Published:Updated:

ஆமையின் ஓட்டுக்குள் ஒரு பிராட்காஸ்ட் நிலையம்..! நம்பமுடியாத அதிசயம்

ஆமையின் ஓட்டுக்குள் ஒரு பிராட்காஸ்ட் நிலையம்..! நம்பமுடியாத அதிசயம்
ஆமையின் ஓட்டுக்குள் ஒரு பிராட்காஸ்ட் நிலையம்..! நம்பமுடியாத அதிசயம்

ஆமையின் ஓட்டுக்குள் ஒரு பிராட்காஸ்ட் நிலையம்..! நம்பமுடியாத அதிசயம்

இன்னும் சில ஆண்டுகளில் இப்படி நடக்கலாம். நாட்டின் எல்லையில் அந்த இரவு நேரத்தில் ராணுவ வீரர்கள் காவல் காத்துக் கொண்டிருப்பார்கள். அப்போது, அவர்கள் நின்று கொண்டிருக்கும் அந்த புல்வெளிகளின் ஊடே ஒரு ஆமை மெதுவாக நகர்ந்து வரும். ஆமை தானே போகிறது என அவர்கள் அதைப் பெரிதாக கண்டு கொள்ளாமல் இருப்பார்கள். அது உயிருள்ள ஆமையா என்று வேண்டுமானால் அவர்கள் சந்தேகம் கொண்டு ஆராய்ந்துப் பார்க்கலாம். அது உயிருள்ள ஆமை என்றதும் அதைக் கீழே விட்டுவிடுவார்கள். அவர்களுக்குத் தெரியாது, அந்த ஆமையின் மூளை முழுக்க முழுக்க ஒரு மனிதனின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது. தம் எல்லையிலிருக்கும் ராணுவ முகாம்களை வேவு பார்க்க அது வந்திருக்கிறது என்பது. சமயத்தில், மனித வெடிகுண்டு போல், அது ஆமை வெடிகுண்டாகவும் மாறலாம். ஏனெனில், அதைக் கட்டுப்படுத்துவது ஒரு மனித மூளை. 

இது என்  கற்பனையோ, சினிமாக் கதையோ அல்ல. இது இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பு. இயந்திரங்களை உருவாக்கி, அதைக் கட்டுப்படுத்துவதில் பெரிய அறிவியல் ஆச்சர்யங்கள் இனி கிடையாது. உயிருள்ள உயிரினங்களின் மூளையை ஊடுருவி அதைத் தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரும் ஆராய்ச்சியில் பல நாட்டு ஆராய்ச்சியாளர்களும் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை பூச்சிகளை வைத்து இது போன்ற ஆராய்ச்சிகளை மெற்கொண்டு வந்தனர். தற்போது, ஆமையைக் கொண்டு இந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறார்கள் தென் கொரிய விஞ்ஞானிகள். 

மனிதர்களின் தலையில் "ஹெட் மவுண்டட் டிஸ்பிளே " (Head Mounted Display) ஒன்று மாட்டப்படும். இதில் BCI எனப்படும்  " Brain Computer Interface" மற்றும் CBI " Computer Brain Interface" ஆகியவை இணைக்கப்படும். இவை மனித மூளையை கணிணிக்கும், கணிணியின் உத்தரவுகளை மூளைக்கும் கடத்தும் கருவியாக செயல்படும். அதே போன்று ஆமையின் முதுகில் ஒரு கேமரா, வைஃபை ட்ரான்ஸ்சீவர், கம்ப்யூட்டர் கன்ட்ரோல் மாட்யூல் மற்றும் ஒரு பேட்டரி ஆகியவைப் பொருத்தப்பட்டிருக்கும். மேலும், கூடுதலாக ஒரு அரை  - உருளை (Semi-Cylinder) வடிவிலான உணர் கருவியும் (Sensor) அதன் முதுகில் பொருத்தப்பட்டிருக்கும். 

ஆமையின் முதுகிலிருக்கும் கேமராவிலிருந்து அதன் சுற்றத்தை HMD பொருத்திய மனிதரால் உணர முடியும். இதைக் கண்டு அந்த மனிதர் ஒரு ஆமையாக மாறிட முடியும். அதாவது, " மெய்நிகர் யதார்த்தம்" (Virtual Reality) போன்ற முறையில், அவன் இருக்கும் இடத்திலிருந்தே ஆமை இருக்கும் இடத்திற்குப் போனது போன்ற உணர்வு ஏற்படும். அவனிடம் இருக்கும் BCI மற்றும் CBI அந்த மனிதனின் எண்ணங்களை EEG சிக்னல்களாக மாற்றி ஆமைக்கு சென்றடையச் செய்யும்.அதன் முதுகிலிருக்கும் உணர் கருவி (Sensor), மனிதன் செலுத்த நினைக்கும் திசைகளை அவைகளுக்கு உணர்த்தும். அதன்படி, அந்த ஆமையும் நகர்ந்து செயல்படும். 

உலகில் எத்தனையோ உயிரினங்கள் இருக்க ஆமையை ஏன் இதற்கு தேர்ந்தெடுத்தார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. ஆமைக்கு இயற்கையிலேயே இருக்கும் அறிவாற்றல், தடைகளை கண்டுணர்ந்து நகரும் இயல்பு, ஒளிகளின் அலைக் கீற்றை வேறுபடுத்த முடிகிற திறன் ஆகியவையே இந்த ஆராய்ச்சிக்கு இதை தேர்ந்தெடுக்க காரணங்களாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். 

இன்னும் சில ஆண்டுகளில் இப்படியும் நடக்கலாம். மனிதன் அடைய முடியாத ஆழ்கடலில் எத்தனையோ ஆச்சரியங்கள் புதைந்துக் கிடக்கின்றன. ஒரு ஆமையாய் மாறி மனிதன் ஆழ்கடலில் பயணித்து பல கேள்விகளுக்கான விடைகளைக் கண்டறியலாம். மாயமான MH 370 மலேசிய விமானத்தைக் கண்டுபிடிக்கலாம், சிதம்பரம் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது மாயமான டோர்னியர் விமானத்தைத் தேடிக் கண்டுபிடிக்கலாம். இப்படி இந்த ஆராய்ச்சியின் எதிர்காலம் எதுவாகவும் இருக்கலாம். அறிவியல் ஆராய்ச்சிகள் அழிவிற்கானவை அல்ல... முதல் பத்தியை தேர்ந்தெடுப்பதா, கடைசிப் பத்தியைத் தேர்ந்தெடுப்பதா என்பது மனிதர்களின் கைகளில் தான் இருக்கின்றன. 

-இரா.கலைச்செல்வன்
 

அடுத்த கட்டுரைக்கு