Election bannerElection banner
Published:Updated:

என் ஊர்!

போண்டாவுக்காக போச்சு ஒரு வருஷம்!

##~##

ந்தியத் திரையுலகின் முத்திரை திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், நடிகர் என தமிழ் சினிமாவின் பெருமித அடையாளமாக இருக்கும் கே.பாக்யராஜ், தனது சொந்த ஊரான வெள்ளாங்கோயில்பற்றிய நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்...

 ''ஈரோடு மாவட்டம், கோபி பக்கத்துல இருக்கும் வெள்ளாங்கோயிலில் தாய்-சேய் நல விடுதியின் காப்பாளராக வேலை பார்த்தாங்க எங்க அம்மா. சுத்து வட்டாரக் கிராமங்கள்ல எந்தப் பொண்ணுக்குப் பிரசவம்னாலும், எங்க அம்மாவைத்தான் கூட்டிட்டுப் போவாங்க. 'டாக்டரம்மா பையன்’னு ஊர்ல எல்லோ ருக்கும் நான் செல்லம்.

என் ஊர்!

எங்க கிராமத்துல மெத்தைப் பள்ளிக்கூடம்னு ஒண்ணு இருக்கும். அதுலதான் என்னை ஒண்ணாம் வகுப்பு சேர்த்துவிட்டாங்க. ருக்மணி டீச்சர்தான் என்னோட முதல் டீச்சர். கண் பார்வையிலேயே மொத்த வகுப்பையும் கட்டுப்பாட்டுல வெச்சிருப்பாங்க.  கிராமத்துல சினிமா தியேட்டர் கிடையாது. நான் சினிமாவுக்குப் போகணும்னு அடம்பிடிப்பேன். ஊர்ல இருந்து யாராவது கோபிக்கோ, கவுந்தபாடிக்கோ சினிமாவுக்குப் போனா, அவங்ககிட்ட காசு கொடுத்து அம்மா என்னையும் அனுப்பிவெச்சிடுவாங்க.

என் ஊர்!

பள்ளிக்கூடம் போகும்போது தீனி வாங்கிச் சாப்பிட அம்மா காசு கொடுப்பாங்க. ஒருநாள், அம்மா வீட்ல இல்லை. நானே டப்பாவைத் திறந்து காசை எடுத்துட்டுப் போய், கோனார் கடையில மிட்டாய் வாங்கிட்டுப் போயிட்டேன். சாயந்தரம் பள்ளிக்கூடம் விட்டு வந்தப்போ, கோனார் எங்க வீட்ல இருந்தார். 'டப்பாவுல இருந்து என்னடா எடுத்துட்டுப் போனே?’னு அம்மா கேட்டாங்க. 'மிட்டாய் வாங்க காசு எடுத்துட்டுப் போனேன்’னு பயந்துட்டே சொன்னேன். 'உனக்கு காசுக்கும் மோதிரத்துக்கும்கூட வித்தியாசம் தெரியாதாடா?’னு திட்டினாங்க. அம்மாவோட தங்க மோதிரத்தை நான் காசுன்னு நினைச்சு எடுத்துட்டுப் போய்இருக்கேன். நேர்மைன்னா என்னங்கிறதை எனக்குப் புரியவெச்சது அந்தக் கோனார்தான்!

கோபால் சர்வீஸ், எஸ்.ஆர்.டி-னு ரெண்டு பஸ் மட்டும்தான் அந்த வழியில் போகும். எப்பவாவது தப்பித் தவறி, ஒரு விமானம் ஆகாயத்துல போனா, மொத்தக் கிராமமும் வெளியில் நின்னு, வானத்தை வேடிக்கை பார்க்கும். அன்னிக்கு முழுக்கக் கிராமத்தில் அந்த விமானத்தைப்பத்தியேதான் பேசிட்டு இருப்பாங்க!

என் ஊர்!

ரயில், கடல்னு எங்க கிராமத்துக்குத் தெரியாத பல விஷயங்களை மக்களுக்குக் கொண்டுவந்து சேர்த்தது சினிமாதான். சில வருடங்களுக்குப் பிறகு, எங்க ஊருக்கே ஒரு டூரிங் டாக்கீஸ் வந்துடுச்சி. சாயந்தரத்துல தியேட்டரைத் திறந்து, 'வடிவேலும் மயிலும் துணை’ பாட்டை லவுட் ஸ்பீக்கர்ல போட்டதும், ரசிகர் படை சினிமாவுக்குக் கிளம்பிடுவோம். கம்மஞ்சோறு, களி, கீரைக் குழம்பு இதுதான் எங்க கிராமத்து உணவு.

நான் ஒண்ணாவது மட்டும்தான் மெத்தைப் பள்ளிக்கூடத்துல படிச்சேன். அப்புறம் தாத்தா என்னை பாப்பநாயக்கன்பாளையம் நகராட்சி ஸ்கூல்ல சேர்க்க அழைச்சிட்டுப் போனார். போறப்ப, போண்டா வாங்கிட்டுப் போய் தலைமை ஆசிரியருக்குக் கொடுத்தோம். அவரோ, 'இதெல்லாம் எதுக்குங்க?’னு கேட்க... 'பையன், உங்க மேல இருக்கிற பிரியத்துல வாங்கிட்டு வந்திருக்கான். சாப்பிடுங்க’னு சொன்னாரு. தலைமை ஆசிரியர் அதைச் சாப்பிட்டு முடிச்சதும், 'இன்னிக்கு ஒண்ணாம் வகுப்புக்கு மட்டும்தான் அட்மிஷன். இவனை இரண்டாம் வகுப்புல சேர்க்கச் சொல்றீங்க. நாளைக்கு வந்துடுங்க’னு சொல்லிட்டாரு.

எங்க தாத்தா விடாம, 'பரவாயில்லைங்க, நீங்க இவனை ஒண்ணாவதுலயே சேர்த்துக்கோங்க’னு சொல்லி கட்டாயப்படுத்தி சேர்த்துவிட்டுட்டார். வீட்டுக்கு வந்து தாத்தாகூட சண்டை போட்டேன். 'ரெண்டாவது சேர்க்கணும்னா, மறு நாள் வரச் சொல்லிட்டார். நாளைக்கும் யாருடா போண்டா வாங்கித் தர்றது?’னு கேட்டார். இப்படி போண்டாவுக்காக என் ஒரு வருஷமே போச்சு!  

என் ஊர்!

இப்பவும் நேரம் கிடைக்கும்போது எல்லாம் வெள்ளாங்கோயிலுக்குப் போயிடு வேன். எதையும் எதிர்பார்க்காத உண்மை யான அன்பு அங்கே கிடைக்கும்!''

- சந்திப்பு: கே.ராஜாதிருவேங்கடம், படங்கள்: க.தனசேகரன், ச.இரா.ஸ்ரீதர்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு