Election bannerElection banner
Published:Updated:

என் ஊர்!

குறுக்குத் துறை படித்துறை!

##~##

விஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர், நடிகர் என பன்முகத்தன்மைகொண்டவரான விக்ரமாதித்யன், தனது சொந்த ஊரான திருநெல்வேலி பற்றி பேசுகிறார்...

 ''வெவ்வேறு சந்தர்ப்பங்களில் விதவிதமாகக் கதைகள் சொல்லி இருக்கிறேன், திருநெல்வேலியைப்பற்றி... ஆனால், இன்னும் சொல்லித் தீர்வதாக இல்லை! எவ்வளவோ சொன்ன பிறகும் இன்னும் சொல்வதற்கு இருக்கிறது. இத்தனைக்கும் என்னுடைய 10 வயதுக்கு உள்ளாகவே அந்த ஊரை விட்டு வெளியே வரும்படி ஆயிற்று. யோசிக்கும் வேளையில் அதுதான் என்னுடைய முதல் விபத்து... முதல் சோகம்!

என் ஊர்!

திருநெல்வேலி என்றதுமே, சின்ன வயதில் ஒக்கன் பிள்ளையாக அம்மாவுடன் புட்டார்த்தி அம்மன் கோயிலுக்குப் போனதுதான் முதல் ஞாபகமாக இருக்கிறது. நகரில் 'ஒரு குழந்தைக்குக் காற்று கருப்பு பட்டுவிட்டது. தீண்டல் பெண் காற்றுப்பட்டு உடல்நலம் சுணக்கிவிட்டது’ என்றால், இன்றைக்கும் புட்டார்த்தி அம்மன் கோயிலுக்குத்தான் கூட்டிக்கொண்டு போகிறார்கள். அப்படி வளர்ந்த பிள்ளைதான் நான். எங்கள் வீடு பெரிய தேருக்கு எதிரே உள்ள கல்லத்தி முடுக்குத் தெருவில் இருந்தது. நடை தூரத்தில், தெப்பக்குளத்தைத் தாண்டி நயினார்குளம்.

என் ஊர்!

அந்தக் காலத்தில் நயினார்குளம், சமுத்திரம் போல் இருக்கும். கோடை காலத்தில் தெப்பக்குளத்திலேயே குளித்துவிடுவோம். தெப்பக்குளத்துத் தண்ணீர் பாசி பிடிக்க ஆரம்பித்த பிறகுதான், தாமிரபரணிக்கே போவோம். ஆறு ஊரைவிட்டுத் தள்ளி இருப்பதால், அப்படி. தவிரவும், நயினார்குளத்துத் தண்ணீரே அலையடிக்க உலங்கிக்கொண்டு இருக்கும். அது போதும்!

இப்போது சொன்னால் நம்ப மாட்டார்கள்... நயினார் குளத்தில் ஸ்டீம் போட் விட்டு இருந்தார்கள். சுவாமி சந்நதி தெப்பக் குளத்தில் நீச்சல் அடித்துக் குளிக்கலாம். நீராளி மண்டபத்துக்கு எல்லாம் நீச்சலடித்துப் போய் இருக்கிறேன். டவுனில் இருந்து இருமருங்கும் மருத மரங்கள் நிற்கும் சாலை வழியே நடந்து குறுக்குத் துறைக்குப் போவோம். அப்போது டவுன் பஸ் எல்லாம் கிடையாது. மாந்தோப்புக்குள் புகுந்து குறுக்குத் துறை கோயில் பிராகாரம் வழியே ஆற்றுக்குள் போவோம். எவ்வளவோ ஆறுகளில் எத்தனையோ படித்துறைகளைப் பார்த்து விட்டேன், குறுக்குத்துறை படித்துறைபோல ஒரு படித்துறையை இன்னும் பார்த்தது இல்லை. படித்துறையே அப்படியா... அல்லது என் மனசா... எனக்குத் தெரியாது! அது என் வாழ்வின் ஓர் அம்சம்.

எங்கள் உலகம், கல்லத்தி முடுக்கு தெரு வீடு, நயினார்குளம், தெப்பக்குளம், குறுக்குத் துறை, புட்டார்த்தி அம்மன் கோயில், கீழப் புதுத் தெரு தெற்கு புதுத் தெரு, நெல்லையப்பர் கோயில், காந்திமதி அம்மன் சந்நதி, சங்கில்பூதத்தார் வாகையடி முக்கு, ராயல் டாக்கீஸ், பாப்புலர் தியேட்டர், கொஞ்சம் பிந்தி ரத்னா டாக்கீஸ் இவற்றால் ஆனது. அந்தச் சிறு வயதில் நாங்கள் பார்த்த தேரோட்டத்தை, அதற்குப் பிறகு பார்க்கவே முடியாமல் போயிற்று!

இந்தியாவில் உள்ள பல கோயில்களுக்குச் சென்று இருக்கிறேன். நெல்லையப்பர் கோயிலைப்போல அவ்வளவு விஸ்தாரமான கோயிலை எங்குமே கண்டது இல்லை. இப்படி வடிவமைக்க வேண்டும் என்று அந்தப் பிற்கால பாண்டியனுக்கு எப்படித் தோன்றியது என்பதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை!

என் ஊர்!

நுழைந்தவுடன் கண்ணில் படுகிற மாக்கல் நந்தியே மாயத்துக்குப் போதுமானது. உள்ளே போனால், தட்டுகிற இடங்களில் எல்லாம் வேறு வேறு நாதங்கள் ஒலிக்கிற சப்தஸ் வரத் தூண்கள். சற்றே ஒசிந்த மாதிரி இருக்கும் சிவலிங்கம். பழம்பெரும் பிராகாரத்தில்... ஸ்தல விருட்சம் மூங்கில். தாமிர சபையில் நடராஜர். சந்நதியில் இருந்து கொஞ்சநேரம் நடந்தால்தான் அம்மன் சந்நதியே வரும். வலது புறம் வசந்த மண்டபம். இடது புறம் பொற்றாமரைக் குளம். நடுவில் ஆறுமுக நயினார் சந்நதி.

எங்கள் சின்ன வயதுகளில், வசந்தோற்சவத்தில் கொடுக்கிற பானகம் இன்னும் நாவின் சுவை அரும்புகளில் ஒட்டிக்கொண்டு இருப்பதாகத் தோன்றுகிறது.

திருநெல்வேலி என்பது எங்கள் ஞாபகங்களின் தொட்டில். கடந்த மாதம் கோவில்பட்டியில் கலைஞன் மாரீசுடன் பேசிக்கொண்டு இருந்தபோது சொன்னேன், 'இன்னும் நான் கல்லத்தி முடுக்குத் தெருவில் இருக்கும் சிறுவனாகவே இருக்கிறேன் தம்பீ’ என்று. காலம் ஏற்படுத்திய கசடுகள் எவ்வளவோ அப்பிவிட்டன. களங்கங்கள் இன்னொரு புறம்... ஆனால், அத்தனையையும் மீறி குழந்தைமையும் கவித்துவமும் இருந்துகொண்டு இருக்கிறது என்றால், புட்டார்த்தி அம்மன் தொட்டு, மண்டபத்துக் கடை அல்வா வரையிலும் உண்டாக்கிவைத்து இருக்கும் இனிமைகள்தாம்!''

-ஆண்டனிராஜ், படங்கள்: சந்தோஷ்ஸ்ரீராம்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு