Election bannerElection banner
Published:Updated:

என் ஊர்!

மெட்ராஸ் டு சென்னை!

##~##

''என் சொந்த ஊர் இது இல்லை... நிச்சயம் உங்களுக்கும் இது சொந்த ஊராக இருக்க முடி யாது. ஆனால், இந்த ஊருக்கு வருபவர் எவருக்கும் பிரியவே முடியாத ஊராக இது மாறிவிடும். அதுதான் சென்னையின் சிறப்பு!''

 - சென்னை தன்னை வசீகரித்து இழுத்த கதையைச் சிலாகித்துக் கூறத் தொடங்கினார் எஸ்.முத்தையா. சென்னையின் வரலாறு சொல்லும் 'மெட்ராஸ் டிஸ்கவர்டு’ எனும் நூலின் ஆசிரியர்!

''என் பூர்வீகம் கானாடுகாத்தான். செட்டிநாட்டுக்காரன் நான். ஆனா, இளமைக் காலம் முழுக்க இலங்கையில் கழிந்தது. என் தந்தையார் சுப்பையா கொழும்பில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்தார். தவிர, இலங்கைத் தமிழர்கள் மத்தியில் செல்வாக்கு உள்ள தலைவராகவும் இருந்தார். 'சிலோன் இந்தியன் காங்கிரஸ்’ அமைப்பை உருவாக்கியவர் அவர். கொழும்பு மாநகரத்துணை மேயராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

என் ஊர்!

சென்னையில் அப்போது எங்கள் உறவினர்கள் நிறையப் பேர் இருந்தார்கள். விடுமுறை நாட்களில் சென்னைக்கு அவர்கள் வீட்டுக்கு வருவேன். அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தட்டுப்படும் ஜட்கா வண்டிகளைப் பார்த்தவாறு டிராம் வண்டியில் பயணிப்பதும் ஊர் சுற்றிப் பார்ப்பதும் பெரும் பொழுதுபோக்காக இருந் தது. அப்போது தொடங்கி, வருஷத்துக்கு ஒரு முறையேனும் சென்னை வந்து தங்கிச் செல்வது வழக்கமானது.

என் ஊர்!

1968-ல் ஜெர்மனியர்களான 'மேப்சன் அட்லஸஸ்’ நிறுவனத்தினர் 'டி.டி.கே.’-வுடன் சேர்ந்து பல்லாவரத்தில் ஒரு பதிப்பகத்தைத் தொடங்கினார்கள். அட்லஸ், மேப் பதிப்பிக்கும் நிறுவனம் அது. எனது சுற்றுலா இதழியல் அனுபவம், அந்த நிறுவனத்தின் பொறுப்பாளர் பதவியை எனக்குத் தேடித் தந்தது. சென்னைக்கு வந்து குடியேறினேன்.

அந்த நாட்களில் மேப் பற்றி எல்லாம் மக்க ளிடம் பெரிய புரிதல் கிடையாது. ஆகையால், மேப்புடன் கூடவே சம்பந்தப்பட்ட இடத்தின் வரலாற்றையும் சேர்த்து ஒரு புத்தகமாகக் கொடுக்கும் வழக்கம் இருந்தது. சென்னையின் முதல் மேப்பை நாங்கள் வெளியிட்டபோது, சென்னையின் வரலாற்றை நான் எழுத வேண்டி இருந்தது. சென்னை வரலாற்றைத் தேடிப் புறப்பட்டேன்.

1639-ல் நாயக்கர்களிடம் இருந்து மூன்று சதுர மைல் பரப்பை வாங்கி, செயின்ட் ஜார்ஜ் கோட்டையை ஆங்கிலேயர்கள் கட்டியதில் இருந்து சென்னையின் வரலாறு தொடங்குகிறது. அப்போது தொடங்கி இப்போது வரை, சென்னையின் சுவாரஸ்யத்துக்கு அளவே இல்லை.

ராபர்ட் கிளைவ், வெலிங்டன் பிரபு, எலி ஹியூ ஏல், வாரன் ஹேஸ்டிங்க்ஸ் என்று இந்திய வரலாற்றில் முக்கியமான ஆங்கிலேய நிர்வாகிகள் அனைவருக்கும் சென்னையோடு நெருங்கிய தொடர்புகள் உண்டு. அவர்கள் கொண்டுவந்த மாற்றங்களின் பின்னணியில்எல்லாம் சென்னை அனுபவங்கள் உண்டு. இந்தியாவின் எந்தப் பகுதியில் நவீன மாற்றம் ஒன்று நடந்தாலும் சென்னையில் நீங்கள் அதைப் பார்க்கலாம். ஆனால், பாரம்பரிய வாழ்க்கைக்கும் சென்னையில் முக்கிய இடம் உண்டு. பீட்ஸாவுக்கும் இங்கு இடம் உண்டு. அப்பளத்துக்கும் இடம் உண்டு. திராவிடமும் நாத்திகமும் செழித்த நகரம் இது. வீதிக்கு வீதி வழிபாட்டுத் தலங்கள் நிரம்பி வழிவதும் இதே நகரத்தில்தான்.

டிராம் வண்டிகள், பீப்பிள்ஸ் பார்க், நியூ எல்பின்ஸ்டன் தியேட்டர், குயின்ஸ் ஹோட்டல் - இது மெட்ராஸ் காலம். நடேசன் பூங்கா, சத்யம் காம்ப்ளெக்ஸ்,  எக்ஸ்பிரஸ் அவென்யூ,  சரவண பவன்... இது சென்னைக் காலம். ஒரு வரலாற்றியிலாளனாக இவை இரண்டையும் நான் ஒன்றுபோலவே பார்க்கிறேன்.

1981-ல் 'மெட்ராஸ் டிஸ்கவர்டு’ முதல் பதிப்பு வெளியானது. 162 பக்கங்கள். அதன் திருத்தப்பட்ட 6-வது பதிப்பு 2008-ல் வெளியானது. 450 பக்கங்கள். அடுத்த பதிப்புக்கு இப்போது எழுதிக் கொண்டு இருக்கிறேன். மேலும் சில 100 பக்கங்கள் அதிகரிக்கும் போல் இருக்கிறது. ஆமாம்... எழுத எழுதத் தீராமல் எனக்குத் தந்துகொண்டே இருக்கிறது சென்னை!''

- சமஸ், படம்: வீ.நாகமணி

என் ஊர்!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு