Published:Updated:

சிட்டுக்குருவி தினம் உருவாக காரணமான முகமது திலாவர் யார்? #Mohammed Dilawar

சிட்டுக்குருவி தினம் உருவாக காரணமான முகமது திலாவர் யார்? #Mohammed Dilawar
சிட்டுக்குருவி தினம் உருவாக காரணமான முகமது திலாவர் யார்? #Mohammed Dilawar

சிட்டுக்குருவிகள்...  சின்னக்குருவிகள்; செல்லக் குருவிகள்.  அவை மனிதகுலத்துக்கு ஆற்றும் பணி அளப்பரியது. சீனாவில் நடந்த உண்மைச் சம்பவம் இது. 1950-களில் சீனாவில் ஆட்சிக்கு வந்த மாவோ Four pests campaign என்ற பெயரில் பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய நான்கு உயிர்களை அழிக்க உத்தரவிடுகிறார். அந்தப் பட்டியலில் சின்னஞ்சிறு சிட்டுக்குருவியும் இடம் பெற்றிருந்தது.  சின்னஞ்சிறிய பறவைகள் கொலை செய்யப்படுமளவுக்கு என்ன தப்பு செய்தன?. விளை நிலங்களில் தானியங்களைக் கொத்தித் தின்றதுதான் அந்தக் குருவிகள் செய்த தவறு. தானியங்கள்தான் அவற்றின் முக்கிய உணவு. புலி மானை அடித்துச் சாப்பிட்டால் தப்பா? பூனை, கருவாடு தின்னத்தானே செய்யும்?

மாவோவின் உத்தரவை அடுத்து சிட்டுக்குருவிகளை அழிக்க பெரும் படை கிளம்பியது. எந்தவிதமான இரக்கமும் காட்டாமல் கொன்று குவிக்கப்பட்டன குட்டிக் குட்டிக் குருவிகள். அதன் கூட்டை அழிப்பது, முட்டையை உடைப்பது என்று மனிதன் அத்தனைவிதமான இழி புத்தியையும் சிட்டுக்குருவி இனத்தின் மீது காட்டினான். சிட்டுக்குருவியை அழித்து விட்டால் போதும்; நாடு சுபிட்சம் அடைந்து விடும்; உணவு உற்பத்தி பெருகிவிடும் என்ற செய்தியை சீனர்கள் பரப்பிக் கொண்டிருந்தனர். கோடிக்கணக்கான சிட்டுக்குருவிகள் அழிந்து போயின. இரண்டு மூன்று ஆண்டுகள் கழிந்தன. நாட்டில் விளைச்சல் பாதியாகக் குறைந்தது. சீன அரசுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. சிட்டுக்குருவிகளின் முக்கிய உணவு புழுப் பூச்சிகள் மட்டுமல்ல; வெட்டுக்கிளிகள் போன்ற விளைச்சலைப் பாதிக்கும் பூச்சிகளும்தான். சிட்டுக்குருவிகள் அழிந்து போயின; அதனால் வெட்டுக்கிளிகள் பெருத்தன. 

பயிர்களை சகட்டுமேனிக்கு வெட்டுக்கிளிகள் அழித்தன. விளைச்சல் பாதித்தது. மக்கள் பசியால் வாடத் தொடங்கினர். போதாக்குறைக்கு மழையும் பொய்த்தது. நிலங்கள் வெடித்தன, பயிர்கள் வாடின. மக்கள் பட்டினியால் மடிந்தனர்.  சிட்டுக்குருவி இனத்தை அழித்ததற்கு சீனா கொடுத்த விலை... ஒன்றரை கோடி மனித உயிர்கள் (சீன அரசின் கணக்குப்படி). ஆனால் 3 கோடியே 60 லட்சம் பேர் வரை இறந்து போனதாக  "Tombstone' என்ற புத்தகத்தில் சீனப் பத்திரிகையாளர் யாங் ஜிஜெங் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புத்தகத்துக்கு தற்போது சீனா தடை விதித்துள்ளது. அந்தப் புத்தகத்தில் , சீன மக்கள் பட்டினி காரணமாக ஒருவரை ஒருவர் அடித்துக் கொன்று சாப்பிட்டதாகக்கூடச் சொல்லப்பட்டுள்ளது. மக்களை நரமாமிசம் புசிப்பவர்களாக மாற்றிய பின்தான், விழித்தது சீனா. 

வெட்டுக்கிளிகள் , பூச்சிகள் பெருக சிட்டுக்குருவிகள் மடிந்ததுதான் காரணம் என்பதை சீனா தாமதமாக உணர்ந்தது. உடனடியாக அந்தப் பட்டியலில் இருந்து  சிட்டுக்குருவியின் பெயர் நீக்கப்பட்டது. இப்போது  சிட்டுக்குருவியைக் காக்க பெரும் படை புறப்பட்டது. சீனா சுபிட்சமடைந்தது. சின்னக்குருவிதான். ஆனால், அது அழிந்தால் மனித இனத்துக்கும் அழிவு வரும். என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் உதாரணம். 

இந்தியாவில் சிட்டுக்குருவிகளின் முக்கியத்துவம் குறித்து இப்போது பெரும் விழிப்புஉணர்வு ஏற்பட்டிருக்கிறது. இளைஞர்கள் அவற்றைப் பாதுகாக்க பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர். சிட்டுக்குருவி குறித்து இந்தியாவில்  விழிப்புஉணர்வை ஏற்படுத்தியவர் நாசிக்கைச் சேர்ந்த முகமது திலாவர். கல்லூரிப் பேராசிரியரான இவர், சிட்டுக்குருவிகளைப் பாதுகாப்பதற்காக ''Nature forever society ''என்ற அமைப்பைத் தொடங்கினார்.

பழைய காலத்தில் நமது முன்னோர்கள் ஓட்டு வீடுகளில் வாழ்ந்தனர். ஓட்டு வீடுகளின் அமைப்பு கூடு கட்டி வாழத் தெரியாத சிட்டுக்குருவிகள் வசிப்பதற்கு ஏற்ற வகையில் இருந்தது. பொந்துகளில் கொஞ்சம் வைக்கோல் இருந்தால் போதும்; அதில் வசிக்க ஆரம்பிக்கும் பறவை இனம் சிட்டுக்குருவி. நகரத்தின்  நவீனக் கட்டடங்கள் சிட்டுக்குருவிகள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் இல்லை. ஆனால்,  மண்ணுக்கு எப்படி புழு தேவையோ... காட்டுக்கு எப்படி புலி தேவையோ... அப்படி மனிதனுக்கும் சிட்டுக்குருவி தேவை. 

இதை உணர்ந்து கொண்ட முகமது திலாவர்தான் முதலில் சிட்டுக்குருவிகள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கினார். உலகம் முழுக்க 52 ஆயிரம் இடங்களில் சிட்டுக்குருவிகள் வசிப்பதற்கான வாழ்விடங்கள், உணவிடங்கள் ஏற்படுத்தப்பட்டன. சிட்டுக்குருவிகளுக்கு என்று ஒரு தினம் வேண்டுமென்றும் ஐ.நா. அமைப்பிடம் கோரிக்கை விடுத்தார். முகமதுவின் கோரிக்கையில் இருக்கும் உண்மையை உணர்ந்த ஐ.நா. சிட்டுக்குருவிகளைக் காப்பதன் அவசியம் கருதி, கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதியை சிட்டுக்குருவி தினமாக அறிவித்தது. டெல்லி மாநில அரசு, கடந்த 2012-ம் ஆண்டு சிட்டுக்குருவியை டெல்லி மாநிலப் பறவையாக அறிவித்தது.  கடந்த 2008-ம் ஆண்டு டைம் இதழ் "Heroes of the Environment'' விருதை முகமதுவுக்கு வழங்கியது. உலகின் தலைசிறந்த 30 சுற்றுச் சூழலியலாளர்களில் இவரும் ஒருவர். 

- எம்.குமரேசன்