Published:Updated:

சசிகலாவுக்கு கேமரா, பன்னீர்செல்வத்துக்கு சூது கவ்வும் போஸ்டர்! - ரகளை சின்னங்கள்

சசிகலாவுக்கு கேமரா, பன்னீர்செல்வத்துக்கு சூது கவ்வும் போஸ்டர்! - ரகளை சின்னங்கள்
சசிகலாவுக்கு கேமரா, பன்னீர்செல்வத்துக்கு சூது கவ்வும் போஸ்டர்! - ரகளை சின்னங்கள்

ஒரு மாதமாக இழுத்தடித்த பஞ்சாயத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது தேர்தல் ஆணையம். ஒருபக்கம் சசிகலா தரப்பிற்கு 'தொப்பி, தொப்பி' என மீம்ஸ்கள் பறக்க, மறுபக்கம், 'ரெண்டு இலைக்கு பதில் ரெண்டு லைட்டு' என மனசைத் தேற்றிக்கொள்கிறது பன்னீர்செல்வம் தரப்பு. ஆக, இரண்டு கோஷ்டிகளுக்குமே சந்தோஷம் இல்லை. அப்படி என்ன சின்னம் கொடுத்தால் இவர்கள் ஹேப்பியாவார்கள் என யோசித்ததன் விளைவுதான் இது. முதலில் சாஷ்டாங்கமாய் சின்னம்மாவில் இருந்து ஆரம்பிப்போம்.  

கேமரா :

அதுநாள்வரை சசிகலாவின் குரல்கூட யாரும் கேட்டதில்லை. டிசம்பர் நடுவில் பொதுக்கூட்டத்தில் முழங்கத் தொடங்கிய அந்த சிங்கம் (என்ன சிரிப்பு?) பிப்ரவரி வரை கேப் விடாமல் கேமரா முன் கர்ஜித்துக்கொண்டே இருந்தது. அதிலும் நடுராத்திரி விரல் அபிநயத்தோடு அவர் சொன்ன 'பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும்' டயலாக் செம வைரல். இப்படி கேமராவால் பட்டிதொட்டி எங்கும் புகழ்பெற்ற சின்னம்மாவின் ஆசி பெற்ற டி.டிவி தினகரனுக்கு அந்தச் சின்னத்தைத் தந்தால் பொருத்தமாகத்தானே இருக்கும்?

சொகுசு விடுதி :

அ.தி.மு.க, சசிகலா மட்டுமல்ல, தமிழ்நாட்டின் தலைவிதியே ஒரு சொகுசு விடுதியில் தீர்மானிக்கப்பட்டது. 'உள்ள யாருல்லாம் இருக்கா? என்ன நடக்குது? எத்தனை பேர் இருக்கா?' என இந்தியாவையே கிறுகிறுக்க வைத்த மர்மதேசம். அத்தனை ஆக்‌ஷன் ப்ளாக்குகளையும் தாண்டி சட்டசபையில் சசிகலா அண்ட் கோ ஜெயிக்க உதவியாய் இருந்தது அந்த சொகுசு விடுதிதான். எனவே அதையே அண்ணன் தினகரனுக்கு ஒதுக்குமாறு தாழ்மையோடு கேட்டுக்கொண்டு...!

சபதம் செய்யும் கை :

ஒரு காலத்தில் கை என்றாலே காங்கிரஸ் நினைவிற்கு வரும். அதன்பின் அடிக்கடி முஷ்டி உயர்த்தி ஹைபிட்சில் அலறும் சீமான் நினைவுக்கு வருவார். ஆனால் பிப்ரவரியில் இருந்து காட்சியே மாறிவிட்டது. ஜெயலலிதா சமாதியில் சசிகலா சபதம் செய்த சத்தம் கேட்டு சர்வதேச மீடியாக்களும், 'யாரு சாமி இது?' எனத் திரும்பிப் பார்த்தன. சசிகலாவும் அவரின் கூட்டாளிகளும் உலக அளவில் ட்ரெண்டானார்கள். சின்னம்மாவை உலக அளவில் உயர்த்திய சபதக் கையையே சின்னமாக வைத்தால் வெற்றி குபுக்கென கூரையைப் பிய்த்துக்கொண்டு குதிக்கும். 

அடுத்து பன்னீர்செல்வம் அண்ட் கோவிற்கு சில பரிந்துரைகள் !

கடற்கரை :

கடந்த ஆண்டுவரை காற்று வாங்குவதற்கு மட்டுமே பயன்பட்ட கடற்கரை இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே பிரேக்கிங் நியூஸ்களில் அடிபடுகிறது. அதுவும் தஞ்சாவூர் கல்வெட்டில் இடம்பெறக்கூடிய சிறப்பு வாய்ந்த 'பன்னீர்செல்வம் ட்ரான்ஸ்ஃபர்மேஷன்' நடந்த இடம் மெரினாதான். 'என்னது இவருக்கு கோவம் எல்லாம் வருமா?' என மொத்த தமிழ் சமூகத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஓ.பி.எஸ் கோஷ்டிக்கு இந்தச் சின்னத்தை பரிந்துரை செய்கிறோம்.

டூத்பேஸ்ட் :

ஜெயலலிதா இருந்தவரை, கத்திரி வெயிலில் வெண்பொங்கல் சாப்பிட்டுவிட்டு ஜீரணமாகாமல் முழிக்கும் பெரியவர் வேஷம்தான் பன்னீருக்கு. அவருக்கு சிரிக்கத் தெரியும் என்பதையே சில வாரங்களுக்கு முன்தான் கண்டுகொண்டார்கள் தமிழக மக்கள். அதுவும் அந்த பளீர் சிரிப்பு - மெரினா போராட்டக்காரர்களை அடித்து விரட்டி ஆண்டனி ரகுவரனாக இருந்த ஓ.பி.எஸ் அந்த சிரிப்பிற்குப் அப்புறம் 'பச்சக்குழந்தை சிரிப்பை பாரு' பாட்ஷா பாய் ஆனார். எனவே பளீர் சிரிப்பிற்கு காரணமான பற்பசை சின்னத்தை அன்னாருக்கு ஒதுக்குமாறு...!

'சூது கவ்வும்' போஸ்டர் :

முதல் இரண்டு நாட்கள் ஓ.பி.எஸ் குழுவின் பேட்டிகள் சுவாரசியமாகத்தான் இருந்தன. அதன்பின் நடந்த பேட்டிகளின் ஸ்கிரிப்ட்டை கிண்டர்கார்டன் குழந்தைகள்கூட சொல்லிவிடும். தொடக்கத்திலும், முடிவிலும் அம்மா நாமம், ஒன்றிரண்டு இடங்களில் சசிகலாவின் துரோகம், மிச்ச இடங்களில் எல்லாம் 'சூது கவ்வும், மறுபடியும் நாங்க அதைக் கவ்வுவோம்' என்பதுதான் அந்த ஸ்கிரிப்ட். இப்படி மானாவாரியாய் கவ்விய பன்னீர் அண்ட் கோவிற்கு 'சூது கவ்வும்' பட போஸ்டரை விட பெஸ்ட் சின்னம் என்ன இருக்கமுடியும்? ஆகவே ஆவண செய்யுங்கள் யுவர் ஆனர்!

நித்திஷ்