Election bannerElection banner
Published:Updated:

கலாம் கண்காட்சி!

கலாம் கண்காட்சி!

##~##

ராமேஸ்வரத்தின் புதிய ஈர்ப்பு...  'ஹவுஸ் ஆஃப் கலாம்’. முன்னாள் ஜனாதிபதி அப்துல கலாமின் வீடு.

சமீபத்தில் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் அருங்காட்சியகம் ஒன்று அவரது வீட்டில் திறக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட கலாம் வீட்டின் முதல் தளத்தில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்துக்குள் நுழைந்ததும் ஃபைபரில் உருவாக்கப்பட்ட கலாமின் முகம் நம்மை வரவேற்கிறது.

'கனவுக்கு எல்லை இல்லை’ என்ற வாக்கியத்தின் கீழ் ராமேஸ்வரம் கடற்கரை வீதியில் நின்று பறவை பறக்கும் விதம் குறித்து கலாம் கற்பனை செய்த காட்சியுடன் அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு படியும் படமாகக் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. கலாமின் சிறிய வீடு, சுவார்ட்ஸ் பள்ளி, திருச்சி கல்லூரி, எம்.ஐ.டி, முதலில் பணியாற்றத் துவங்கிய எஸ்.எல்.வி-3 டீம், திருவனந்தபுரத்தில் உள்ள தும்பா ஆராய்ச்சிக் கூடம், அவரது எண்ணத்தில் உருவான ஹோவர்கிராஃப்ட், தொடர்ந்து இந்தியாவின் முதல் குடிமகனாகப் பதவியேற்க குதிரைகள் பூட்டிய சாரட் பவனி போன்ற படங்கள் இடம்பெற்றுள்ளன.

கலாம் கண்காட்சி!

இஸ்ரோவில் கலாம் பணியாற்றிய காலத்தில் உருவாக்கிய எஸ்.எல்.வி-3, ஜி.எஸ்.எல்.வி, அக்னி, பிரித்வி, இன்சாட்-3சி, பி.எஸ்.எல்.வி போன்ற ராக்கெட் மற்றும் ஏவு கணைகளின் மாதிரிகளும் இடம்பெற்றுள்ள அருங் காட்சியகத்தின் மையப்பகுதி, இஸ்ரோவின் ஆய்வுக்கூடத்தை நினைவூட்டுகிறது.

கலாம் கண்காட்சி!

தனது வாழ்நாளின் முக்கியக் கண்டுபிடிப்பாக கலாம் பெருமிதம் கொள்ளும் போலியோ நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான எடை குறைந்த செயற் கைக்காலின் மாதிரியும் இங்கே இடம் பெற்றிருக்கிறது. இதுவரை 34 ஆயிரம் குழந்தைகளுக்கு அந்த செயற்கைக் கால் பொருத்தப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கிறது ஒரு செய்தி. பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மாணவர்களைச் சந்திப்பதையே தனது வாழ்நாள் லட்சியமாகக்கொண்டுள்ள கலாம், இதுவரை 15 மில்லியன் மாணவர்களை உலகு எங்கும் சந்தித்த காட்சிகளின் பதிவுகளும் பளிச்சிடுகின்றன. டெல்லி பிரமோஸ் தலைமையகத்தில் அப்துல் கலாம் தொடர்பான அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. அது பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால், பொது மக்களுக்கு அங்கு அனுமதி கிடையாது. அந்த ஏமாற்றத்தைத் தவிர்க்கவும், தனது வீட்டுக்கு வருபவர்கள் வெறுமனே திரும்பிச் செல்லாமல் ஒரு லட்சியத்துடன் செல்ல வேண்டும் என்பதற்காகவும் இதனை ஏற்படுத்தி உள்ளதாக கலாம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தென் கோடித் தீவில் இருக்கும் கலாம் இல்லம் ஒவ்வொரு இந்தியனையும் வரவேற்கிறது!

- இரா.மோகன்,  படங்கள்: உ.பாண்டி

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு