Published:Updated:

100 வயது தாண்டிய இந்திய அணைகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்! #MustKnow

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
100 வயது தாண்டிய இந்திய அணைகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்! #MustKnow
100 வயது தாண்டிய இந்திய அணைகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்! #MustKnow

100 வயது தாண்டிய இந்திய அணைகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்! #MustKnow

றட்சி, பெருவெள்ளம் என நீர் சார்ந்த பேரிடர்கள் நம்மைத் தீண்டி செல்லும் போதெல்லாம் நம் கவனம் குவியும் இடம் அணைக்கட்டுகள். நீர்நிலைகள் அல்லது அணையை சரியாகப் பராமரிக்காமல் போவதால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அணைகளின் தற்போதைய நிலை வருத்தமளிப்பதாக உள்ளது. காரணம், இந்தியாவில் உள்ள பெரும்பாலான அணைகள் மோசமான நிலையிலேயே இருக்கின்றன. இந்தியாவின் தற்போதைய அச்சுறுத்தல்களில் முக்கியமான ஒன்று பழைய அணைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு. 

இந்தியா 5100 அணைகளைக் கொண்டு அணைகள் கட்டுவதில், உலகிலேயே மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதுவரை 4.4 மில்லியன் மக்கள் அணைகள் கட்டுவதாலும், அணைப் பேரிடர் விபத்து உள்ளிட்ட அச்சுறுத்தல்களாலும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 1947 லிருந்து இதுவரை 4300 மிகப்பெரிய அணைகளைக் கட்டி 4.4 மில்லியன் மக்களை இடம் பெயரச் செய்ததினால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். உதாரணமாக இந்தியாவில் உள்ள பழமையான ஹிராகுட் அணை கட்டும் போது 1.5 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர். குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மாநிலங்களைச் சுற்றியுள்ள சர்தார் சரோவர் அணைக்கட்டுதலின் போது 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்க்கப் பட்டனர்.

மத்தியப்பிரதேசத்திலுள்ள பார்கி அணை கட்டுதலின் போது மந்தலா, சியோனி மற்றும் ஜபல்பூர் மாவட்டங்களில் உள்ள 162 கிராமங்கள் பாதிக்கப்பட்டன. இதில் 82 கிராமங்களில் 20,797 ஹெக்டேர் நிலங்கள் நீரில் மூழ்கின. 14,750 ஹெக்டேர் தனியார் நிலங்கள், 8,478 ஹெக்டேர் வன நிலங்கள், 3,569 ஹெக்டேர் அரசுக்கு சொந்தமான நிலங்கள் பாதிக்கப்பட்டதோடு 7000 க்கும் அதிகமான மக்கள் (மலை வாழ் மக்கள் (43%), பழங்குடியினர் (12%), பொதுப்பிரிவினர் (38%) மற்றும் இதர மக்கள்) பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஒடிசா மாநிலம், சம்பல்பூர் மாவட்டம் பல்பஸ்பூர் என்னுமிடத்தில் வாழ்ந்து வரும் தினா கிருஷ்ண தாஸ் கூறும்போது, ஹிராகுட் அணை திட்டத்தினால் மிகச் சிறந்த விவசாயிகளான தனது முன்னோர்களை இழந்துள்ளதாகவும், தற்போது நிலத்தை இழந்து தாஸ் குடும்பத்தினர் தினக்கூலிக்கு செல்லும் நிலையும்  ஏற்பட்டுள்ளது என்கிறார். இன்னும் அரசாங்க இழப்பீடு தொகைக்காக காத்திருப்பதாகவும் அரசாங்க அதிகாரிகள் இங்கு அரிதாகவே வருவதால் இந்த  பிரச்சினையை தீர்வு செய்ய எவரும் இல்லை எனவும் மன வருத்தத்துடன் கூறியுள்ளார். 

இழப்பீடு தொகை அளித்தாலும், அத்தொகை வாழ்வாதாரத்திற்கே போதாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக பார்கி அணைக் கட்டுதலின் போது இடமாற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு அளித்த இழப்பீடு தொகை அவர்களின் அன்றாட தேவைக்கே அளவாக இருப்பதால் அவர்களால் சிறிதளவு கூட விவசாய நிலங்களை வாங்க முடியவில்லை. தற்போது கூட ஹிராகுட் மற்றும் பக்ராநங்கல் அணைக்கட்டுதலின் போது இடமாற்றம் செய்யப்பட்ட மலைவாழ் மக்கள் இன்றளவும் அற்பமான இழப்பீடு தொகையை பெற போராடிக் கொண்டிருக்கின்றனர். ஹிராகுட் மற்றும் பார்கி அணை கட்டுதலின் போது இடம் பெயர்த்தப்பட்ட மக்கள் ஏராளமானோர் ரிக்ஷா வண்டி தள்ளிக் கொண்டும், கூலி வேலைக்குச் சென்று கொண்டும் உள்ளனர்.இப்படி ஒவ்வொரு அணைக்கும் பின்பும் பல்லாயிரக்கணக்கான மக்களின் தியாகமும், கஷ்டங்களும் ஒளிந்திருக்கின்றன. 

அணைகளின் பாதுகாப்பும், எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்தும்!

அமெரிக்க தொழில்நுட்பத்தின் படி அணையின் சராசரி வாழ்வு 50 வருடங்கள் என கணக்கிடப் பட்டுள்ளது. ஆனால் இதனை எல்லா அணைகளுக்கும் பொருத்திப் பார்க்க முடியாது என்பது வேறு விஷயம். காரணம் அணையின் தன்மை, கட்டுமான தரம், அணை அமைந்துள்ள நிலப்பகுதி என ஒவ்வொரு இடத்திற்கு தகுந்தாற்போல் இவை மாறுபடும். அதே சமயம் நாம் இந்தப் புள்ளிவிவரத்தில் இருந்து எடுத்துக்கொள்ளவேண்டியது என்னவெனில், பழைய அணைகளை, அப்படியே விட்டுவிடாமல் வலுவுடன் பாதுகாத்து வரவேண்டும் என்பதே! தற்போது இந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட அணைகள் 100 வயதைக் கடந்துள்ளன; 500- க்கும் மேற்பட்ட அணைக்கட்டுகள் 50-100 வயதில் உள்ளன. 2015 ல் மகாராஷ்டிராவில் நீர்ப்பாசனத்துறை நடத்திய ஆய்வில் மூன்றில் ஒரு பங்கு அணைக்கட்டுகள் உடனடியாக சீரமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன எனத் தெரியவந்துள்ளது. 

மகாராஷ்டிராவிலுள்ள 1231 அணைக்கட்டுகளில் 403 அணைக்கட்டுகள் மிகப்பெரிய குறைபாடுகளை கொண்டுள்ளது.  பாதிக்கப்பட்ட நிலையிலுள்ள அணைக்கட்டுகளில் நில நடுக்கம் ஏற்படும் அபாயமும் உள்ளது. நீர்த்தேக்கம் காரணமாக ஏற்படும் அதிர்வுகள் (Reservoir induced seismicity) நிலநடுக்கத்தை ஏற்படுத்தும்.  RIS நிலவரப்படி உலகிலும் 75 பாதிக்கப்பட்ட இடங்களில் 17 இடங்கள் இந்தியாவில் உள்ளது. இந்தியாவில் 1967-ல் கோன்யா அணைக்கட்டில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.

இந்தியாவில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அணைக்கட்டுகளின் பாதிப்பு நிலை பற்றிய ஆய்வு அரசாங்கத்தால் அறிவியல் பூர்வமாக இன்னும் செய்யப்படவில்லை என ஹிராகுட் அணை திட்ட முதன்மை பொறியாளர் கருண்குமார் சுபாகர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற மிகப்பெரிய அணைக்கட்டில் பாதிப்பு ஏற்பட்டால் விளையும் பாதிப்பு எவ்வாறு இருக்கும் என நினைத்துப் பார்த்தாலே அச்சமாக இருக்கிறது. எனவே இந்தியாவில் இருக்கும் எல்லா அணைகளையும் பாதுகாக்க, மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். அத்துடன் அணைக்கட்டு கட்டியதால் வெளியேறிய மக்களுக்கு இழப்பீடு வழங்குவதிலும் அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். 

-  மு.முருகன்

 (மாணவப் பத்திரிகையாளர்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு