் தலைகோதியபடி சொல்கிறார்கள் சரஸ்வதியும், மாரிமுத்துவும்.

ரிஷி, ஆஸ்திரேலியன் டெரியர் இன நாய்க்குட்டி. தன்னம்பிக்கையின் அடையாளம்! 

''எங்களுக்கு ரெண்டு பசங்க. ஒருத்தன் கனடாவுல இருக்கான். இன்னொருத்தன் பெங்களூருல. ரிஷி எங்களுக்கு மூணாவது பையன். அவனுக்கு இப்ப 12 வயசு. மதுரையில எங்கம்மா வீட்லேருந்து தூக்கிட்டு வந்தோம். ரிஷிதான் எங்களுக்கு ஒரே துணை. காலையில தினமும் நாங்க ரெண்டு பேரும் பீச்சுல வாக்கிங் போவோம். ரிஷிக்கு ரெண்டு வயசிருக்கும்போதிலிருந்தே அவனையும் எங்ககூடவே வாக்கிங் கூட்டிட்டுப் போய் பழக்கிட்டோம். அண்ணா சமாதியிலேருந்து லைட் ஹவுஸ் வரைக்கும் கம்பீரமா நடப்பான். கடற்கரை ஓரம் திரிஞ்சிட்டிருக்கிற தெரு நாய்களுக்கு நாங்க பிஸ்கெட் போடுவாம். பொறாமைப்படாம அதை சந்தோஷமா ரசிச்சபடியே நடப்பான்.''

ரிஷியின் பெருமையை விவரிக்கும்போது, பெற்ற பிள்ளையின் பெருமை பேசுவதைப்போன்று சரஸ்வதியின் முகத்தில் பொங்கி வழிகிறது பெருமிதம். 

''திடீர்னு ஒரு வருஷத்துக்கு முன்னாடி ரிஷியோட நடை ஸ்லோவாச்சு. அவன்கிட்ட முன்ன இருந்த உற்சாகம் இல்லை. டாக்டர்கிட்ட காட்டினோம். நிறைய மருந்துகள், ஊசிகள் கொடுத்தும் சரியாகலை. ஒரு கட்டத்துல, பின் கால்கள் இரண்டும் பலமிழந்துபோய், ரிஷியால நிற்கவும், நடக்கவும் முடியாமப் போயிருச்சு. பல டாக்டர்களைப் பார்த்துட்டுக் கடைசியா கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனோம். அங்கதான் ரிஷியோட முதுகுப்பகுதியில எல் 6, எல் 7 எலும்புகள் தேய்ஞ்சு போனதைக் கண்டுபிடிச்சவங்க ஒண்ணும் பண்ண முடியாதுன்னும் சொல்லிட்டாங்க. நாட்டு நாயா இருந்திருந்தாகூட ஆபரேஷன் பண்ணிடலாம். இது வெளிநாட்டு நாய் என்பதால அதுவும் சாத்தியமில்லைனு சொல்லிட்டாங்க...'' 

துணி மாதிரி துவண்டு கிடக்கும் ரிஷியின் கால்களைத் தடவிக் கொடுத்தபடியே விவரிக்கிறார் மாரிமுத்து.  வணிகவரித்துறையில் டெபுடி கமிஷனராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் இவர். 

''தினமும் பீச்சுல ஜம்முனு நடந்திட்டிருந்தவன், திடீர்னு நடக்க முடியாம முடங்கிப் போனதும் அதை அவனால அத்தனை சீக்கிரத்துல ஜீரணிக்க முடியலைனு எங்களுக்குத் தெரிஞ்சது.  அவன் மனசு கஷ்டப்படக்கூடாதுனு அந்த நிலைமையிலேயும் பீச்சுக்குக் கூட்டிட்டு வருவோம். பின்னங்கால் ரெண்டும் துணி மாதிரி ஆயிடுச்சு. அதனால ஒரு டவல் வச்சு அவனைத் தூக்கிட்டு வந்து பீச்சுல உட்கார வைப்போம். ரெண்டுபேர்ல யாராவது ஒருத்தர் அவன்கூடவே இருப்போம். இன்னொருத்தர் நடந்துட்டு வருவோம். அப்பல்லாம் ரிஷி எங்களை ஒரு பார்வை பார்ப்பான். 'என்னால நடக்க முடியாமப் போயிடுச்சே... இனி நான் நடக்கவே மாட்டேனா'ங்கிற மாதிரி இருக்கும். டவல் வச்சுத் தூக்கும்போது அவனுக்கு வயிறு வலிக்கும். அந்த வலி அவன் கண்கள்ல தெரியும். அவனுக்கு ஏதாவது செய்து நடக்க வச்சிட முடியாதானு தவிச்சோம். எத்தனையோ டாக்டர்ஸை கேட்டோம். இன்டர்நெட்டுல தேடினோம். ஒருவழியும் கிடைக்கலை. 

வேப்பேரி ஆஸ்பத்திரிக்கு ரிஷியைக் கூட்டிட்டுப் போயிருந்தபோது, அங்கே சுவர்ல ஒரு சைக்கிள் ஃபோட்டோவைப் பார்த்தோம். அது நடக்க முடியாத செல்லப் பிராணிகளுக்கானதுனு தெரிஞ்சது. அதைப் பத்தி விசாரிச்சபோது அவங்களுக்கே தகவல் தெரியலை. அப்புறம் ரிஷியை வழக்கமா காட்டற வெட்டினரி டாக்டர் ஸ்ரீகுமார்கிட்ட கூட்டிட்டுப் போய் அந்த சைக்கிளைப் பத்திக் கேட்டோம். உடனே அவர் டெல்லி ஐஐடியில படிச்ச மெக்கானிக்கல் இன்ஜினியர் ககரின் சிங் என்பவரைத் தொடர்பு கொண்டு  அந்த சைக்கிளை வரவழைச்சுக் கொடுத்தார்.  சிங், எலிகள்லேருந்து யானை வரைக்கும் எல்லா உயிரினங்களுக்கும் இப்படி செயற்கைக் கருவிகள் தயாரிக்கிறதுல எக்ஸ்பர்ட். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டு நாய்க்குக் கூட ஒருமுறை இப்படியொரு சைக்கிளை ரெடி பண்ணிக் கொடுத்திருக்காராம். 

ரிஷியோட உயரம், எடை எல்லாத்தையும் சொல்லி, ஸ்பெஷலா இந்த சைக்கிளை ஆர்டர் பண்ணிக் கொடுத்தார்.  வெயிட் இல்லாத பிளேன் மெட்டீரியல்ல செய்தது. விலை பதினேழாயிரம் ரூபாய். நாங்க பணத்தைப் பத்தியெல்லாம் யோசிக்கலை. இந்த சைக்கிள் செட் ஆகுமா, ரிஷியால அதுக்குப் பழக முடியுமான்னெல்லாம் நாங்க நினைக்கலை. ட்ரை பண்ணிப் பார்ப்போம்னு நினைச்சோம். சைக்கிளைக் கொண்டு வந்து வச்சு, அதுல அவனைத் தூக்கி உட்கார வச்சதும், அத்தனை நாள் அவன் அடக்கி வச்சிருந்த துக்கமெல்லாம் தீரும்படி துள்ளிக் குதிச்சு ஓடினான்...'' 

காரின் பின் சீட்டில் படுத்திருக்கும் ரிஷியை கைத்தாங்கலாகத் தூக்கி வந்து, சற்றே சிரமப்பட்டு சக்கரவண்டியில் (சைக்கிள்னு சொல்லலாமா?) உட்கார வைக்கிறார்கள். நடைவண்டியில் தத்தி ஓடும் குழந்தையின் குதூகலத்துடன் ஓடத் தயாராகிறான் ரிஷி.

''இப்படியொரு நாய் தேவையானு கேட்கறவங்களும், எங்க வீட்டுக்கு வரவே யோசிக்கிறவங்களுக்கும் இருக்காங்க. எங்கே கல்யாணம், விசேஷத்துக்குப் போனாலும் ரிஷி இல்லாமப் போனதில்லை. முடியாத சந்தர்ப்பத்துல ரெண்டு பேருல யாராவது ஒருத்தர் ரிஷிக்குக் காவலா வீட்டுல இருப்போம். ரிஷிதான் எங்க உலகம். ஒரு பையன் கனடாவுல இருக்கான். இன்னொரு பையன் இருக்கிற பெங்களூரு வீட்டுல நாயை அனுமதிக்க மாட்டாங்க. அதனால ரெண்டு பேர் வீடுகளுக்கும் நாங்க போறதே இல்லை. அவங்க வந்து எங்க மூணு பேரையும் பார்த்துட்டுப் போவாங்க.

ரிஷியால பேச முடியாம இருக்கலாம். ஆனா அவனால உணர்வுகளை அழகா வெளிப்படுத்த முடியும். நாமப் பேசறது எல்லாம் அவனுக்குப் புரியும்.  வீட்டுக்கு வர்றவங்க எல்லாரும் ஒரேமாதிரி மனநிலையில இருப்பாங்கனு சொல்ல முடியாது. சிலர் எங்க மேல பரிதாபப்பட்டுக்கிட்டு, 'எதுக்கு இப்படி வச்சிருக்கீங்க... ஊசி போட்டுக் கொன்னுட வேண்டியதுதானே'னு கேட்பாங்க. வெளியூருக்குக் கூட்டிட்டுப் போகும்போது, 'எதுக்கு இவ்வளவு தூரம் தூக்கிட்டு வந்தீங்க... வர்ற வழியிலயே தூக்கி வீசிட்டு வந்துட வேண்டியதுதானே'னு கேட்பாங்க. அப்பல்லாம் ரிஷி, 'என்னைக் கொன்னுடுவீங்களா'னு கண்ணாலயே கேட்பான். நாம பெத்த குழந்தையா இருந்தா அப்படித் தூக்கி வீசிடுவோமா? 

நாங்க எங்க இருந்தாலும் எங்ககூட ரிஷியும் இருப்பான். அவனை நாய்னு சொல்லாதீங்க.. ஒரு உயிரா பாருங்க. முடிஞ்சா அவனுக்குக் கேட்கற மாதிரி நாலு வார்த்தை பாசிட்டிவா பேசிட்டுப் போங்கனு சொல்லிடுவோம். அவன் வாழணும்னு ஆசைப்படறான். அவனோட தன்னம்பிக்கைக்கு ஏதோ எங்களால முடிஞ்ச சின்ன விஷயம்...'' 

நடை பழகும் குழந்தையை ரசிக்கிற பெற்றோரின் மனோபாவத்துடன் ரிஷியையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இருவரும்.

தன்னைக் கவனிக்கிறவர்களைப் பெருமையுடன் பார்த்தபடி இன்னும் வேகமாக நடக்கிறான் ரிஷி.

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதப் பாசம் அல்ல!

- ஆர்.வைதேகி

படங்கள்: மீ.நிவேதன்