Published:Updated:

‘வாயுள்ள புள்ளைக நாங்க... பொழைச்சிக்குவோம்!’ - மெர்சல் மெட்ராஸ் சென்ட்ரல் #VikatanExclusive

‘வாயுள்ள புள்ளைக நாங்க... பொழைச்சிக்குவோம்!’ - மெர்சல் மெட்ராஸ் சென்ட்ரல் #VikatanExclusive
‘வாயுள்ள புள்ளைக நாங்க... பொழைச்சிக்குவோம்!’ - மெர்சல் மெட்ராஸ் சென்ட்ரல் #VikatanExclusive

‘வாயுள்ள புள்ளைக நாங்க... பொழைச்சிக்குவோம்!’ - மெர்சல் மெட்ராஸ் சென்ட்ரல் #VikatanExclusive

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

துரையில் ஆடிஷனுக்காக வந்திருந்த கலகல ’மெட்ராஸ் சென்ட்ரல்’ டீமை ஒரு லகலக டிஸ்கஷனுக்காக அரை மணி நேரம் வம்புக்கிழுத்தோம். ரகளையாகப் பேச ஆரம்பித்தவர்களிடம்...

"மெட்ராஸ் சென்ட்ரல் - உருவான கதை?"

”நான், மாயா, ராதாமணாளன்னு என்னோட ஆர்.ஜே நண்பர்கள் சிலரோட சேர்ந்து ஆரம்பிச்சதே இந்த ‘மெட்ராஸ் சென்ட்ரல்’. ஆகஸ்ட் 2015-லேயே நாங்க எங்களோட சேனலை ஆரம்பிச்சிருந்தாலும் நவம்பர்க்கு மேலேதான் வீடியோக்களையெல்லாம் போட ஆரம்பிச்சோம். அதுவும் டிசம்பர் மாசத்துல டீமானிடைசேஷன் சமயத்துலதான் 40,000 சப்ஸ்ச்ரைபர்கள்ல இருந்து 2 லட்சத்துக்கு மேல அதிகமான அபரிமிதமான வளர்ச்சியும் நடந்துச்சு. ஹ்யூமர் மட்டுமல்லாம நாங்க சில சீரியஸான விஷயங்களையும் வீடியோக்களாகப் பண்ணினோம். ஆனா ஹ்யூமர் வீடியோஸ ரசிச்ச அளவுக்கு மக்கள் யாரும் இவற்றைப் பார்க்கக் கூட இல்லை. அதுக்காக நாங்க இதை அப்படியே விடப்போறதும் இல்லை. சமூகப் பிரச்னைகளைக் கையில் எடுத்துக்கிட்டு அவற்றை சீரியசா பண்ற ஐடியா நிறைய இருக்கு. ஆனாலும் வேலை பார்க்கிற அட்மாஸ்பியரே எங்க இடத்துல இருக்காது. ஒரு காலேஜைக் கட்டடிச்சிட்டுக் கதை பேசுற மனநிலைலதான் ஸ்க்ரிப்ட் டிஸ்கஸ் பண்ணி வீடியோ பண்ணுவோம்.

வீடியோவில் நாங்க இல்லைன்னாலும் எல்லாரோட பெர்பார்மன்ஸ் அப்பவும் எல்லோருமே ஸ்பாட்ல இருப்போம். எங்க காமெடிகளுக்கு எங்களோட கேமராமேன் நிஜ்ஜாவும் முக்கிய காரணம். ஒரு பக்கம் பயங்கரமா கோபியும் சுதாகரும் வசனத்தை மனப்பாடம் பண்ணி வெறித்தனமா பெர்ஃபார்ம் பண்ணிட்டு இருப்பாங்க. இவன் கேமராவையே ஆன் பண்ண மறந்துட்டு அவங்க பெர்பார்மன்ஸ்ல மெய் மறந்து பார்த்துட்டு இருப்பான். அவங்க உயிரைக் கொடுத்து நடிச்சதுலாம் வீணாப் போய்டும். இந்த மாதிரி அவன் கிட்ட இருந்தும் அவன் பண்ற விஷயங்கள்ல இருந்தும் நிறைய ஹ்யூமர் எலமென்ட்ஸ் எடுத்துட்டு வீடியோல நாங்க யூஸ் பண்ணிப்போம்” என மூச்சு விடாமல் பேசி முடித்தார் முன்னாள் பிக் எஃப்.எம் ஆர்.ஜேவும் இந்நாள் 'மெட்ராஸ் சென்ட்ரல்' கன்டென்ட் ஹெட்டுமான முத்து.

அடுத்தது ’ரீல் அந்து போச்சு’ புகழ் ஆனந்தியின் என்ட்ரி...

"டி.வி-யில நான் வீ.ஜேவா இருந்தப்பவும் எஃப்.எம்ல நான் ஆர்.ஜேவா இருக்கும்போதும் முத்து எனக்கு ரொம்ப நல்ல ஃப்ரெண்ட். அப்படியே அவர் மூலமாகத்தான் நானும் டீம்குள்ளே வந்தேன். என்னையும் சேர்த்து ஒண்ணு ரெண்டு பொண்ணுங்கதான் இருக்கோம் எங்க டீம்ல. அவ்வளவு ஏன்? எங்க வீடியோக்களைப் பார்க்கிறதுல கூடப் பொண்ணுங்களோட எண்ணிக்கை ரொம்பக் கம்மியா இருக்குங்க. சொல்லப்போனா பொண்ணுங்களோட பங்களிப்புதான் அதிகமாகத் தேவைப்படுது" என்று வருத்தத்தை முன்வைத்துப் பெண்களுக்கு ரெட் கார்பெட் விரிக்கிறார்.

அடுத்தது நம்ம பார்வை கோபி - சுதாகர் பக்கம் திரும்ப தங்கள் கேரியர் கதையை கோரசாக சொல்ல ஆரம்பிக்கிறார்கள்...

“நான் பொதுவாகவே சினிமா நடிகர்கள்னு மட்டுமில்லாம நேர்ல பார்க்கிற மனிதர்களோட மேனரிசத்தையும் ரொம்ப கூர்ந்து கவனிச்சு நல்லாவே உள்வாங்கிக்குவேன். அதை அப்படியே அவங்ககிட்டேயே செஞ்சு காமிச்சு கை தட்டலும் வாங்குவேன். என்னோட காலேஜ் செகண்ட் இயர்ல எங்க கெமிஸ்ட்ரி சார் மாதிரி நான் இமிட்டேட் பண்ணவும் அதை என்னோட ஃப்ரெண்ட்ஸ் மட்டுமல்லாம அந்த சாரும் ரசிக்க ஆரம்பிச்சுட்டார். அப்படியே அந்தத் திறமையை வளர்த்துகிட்டு ‘பேங்க் பரிதாபங்கள்’ வீடியோல நான் பண்ண அந்த மேனேஜர் கேரக்டரும் சீமான் கேரக்டரும்தான் மக்கள் மத்தியில ஹிட் ஆச்சு. ரெண்டுக்குமே தலைவர் சுதாகர்தான் டைரக்‌ஷன்" என சுதாகரைப் பார்க்க...

”ஒரு பிரபல தொலைக்காட்சிக்கு நாங்க ஆடிஷன் போயிருந்தப்போ இன்னும் வித்தியாசமா பண்ணுங்க வெரைட்டியா பண்ணுங்கன்னு அங்கே உள்ளவங்க எங்களைக் கேட்டுக்கிட்டே இருக்கவும் நாங்க பொறுமையிழந்து அந்தச் சேனலோட க்ரியெட்டிவ் ஹெட் மாதிரியே நடிச்சுக் காட்டவும் அவங்க அதோட எங்களுக்கு டாட்டா காட்டிட்டாங்க. அதுக்கப்பறம்தான் ’மெட்ராஸ் சென்ட்ரல்’னு ஒரு சேனல்ல ஆடிஷன் இருக்கறதைக் கேள்விப்பட்டு ரெண்டு பேரும் அங்க ரெஸ்யூம் எல்லாம் தூக்கிட்டுப் போய், பெர்பார்ம் பண்ணி சிலபல சைட் ரோல்கள்லாம் பண்ணி அப்புறம் அப்படியே மெய்ன் ரோல்களுக்கும் முன்னேறுனோம்” என்று மெட்ராஸ் சென்ட்ரல் என்ட்ரியைப் பற்றிக் கூறுகிறார்.

"சிரிப்புக்கு பின்னால இருக்கிற சென்டிமென்ட்..?"

‘வாயுள்ள புள்ள பொழச்சிக்கும்’ங்கிற பழமொழி மேல வெச்ச நம்பிக்கையை எங்க ரெண்டு பேரோட அப்பா-அம்மா எங்க மேல வெச்சாங்க. படிப்புல நாங்க ரெண்டு பேருமே பெருசா கவனம் செலுத்தலைன்னாலும் இந்தப் பசங்க எதையாவது செஞ்சு பொழச்சுப்பாங்கங்கிற நம்பிக்கைய எங்க வீட்ல எங்க மேல வெச்சாங்க. அவங்களோட நம்பிக்கைதான் எங்களை இந்த அளவுக்கு சுதந்திரமாகச் செயல்பட வெச்சிருக்குனு நிச்சயமா சொல்லியாகணும். அதோட நாங்க காலேஜ் படிக்கிறப்போ ‘ஃபைன் ஆர்ட்ஸ் அகாடமி’ல இருந்த யுவராஜ் அண்ணாவோட அட்வைஸும் தான் பணத்துக்குப் பின்னால போகாம நமக்குன்னு ஒரு பேரை மக்கள் மத்தியில் சம்பாதிச்சுக்கணும்ங்கிற உண்மையை உணர்த்துச்சு. நிகழ்ச்சிகளை நடத்திக் கொடுக்கிற வாய்ப்புகள் எங்களுக்கு நிறையவே வந்தாலும் அப்படிப் போய் பணம் சம்பாதிக்காம இப்படி நாங்க இங்கே கஷ்டப்பட்டு கான்செப்ட் பிடிச்சுக் கலாய்ச்சிட்டு இருக்கிறதுக்கு இதுதான் காரணம். எங்களுக்கு சினிமா வாய்ப்புகளும் இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா வர ஆரம்பிச்சிருக்கு. இதுக்குத்தானே ஆசைப்பட்டோம். எத்தனை சினிமாவுல நடிச்சாலும் யூ-டியூப் ரசிகர்களுக்குத் தீனி போட்டுக்கிட்டே இருக்கணும்ங்கிறது மட்டும்தான் எங்க ஆசை. ”ஆஹ… இணையத்தில் இணைந்திருப்போம்” என அந்த அரசியல்வாதியின் மேனரிசத்தோடு கோரசாக வணக்கம் வைக்கிறார்கள் அனைவரும்.

- லோ. இந்து 
படங்கள் : விக்னேஷ்வரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு