Published:Updated:

சுற்றுச்சூழல் போராளிகளுக்கு கிடைக்கும் பரிசு... மரணம்! - அதிர வைக்கும் ஆய்வறிக்கை

சுற்றுச்சூழல் போராளிகளுக்கு கிடைக்கும் பரிசு... மரணம்! - அதிர வைக்கும் ஆய்வறிக்கை
சுற்றுச்சூழல் போராளிகளுக்கு கிடைக்கும் பரிசு... மரணம்! - அதிர வைக்கும் ஆய்வறிக்கை

சுற்றுச்சூழல் போராளிகளுக்கு கிடைக்கும் பரிசு... மரணம்! - அதிர வைக்கும் ஆய்வறிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இந்த லிங்க் மூலம் இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ரத்த வெள்ளத்தில் துடிக்க, துடிக்க கொஞ்சம் கொஞ்சமாக மரணிப்பது அவர்களுக்கு கிடைக்கும் பரிசு. மரணம் அவர்களுக்கு பொருட்டல்ல. மரணிக்கும் போது ஏற்படும் வலி அவர்களுக்கு வலிப்பதல்ல. ஆனால், தங்களின் மரணத்திற்கு அப்பால் அழிக்கப்படவிருக்கும் இயற்கை வளங்கள் குறித்த எண்ணங்கள் அவர்களைக் குத்திக் கிழிக்கும், குரலற்ற பூர்வகுடிகளின் வாழ்க்கை நொறுக்கப்படவிருப்பதை எண்ணி நொந்துபோவார்கள். இந்தப் பின் கதைகளுக்குப் போவதற்கு முன்னர் ஒரு முன் கதை...

2015ல் மட்டும் உலகம் முழுக்க இயற்கைக்காகவும், பழங்குடிகளுக்காகவும் போராடிய போராளிகளில் 185 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதை உடைத்து கடந்த வருடத்தில், 200க்கும் அதிகமான இயற்கைப் போராளிகள் உலகம் முழுக்கப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். (குளோபல் விட்னெஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் இதை அறிவித்துள்ளது)

இந்தத் தேடல் தொடங்கிய இடமும் கூட ஒரு இயற்கைப் போராளியின் மரண நினைவுகளிலிருந்து தான். 2014ன் இறுதி... வேலூர் மாவட்டத்தின் புதூர் கிராமத்தில் அக்கிரமகாரர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து மறைக்கப்பட்ட ஒரு ஏரியின் கால்வாயை மீட்டெடுக்கப் போராடிய தணிகாசலம் ஒரு நள்ளிரவில், சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது... படுகொலை செய்யப்பட்டார். ஆம், அது படுகொலை தான். ஒரு அதிகார கும்பலின் கூலிப்படை, கூர்மையான கத்திகளைக் கொண்டு அவர் முகத்தையும், தலையையும் உருத்தெறியாமல் சிதைத்துக் கொன்றது. அவர் எதற்காகப் போராடினாரோ அந்தக் கால்வாய்... அதன் வழியிலிருக்கும் மண்ணும், கற்களும் வேண்டுமானால் அவரை நினைவில் வைத்திருக்கலாம். மற்றபடி உயிர் கொண்ட மனிதர்கள் அவரை மறந்து நாட்களாகியிருக்கும். 

வேலூர் தணிகாசலத்திற்கு மட்டுமல்ல, உலகளவில் இயற்கை சுரண்டலுக்கு எதிராக, அதிகார கும்பலின் அடக்குமுறைகளுக்கு எதிராக, காசைக் கடவுளாக்கும் கார்ப்பரேட்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் இயற்கைப் போராளிகள் அனைவரின் முடிவுகளும் இப்படி ரத்தத்தில் தான் முடிகின்றன. 

2016ம் ஆண்டு, ஜூன் மாதம், 21ம் தேதி. காலை 8.20. மலேசியாவின்  மிரி கடற்கரை நகரம். ஒரு ஷாப்பிங் மாலை ஒட்டியிருந்த சாலை. சிக்னல் சிகப்பில் இருந்ததால், தன் காரை நிறுத்தியிருந்தார், பில் கயோங். சாலையோரம் இருந்த அந்தப் பனை மரத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அவரின் எண்ணங்கள் அந்தப் பனை மரங்களின் பின்னிருக்கும் சர்வதேச அரசியலைப் பற்றியதுமாய், அதனால் கடும் பாதிப்புக்குள்ளாகும் "டாயக்" பழங்குடியினத்தைச் சுற்றியதாக இருந்தது. அப்போது, திடீரென... ஒரு நொடி... அவரின் வலது பக்க கண்ணாடியைத் துளைத்துக் கொண்டு வந்த இரண்டு துப்பாக்கி குண்டுகள் அவரின் தலையில் துளை போட்டன. அப்படியே... அங்கேயே... ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். 

மலேசிய, புரூணே எல்லையில் பொர்னியோ காடுகளை ஒட்டி அமைந்திருக்கிறது சராவக் மாவட்டம். இங்கு டாயக் என்ற பழங்குடியின மக்கள் அதிகமாக இருக்கின்றனர். பல ஆயிரம் ஆண்டுகளாக இருக்கும் அவர்களின் பூர்வீக நிலங்களை அபகரித்து பாமாயில் எடுப்பதற்கான மரங்களை நட முயற்சித்துக் கொண்டிருக்கிறது "தங் ஹூவட்" என்ற நிறுவனம். அதற்கு எதிராகத் தான் தொடர்ந்து போராடி வந்தார் பில் கயோங். அவரின் கொலையில் இதுவரை மூன்று பேரை கைதுசெய்திருக்கிறது மலேசிய காவல்துறை. அந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடந்த வழக்கின் போது, அவர் யாருக்காகப் போராடினாரோ அந்த டாயக் இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பில் கோயக் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோஷத்தோடு நீதிமன்றத்திற்கு வத்நனர். உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து குரல்கொடுத்து வருகின்றனர் டாயக் இனத்தவர். பில்லை அழித்துவிட்டதால் தங்களுக்கு இனி ஏதொரு தடையுமில்லை என்ற நம்பிக்கையில் இருக்கிறது "தங் ஹூவட்" நிறுவனம். தன் இரண்டுக் குழந்தைகளுடன், நிராதரவாய் தனியே நின்று கொண்டிருக்கிறார் பில் கயோங்கின் மனைவி. 

ஹண்டோரஸ் நாட்டின் குவல்கார்க் நதியின் மீது கட்டவிருக்கும் அணைத் திட்டத்திற்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார் பெர்தா காசெரஸ். இந்தத் திட்டத்தால் "லென்கா" என்ற பழங்குடியினத்தின் வாழ்வாதாரம் முற்றிலும் அழியும் அபாயம் இருந்தது. கடந்த வருடம் மார்ச் மாதத்தின் ஒரு நன்னாளில்... மாலை வீட்டிலிருந்த பெர்தாவை சுட்டுக் கொன்றுவிட்டது மர்மக் கும்பல் ஒன்று. தற்போது, அணைகட்டும் திட்டத்தை  செயல்படுத்த அதிக முனைப்போடு ஈடுபட்டு வருகிறது அரசாங்கம். 

மெக்சிகோவிலிருக்கும் பழங்குடியினம் "தரஹுமரா" . இவர்களின் பூரிவீகமான சியரா மாட்ரே மலைப்பகுதிகளில் அழிக்கப்படும் காடுகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வந்தவர் இஸிட்ரோ பால்டெனிக்ரோ. காடுகளுக்காகப் போராடிய இஸிட்ரோவின் தந்தை, சிறிய வயதில் இஸிட்ரோவின் கண் முன்னே படுகொலை செய்யப்பட்டார். தற்போது, கடந்த ஜனவரி மாதம் இஸிட்ரோவும் கொலைசெய்யப்பட்டுள்ளார். 

உலகளவில் இயற்கை சுரண்டல்களுக்கு எதிராகப் போராடி கொலை செய்யப்பட்டவர்களில் இவர்கள் சிறு எடுத்துக்காட்டுகள் மட்டுமே. இது போன்ற கொலைகளில், கொலையை செய்த கூலிகள் கைதாகிறார்களே தவிர, கொலை செய்யத் திட்டமிட்ட எந்த பெருமுதலாளிகளும் கைது செய்யப்படுவதில்லை. சரி... இவர்களின் உயிர்த் தியாகங்கள் அவர்களின் நோக்கங்களை நிறைவேற்றுகிறதா என்றால் அதுவும் இல்லை. அதிகாரவர்க்கத்தின் இயற்கை சுரண்டல் நிகழ்வுகள் தொடர்ந்துக் கொண்டேதானிருக்கின்றன. இதோ, மீத்தேனுக்கு அனுமதி கிடைத்துவிட்டது. ஹைட்ரோகார்பனுக்கு கையெழுத்திட்டாகிவிட்டது. இயற்கை சுரண்டலுக்கு எதிராக குரல் கொடுப்பது என்பது விவசாயிகளின் பிரச்னை மட்டுமே அல்ல. அது ஒட்டுமொத்த மனிதத்தின் பிரச்னை. மனிதத்தைக் காக்க மனிதர்களின் குரல் தான் ஓங்கி ஒலிக்க வேண்டும். 

1988யில் பிரேசில் காடுகளைக் காக்கப் போராடி , நடுரோட்டில் வெட்டி சாய்க்கப்பட்ட இயற்கைப் போராளில் சிக்கோ மெண்டீஸ் இப்படி சொல்லியிருப்பார்...

" நான் முதலில் ரப்பர் மரங்களைக் காக்கப் போராடுவதாக நினைத்தேன். பின்பு, அமேசான் மழைக்காடுகளைக் காக்கப் போராடுவதாக நினைத்தேன். இப்போது தான் உணர்ந்தேன், நான் போராடுவது மனிதத்திற்காக..." 

- இரா. கலைச் செல்வன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு