Published:Updated:

காதல் மனைவியுடன் காரில் எரிந்த அஷ்வின் சுந்தர்.. என்ன நடந்தது?

காதல் மனைவியுடன் காரில் எரிந்த அஷ்வின் சுந்தர்.. என்ன நடந்தது?
காதல் மனைவியுடன் காரில் எரிந்த அஷ்வின் சுந்தர்.. என்ன நடந்தது?

‘‘ஹலோ... குட்மார்னிங்!’’
‘‘ஸாரி.. பேட் மார்னிங்!’’
‘‘என்னாச்சு?’’
‘‘அஷ்வின் கார் ஃபயர் ஆக்ஸிடென்ட்!’’

- இப்படித்தான் இன்று அதிகாலை ஆரம்பித்தது. 3.30 மணி இருக்கும்; பதறியடித்து நாம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றபோது, இந்தியாவின் பிரபல ரேஸ் வீரர் அஷ்வின் சுந்தரின் பிஎம்டபிள்யூ Z4 கார், உருக்குலைந்து கிடந்தது. அஷ்வினும் அவர் மனைவியும் சம்பவ இடத்திலேயே எரிந்து போயிருந்தனர். 

காதல் மனைவியுடன் காரில் எரிந்த அஷ்வின் சுந்தர்.. என்ன நடந்தது?

இறந்து போன அஷ்வினைப் பற்றி யாரிடம் கேட்டாலும், ‘ரொம்ப நல்ல மனுஷன்’ என்ற வார்த்தைகள் நிச்சயம் வரும். வீட்டுக்கு ஒரே பையனான அஷ்வினின் அப்பா, ஒரு சிமென்ட் கான்ட்ராக்டர். ரேஸ் என்றால் கொள்ளைப் பிரியம். ஆரம்பத்தில் பைக் ரேஸில் கால் பதித்த அஷ்வின், படிப்படியாக கார் ரேஸராக உயர்ந்து ஃபோக்ஸ்வாகனின் ஆஸ்தான ரேஸராக அவதாரம் எடுத்ததற்குப் பின்னால் இருக்கும் உழைப்பை சாதாரணமாக கடந்துவிட முடியாது. 

அரசியல் நிறைந்த ரேஸ் உலகத்தில், அரசியல் பண்ணாத ஒரே ரேஸர் என்று அஷ்வினைச் சொல்லலாம். ‘அண்ணா, எனக்கு ரேஸ் ஓட்டணும்னு ஆசை; என்ன பண்ணணும்’ என்று யாராவது தன்னைத் தேடி வந்தால், சீரியஸாகவே அவரை ரேஸர் ஆக்கும் முயற்சிகளில் இறங்கி, பாடம் எடுக்க ஆரம்பித்து விடுவார் அஷ்வின். இப்படி அஷ்வினால் உருவான ரேஸர்கள் எக்கச்சக்கம். மோட்டார் விகடன் சார்பில் ரேஸ் முகாம் நடத்தியபோது, முக்கிய விருந்தினராகக் கலந்துகொண்டு பல ரேஸர்களை உருவாக்கிய பெருமை அஷ்வினுக்கு உண்டு.

‘‘ரேஸ் ஓட்டும்போது, உங்களுக்கு எல்லாமுமே தெரியும்னு நினைச்சுக்காதீங்க. அதாவது, உங்களை நீங்க மெக்கானிக்கா நினைச்சுக்காதீங்க! ஒருவேளை இதனாலதான் பைக் நின்னுருக்குமோ... இதனாலதான் பிரேக் பிடிக்காமப் போயிருக்குமோனு நினைச்சுக் குழம்புறது தப்பு! சமையல்காரர் சமைக்கிற வேலையை மட்டும்தான் பார்க்கணும்; சப்ளை பண்றவர் சப்ளை பண்ற வேலையை மட்டும்தான் பார்க்கணும். நீங்க ரேஸர்... நீங்க வெறும் ரேஸ் ஓட்டுற வேலையை மட்டும்தான் பார்க்கணும்! பைக்/கார் பிரச்னையை ட்யூனர் பார்த்துப்பார்!’’ என்பதுதான் அஷ்வின் எல்லோருக்கும் சொல்லும் முக்கியமான அட்வைஸ்.

சாதாரண ரேஸர்களுக்கே வழிகாட்டுவார் என்றால், அல்டிமேட் ஸ்டாரே டிப்ஸ் கேட்டால் சும்மாவா விடுவார் அஷ்வின்? ஆம்! ‘தல’ அஜீத்தின் ஃபேவரைட் ரேஸர்கள் நரேனும் அஷ்வினும்தான். ‘‘அஷ்வின், கார்னரிங்ல திணறுதே... டிரிஃப்ட்டிங்கில் ஹேண்ட் பிரேக் யூஸ் பண்ணணுமா வேண்டாமா?’’ என்று திடீர் திடீரென போன் பண்ணி டிப்ஸ் கேட்பாராம் அஜீத்குமார். ஃபார்முலா பிஎம்டபிள்யூ கார் ரேஸில் கலந்துகொண்டு விட்டு, 12-வது இடம் பிடித்து வந்த அஜீத், அஷ்வினுக்கு போன் பண்ணி, ‘‘சொதப்பிடுச்சு அஷ்வின்’’ என்றபோது, ‘‘ஃபார்முலா ரேஸ்ல ஒரு நடிகர் கலந்துக்கிறதே பெரிய விஷயம். நீங்க பண்ணினது அச்சீவ்மென்ட்தான் தல!’’ என்று அஜீத்துக்கு ஆறுதல் சொன்னவர் அஷ்வின் சுந்தர். பெரும்பாலும் இருங்காட்டுக்கோட்டை ரேஸ் ட்ராக்கில் அஜீத்தையும் அஷ்வினையும் ஒன்றாகப் பார்க்கலாம். 

காதல் மனைவியுடன் காரில் எரிந்த அஷ்வின் சுந்தர்.. என்ன நடந்தது?

‘ஹெல்மெட் போட வேண்டும்; சீட் பெல்ட் அணிய வேண்டும்; ட்ராக்கைத் தவிர சாலைகளில் நோ ஸ்பீடு’ என்பதெல்லாம் அஷ்வினின் கொள்கைகள். அப்படிப்பட்ட அஷ்வின், சாலை விபத்தில் பலியாகி இருக்கிறார் என்றால், நம்பவே முடியாத விஷயம்தான். ரேஸ் ட்ராக் தவிர்த்து சாலையில் 'ஸ்பீடு த்ரில்ஸ்; பட் கில்ஸ்' என்பதில் அதீத நம்பிக்கை கொண்டவர். ஆனால், சம்பவத்தின்போது அவர் அதிவேகத்தில் கார் ஓட்டியதை நம்ப மறுக்கிறார்கள் அவரைப் பற்றித் தெரிந்தவர்கள். சென்ற ஆண்டு காதலர் தினத்தன்றுதான் அஷ்வினுக்குத் திருமணமானது. காதல் மனைவி நிவேதா வெளியுலகுக்கு அவ்வளவாகப் பரிச்சயம் கிடையாது. இலங்கையைச் சேர்ந்த நிவேதா, இந்த வருடம்தான் மருத்துவப் படிப்பை முடித்தார். அதைக் கொண்டாடும்விதமாக பாரிஸ் போக திட்டமிட்டிருந்தார்களாம்.  சம்பவத்தன்று இரவு பட்டினப்பாக்கத்தில் தனது பிஎம்டபிள்யூ Z4 காரில் ஹைஸ்பீடில் வந்தபோது, ஸ்பீடு பிரேக்கரில் ஏறிய பிஎம்டபிள்யூ கட்டுப்பாடு இழந்து, மரத்தின் மீது மோதியதில் கார் தீப்பிடித்து எரிந்திருக்கிறது.

ஸ்பாட்டில் இருந்தவர்கள், ‘‘மோதுன வேகத்துல கார் ‘டமார்’னு வெடிச்சு அடுத்த செகண்ட்லேயே எரிய ஆரம்பிச்சிடுங்க... பக்கத்துல போகவே முடியலை! கிட்டத்தட்ட ரொம்ப நேரம் கார் ‘தபதப’னு எரிஞ்சுக்கிட்டேதான் இருந்துச்சு!’’ என்று இன்னும் பதற்றம் குறையாமலே சொல்கிறார்கள். கிட்டத்தட்ட 80 லட்ச ரூபாய் விலைகொண்ட பிஎம்டபிள்யூ காரை, சில கார்ப்பரேஷன் ஊழியர்கள் கரித்தூள்களாக ட்ராலியில் அள்ளி எடுத்துக் கொண்டிருந்தனர்.

காதல் மனைவியுடன் காரில் எரிந்த அஷ்வின் சுந்தர்.. என்ன நடந்தது?

கார்கள் தீப்பிடித்து எரிவது என்பது மிகவும் அரிதான விஷயம். எலெக்ட்ரிக் கார் என்றால்கூட தீப்பிடிப்பதற்கு அதிகம் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அதிநவீன வசதிகள் கொண்ட பிஎம்டபிள்யூ Z4 கார் எப்படி எரிந்து சாம்பலாகும்? இதற்கு எலெக்ட்ரிக்கல் ஷார்ட் ஷர்க்யூட் முதற்கொண்டு ஏ.ஸி வரை பல காரணங்கள் இருக்கலாம். அஷ்வின் சுந்தரின் கார், ஒரு ரோட்ஸர் கூபே. அதாவது, கூரையை எலெக்ட்ரிக்கலாகத் திறந்து மூடும் வசதி கொண்ட கார். 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட இது, 0-100 கி.மீ வேகத்தை 5 விநாடிகளில் கடக்கும். ஸ்போர்ட்ஸ் கார் என்பதால், இதன் குறைவான கிரவுண்ட் கிளியரன்ஸும் இந்தக் கொடூர விபத்துக்குக் காரணமாக இருக்கலாம். அதிவேகமாக வந்து, வேகத்தைக் குறைக்காமல் ஸ்பீடு பிரேக்கரில் ஏறியிருக்கலாம். இதனால் கட்டுப்பாட்டை இழந்து, அதே வேகத்தில் எதிரே உள்ள மரத்தின் மீது மோதி, சுவருக்கும் மரத்துக்கும் நடுவே கார் சிக்கியிருக்கிறது. எனவே, மோதிய அதிர்ச்சியில் இருவரும் நினைவிழந்துபோய், கதவைத் திறக்க முடியாமல் உள்ளே இருவரும் லாக் ஆகிவிட்டதாகச் சொல்கிறார்கள். கார் எரிந்து கொண்டிருப்பதைக் கண்ணில் கண்ட சிலர் பேசவே திராணியற்று அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்ததைப் பார்க்க முடிந்தது.  

காதல் மனைவியுடன் காரில் எரிந்த அஷ்வின் சுந்தர்.. என்ன நடந்தது?

கிட்டத்தட்ட ஹாலிவுட் நடிகர் பால்வாக்கரின் போர்ஷே விபத்தைப்போலவே, அஷ்வின் சுந்தரின் கார் விபத்தும் சென்னையில் நடந்து கிலியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவின் புத்திசாலித்தனமான ஒரு ரேஸ் வீரரின் விபத்துச் செய்தி கேட்டு, மொத்த ரேஸ் உலகமும் பீதியுடன் இருக்கிறது.

- தமிழ் 
படம்: ஜெரோம்