Election bannerElection banner
Published:Updated:

மதுரை மேனியா

சிக்கலில் சின்ன கோடம்பாக்கம்!

##~##

ரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு 'சின்ன கோடம்பாக்கம்’ என்று பெயர் உண்டு. அந்த அளவுக்கு சினிமா படப் பிடிப்புகள் இங்கு அதிகம் நடந்தன. ஆனால், இன்றோ நிலைமை தலைகீழ்!

 இங்கு எடுத்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகி இருப்பதால், சென்டிமென்ட்டுக்காகவே ஒரு காட்சி யாவது இங்கு எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் பெரிதும் விரும்பினார்கள். மண் வாசனை கமழும் கிராமக் கதைகளுக்கு ஏற்ற லொகேஷனும் இங்கு கிடைத்தது. தவிர, இந்தப் பகுதியில் துணை நடிகர் களுக்கும் பஞ்சமே இல்லை. அவர்களுக்கான சம்பளம், உணவு, தங்கும் இடம், செலவு என எல்லாமே மலிவு என்பதால், கையைக் கடிக்காத பட்ஜெட்டில் படங்கள் தயாராகின. சிவாஜி, நாகேஷ், சத்யராஜ், பாக்யராஜ், சரத்குமார், விஜயகாந்த், ராமராஜன், சிரஞ்சீவி, விஜய் என இங்கு கால்பதிக்காத நட்சத்திரங்களே இல்லை.

மதுரை மேனியா

சேரன், பாக்யராஜ் சினிமா என்ட்ரிக்குப் பிள்ளையார் சுழி போட்டதும் இந்தப் பகுதிதான். 'சின்னத்தம்பி’, 'நாட்டாமை’, 'மருதுபாண்டி’, 'முந்தானை முடிச்சு’ உருவானதும் இங்குதான். 'சின்னத்தம்பி’ வசூலில் பிய்த்துக்கொண்டு போகவே, ஏரியா மவுசு எக்கச்சக்கத்துக்கு எகிறியது!

இந்தப் பகுதியில் லொகேஷன் மேனே ஜராக இருந்த கள்ளிப்பட்டியைச் சேர்ந்த ஜோதிமணியிடம் பேசினோம். ''பல நூறு ஏக்கர் கணக்குல பரந்து விரிஞ்சுகிடக்குற பச்சைப்பசேல் வயல்வெளி, அதுக்கு நடுவில் சுழிச்சுக்கிட்டு ஓடுற கால்வாய், சிற்றாறுகள், பவானி ஆறு, தென்னந் தோப்புன்னு இயற்கை அழகுக்குப் பஞ்சம் இல்லாத பூமி இது. கோயில் காட்சிக்கு ஒண்டி முனியப்பன் கோயில், டூயட்டுக்கு கொடிவேரி அணை, குண்டேரிப் பள்ளம் அணைனு ஏகப்பட்ட லொகேஷன்கள் இருக்கு.

நாங்களும் நிக்க நேரம் இல்லாம ஓடிக்கிட்டே இருப்போம். சுத்துவட்டாரக் கடைகளிலும் வியாபாரம் நல்லா நடக்கும். விவசாயக் கூலித் தொழிலாளிகள் விவசாயம் போக, சினிமாத் தொழிலும் பார்ப்பாங்க. கை நிறைய வருமானம் கிடைக்கும். ஆனா, அதெல்லாம் அந்தக் காலம்!'' என்றவரிடம் விரக்திப் பெருமூச்சு.

மதுரை மேனியா

   ''நடுவுல என்ன ஆச்சுன்னே தெரியலை. இந்தப் பக்கம் சினிமாக்காரங்க வர்றதே இல்லை. ஒரு கட்டத்துல, தமிழ் சினிமாவின் கவனம் மதுரைப் பக்கம் திரும்புச்சு. அங்கே எடுக்கப்பட்ட படங்கள் தொடர்ந்து ஹிட் ஆச்சு. அப்ப இருந்தே இந்தப் பக்கம் யாரும் திரும்பிப் பார்க்குறது இல்லை. சினிமாத் தொழிலை நம்பி கொடிவேரி அணை, கள்ளிப்பட்டி, சத்தியமங் கலம் சுத்துவட்டாரக் கிராமங்கள்ல கடைகளைப் போட்டு இருந்தவங்க பொழப்பு போச்சு. வரு ஷத்துக்கு சுமார் 20 படங்கள்னு இதுவரைக்கும் இங்கே 151 படங்களை எடுத்து இருக்காங்க. எங்க ஆசை திரும்பவும் இந்தப் பகுதி சின்ன கோடம்பாக்கம் ஆகணும்கிறதுதான்!''  ஆதங்கம் தொனிக்கிறது ஜோதிமணியின் குரலில்.  

- கி.ச.திலீபன், படங்கள்: க.தனசேகரன்

மதுரை மேனியா
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு