Election bannerElection banner
Published:Updated:

என் ஊர்!

டால்ஸ்டாயோடு மாடு மேய்த்துக்கொண்டு...!

##~##

''பிறந்த ஊர் சொர்க்கத்தைவிடச் சிறந்தது என்பது உண்மைதான். ஆனால், பிறந்த மண்ணை விட்டு விலகி இருக்கும்போதுதான் ஒருவன் அதற்குரிய அன்பையும் மரியாதையையும் செலுத்த இயலும்’  என, தனது ஊர்சுற்றிப் புராணம் நூலில் குறிப்பிட்டு இருப் பார் ராகுல் சாங்கிருத்யாயன். பிழைப்பின் நிமித்தம் ஊரில் இருந்து கொஞ்சம் விலகி இருந்தாலும், என் நினைவுகள் எப்போதும் நங்கூரமிட்டு இருப்பது நான் பிறந்து வளர்ந்த மருங்கூரில்தான்!'' ரசனையான மேற்கோள் சொல்லி மருங்கூர் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளத் துவங்கினார் எழுத்தாளர் கரிகாலன். 'புலன் வேட்டை’, 'நிலாவை வரைபவன்’ படைப்புகள் மூலம் முத்திரை பதித்த படைப்பாளி.

என் ஊர்!

''கடலூர் மாவட்டத்தின் வெள்ளாற்றுக்கும் மணி முத்தாற்றுக்கும் இடையில் செழித்து இருக்கும் மருத கிராமம், மருங்கூர். எனது சிறு வயது நாட்களில் மழைக் காலங்களில் இந்த ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடும். மழை குறைந்த பிறகு தெளிவாக ஓடும். ஆற்று நீரில் ஊத்தால்கொண்டு மீன் பிடிக்க இரவு நேரங்களில் செல்லும் அண்ணன்மார்கள், லாந்தர் விளக்கைச் சுமந்து செல்வதற்காகச் சிறுவர்களை அழைத்துச் செல்வார்கள். விடியற்காலம் மீன்களை கூறுவைத்து எங்களுக்கும் ஒரு பங்கு தருவார்கள். ஆறுகளில் மட்டுமின்றி எங்களது நெல் வயல்களிலும் மீன்கள் துள்ளும். இன்று  செயற்கை உரங்களால் வயல்வெளிகளில் மீன் வளங்களை இழந்துவிட்டோம்.

ஆடி மாத மருங்கூரின் இரவுகள் புது வண்ணம் பெற்று இருக்கும். ஊர்க் குளத் தின் ஓரம் வீற்றிருக்கும் திரௌபதி அம்மன் கோயிலுக்குக் காப்பு கட்டுவார் கள். மணியமும் நாட்டாமையும் போட்ட தலைக்கட்டு வரியில் கண்டப்பங்குறிச்சி சம்சு, அர்ச்சுனன் அவதாரம் எடுப்பார். கோயில் திடல் அல்லி தர்பார் ஆகிவிடும். பெட்ரோமாக்ஸ் விளக்கில் ஜிகினா மினுமினுக்க... சற்றே பெண்மை பொங்கும் புத்தூர் விசயன், அல்லியாகத் தர்பாருக்கு வருவார். 'அசல் பொம்பள தோத்தா’ என பொய் மார் மூடிய ரவிக்கையில்

என் ஊர்!

5 நோட்டை ஊக்கால் கோத்து, தான் சார்ந்த கட்சியுடன் பெயரைச் சொல்வான் நண்பன் கோதண்டு என்ற கோதண்ட ராமன். கட்டியங்காரன் கூறிய ஜோக்கு களுக்கு விழுந்து விழுந்து சிரித்த பெண்கள், தாங்கள் கொண்டுவந்த உரச் சாக்கை விரித்து உறங்கி  இருப்பார்கள். திருவிழாவும் கூத்தும் இல்லாமல் மருங்கூரை நினைத்துப் பார்க்க முடியாது.

மருங்கூர் சனங்கள் வெள்ளந்தியான வர்கள். பின்லேடனை சுட்டுக்கொன்றது முதல் 2ஜி ஸ்பெக்ட்ரம் வரை எல்லாம் தெரிந்ததுபோல் காட்டிக்கொள்வார்கள். கழிப்பறைக்கு வழியற்று ஒழுங்கியில் புதர் தேடும் பெண்கள், சோனியா புடவை கட்டி இருக்கும் பாங்கு பற்றியும் ஜெயலலிதா புதிதாக அணிந்து இருக்கும் தோடு குறித்தும்கூட பேசுவார்கள். ஆனால், முதிர்ந்த கரும்புகள் கருக... ஆலை திறக்குமா, நிலுவை கிடைக்குமா? என்பது பற்றிய மர்மம் மட்டும் அவர்களுக்குப் புரிவதே இல்லை.

என் ஊர்!

மருங்கூர் இன்று எவ்வளவோ மாறிவிட்டது. எங்கள் ஊர்ப் பிள்ளைகள் போகோவும் டென் ஸ்போர்ட்ஸும் பார்க்கிறார்கள். தெருவுக்கு இரண்டு சுமோக்களாவது திரிந்துகொண்டு இருக்கின்றன. பைக்குகள் இல்லாத வீடே இல்லை. அம்மன் கோயில் மேட்டில் புழுதி ஏர் ஓட்டவும், பூட்டாங்கயிற்றை இறுக்கி வண்டி ஓட்டவும் வளரும் புதிய தலைமுறைக்கு அவசியம் இல்லை. டிராக்டர்கள் வந்துவிட்டன. இந்த மாற்றங்கள் எல்லாம்  வெறும் நுகர்வளவிலேயே நின்றுவிட்டன. தீ மிதித் திருவிழாவுக்கு வருபவர்களை வரவேற்று சாதிப் பெருமைகள் சொல்லும் டிஜிட்டல் பேனர்களை படித்த இளைஞர்களே வைப்பது வருத்தம் அளிக்கிறது. இரட்டைக் குவளைக்குப் பதிலாக பிளாஸ்டிக் தேநீர்க் குவளைகள். ஊர் என்றும், சேரி என்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு வெவ்வேறு சொற்பிரயோகங்கள் உவப்பளிக்கவில்லை. இறந்த உறவுகளைச் சுமப்பவர்கள் செத்த மாட்டை அப்புறப்படுத்த சேரிக்குச் சேதி சொல்லுகிறார்கள். சாதி இழிவுகள் துடைத்தெறியப்படும்போது, மருங்கூர் இன்னும் அழகாகும். இதை என் ஊர்த் தம்பிகள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதுதான் எப்போதும் என் தவிப்பாக இருக்கிறது.

வாழ்க்கை,  பிழைப்புக்காகத்  தொப்புள் கொடி நிலத்தில் இருந்து என்னைத் தள்ளிவைத்து இருக்கிறது. கடைசியாகக் குளிருக்குப் பழைய சட்டை கேட்ட நடுக்கட்டை பெரியப்பா செத்துப்போனது, குரோட் டன்ஸுகளுக்குத் தண்ணீர் விடுகையில் ஒரு தகவலாக எஞ்சி நிற்கிறது.

என் ஊர்!

பிரியமான பசுக்களை மேய்த்துக்கொண்டே பாரதி, ஜெயகாந்தன், டால்ஸ்டாய், காஃப்காவோடு வயல்வெளியையும் வாசித்த இளம் பருவத்தை மருங்கூர் எனக்குத் தந்தது. என் கவிதைகளில்  மருங்கூரின் சுவாசமும், பெருமூச்சும் கலந்து இருக்கிறது. ஊரில் இருந்து யாரால்தான் விலக முடியும்? உயிரோடு கலந்தது பிறந்த ஊர்!''

படங்கள்: எஸ்.தேவராஜன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு