Published:Updated:

வளர்ப்பு நாய்க்கு ‘தொப்பி’ - ஆர்.கே நகர் ர.ர.க்களின் அட்டகாசம் !

தார்மிக் லீ
வளர்ப்பு நாய்க்கு ‘தொப்பி’ - ஆர்.கே நகர் ர.ர.க்களின் அட்டகாசம் !
வளர்ப்பு நாய்க்கு ‘தொப்பி’ - ஆர்.கே நகர் ர.ர.க்களின் அட்டகாசம் !

வளர்ப்பு நாய்க்கு ‘தொப்பி’ - ஆர்.கே நகர் ர.ர.க்களின் அட்டகாசம் !

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நீயா.. நானா என்ற ரத்தத்தின் ரத்தங்களின் இரட்டை இலைக்கான குடுமிப்பிடி சண்டையில், 'ஓரமா போய் விளையாடுங்கப்பா' என இரண்டு கோஷ்டியையுமே தள்ளிவைத்துவிட்டது தேர்தல் ஆணையம். அழும் குழந்தைக்குக் குச்சி மிட்டாய் வாங்கித் தருவது போல சசிகலா தரப்பிற்குத் தொப்பி சின்னத்தையும் ஆறுதல் பரிசாக வழங்கியது. அதை ஏதோ ஆஸ்கர் ரேஞ்சுக்கு ஃபீல் செய்து போற இடத்தில் எல்லாம் காட்டிக்கொண்டிருக்கிறார்கள் தினகரன் கோஷ்டியினர். இந்நிலையில்தான் நேற்று அலுவலகம் முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது அந்தக் காட்சி கண்ணில்பட்டது. சத்தியமா இவை யாவும் உண்மைச் சம்பவங்களே! 

வழக்கம்போலவே ஆபீஸ் முடிந்து ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வீட்டை நோக்கி வண்டியை விட்டேன். மணி சுமார் 9.30 இருக்கும். பின்னி ரோட்டில் சுமார் 40-ல் சென்று கொண்டிருந்தபோது என்னைத் தாண்டி 'இன்னோவா' கார் ஒன்று க்ராஸ் ஆனது. நாஞ்சில் சம்பத் புண்ணியத்தில் இன்னோவா என்றாலே சட்டென கவனம் ஈர்க்கும்தானே. வண்டிக்குள் சிகப்பாக ஏதோ தென்பட, அது என்ன என கவனிப்பதற்குள் முந்திச் சென்றுவிட்டது. அடுத்த சிக்னலில் ரெட் விழ, சராசரி இந்தியன் போலவே பராக்கு பார்க்கத் தொடங்கினேன். எனக்கு முன்னால் அதே இன்னோவா. 'இந்தக் கார் நம்ம பார்வைல பட்டுகிட்டு இருக்கே... என்னவா இருக்கும்?' என ஆர்வத்தில் வண்டியைப் பின்தொடர்ந்தேன். அதன் வேகத்திலேயே நான் வண்டியை செலுத்த, உள்ளே சிகப்பு கலர் தொப்பி அணிந்தபடி கார் ஓட்டிக்கொண்டிருந்த டிரைவர் கண்ணில்பட்டார். காருக்குள்ளேயும் தொப்பி போட்டுகிட்டுதான் இருக்கணுமா என யோசித்தபடியே பின் சீட்டில் இருந்தவர்களைப் பார்க்க, திடுக். உட்கார்ந்திருந்த மற்றவர்களும் தொப்பி போட்டிருந்தார்கள். ஒருவர் தொப்பியைக் கழற்றி சொரிந்துவிட்டு பின்னர் யாருக்கோ பயந்தவர் போல திரும்பவும் போட்டுக்கொண்டார். 'ஒருவேளை குரூப்பா ஃபேன்ஸி டிரெஸ் போட்டியில கலந்துக்கிட்டு இருந்திருப்பாங்களோ? இந்த வயசுல எந்த ஸ்கூல்ல இவங்களுக்குப் போட்டி நடக்கும்?' என யோசித்தபடியே கார் பேனட்டைப் பார்க்க... அட!  அ.தி.மு.க. கட்சிக்கொடி ஜம்மென பறந்துகொண்டிருந்தது. அதிலிருந்த அண்ணா மட்டும் 'என் பேருல இருக்குற கட்சியை இப்படி சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களேய்யா' என உம்மென இருந்தார். ரைட்டு, ஃபேன்ஸி டிரெஸ் போட்டி நடந்த இடம் ஆர்.கே நகர் போல எனத் தெரிய வந்தது. 

இதுவரைக்குமாவது பரவாயில்லை. அடுத்து நடந்ததுதான் செவ்வாய் கிரக லெவல். ஃபாலோ செய்து ஈகா தியேட்டர் அருகே சென்றுகொண்டிருந்தேன். பின் சீட்டில் இருந்தவர் கையில் புசுபுசுவென ஏதோ இருந்தது. 'சரி அசதிக்கு தலகாணி வச்சுருப்பார்' என நானே நினைத்துக்கொள்ள, திடீரென 'அது' அசைந்தது. உற்றுப் பார்த்தால்... அது பொமரேனியன் நாய்க்குட்டி. அது தலையிலும் ஒரு தொப்பி. அடப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாவிகளா! சரியாக அளவெடுத்து பிரத்யேக டிசைனில் அதற்கென தைத்து தலையில் மாட்டிவிட்டிருந்தார்கள். எனக்கோ அடிவயிற்று உருண்டையை உருட்டியவாறு சிரிப்பு பொத்துக்கொண்டு வர, 'உங்க அக்கப்போர்ல என் தலையை ஏன்ய்யா உருட்டுறீங்க?' என பாவமாய் ஜன்னல் வழியே என்னைப் பார்த்தது அந்த வாயில்லா ஜீவன். 'இந்த கரகாட்டக் கோஷ்டி யாரா இருக்கும்?' என அவர்களிடமே கேட்க நினைத்துப் பின் தொடர்ந்துபோய் ஒரு சிக்னலில் தவறவிட்டுவிட்டேன். ஆனா ஒண்ணுய்யா...! இனித் தொப்பியைப் பார்க்கிறப்போ எல்லாம் இதானய்யா ஞாபகம் வரும். 

குருநாதாஆஆஆஆ இதுக்கு மேல என்னால தாங்க முடியாது குருநாதாஆஆ. எங்களை ஏதாவது ஃபாரீன் தேசத்துக்கு தத்து கொடுத்துடுங்க குருநாதாஆஆ! 

- தார்மீக் லீ

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு