Election bannerElection banner
Published:Updated:

டேய் நிறுத்துடா! - டெரர் மிரட்டல்

வேலூர் பட்டிமன்றக் கிச்சுகிச்சு!

##~##

திர் அணியில் இருப்பவர்கள் தொடங்கி வீட்டில் இட்லி சுடும் மனைவி வரை கலாய்த்துக் கலகலப்பு கூட்டுபவர்கள் பட்டிமன்றப் பேச்சாளர்கள். அவர்களை ஒட்டுமொத்தமாகக் கூட்டினால் களை கட்டுமே என்று தோன்ற... உடனே அமல்படுத்தினோம்.

25 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் மாவட்டத்தில் மட்டுமல்லாது சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் 2,500-க்கும்  மேற்பட்ட பட்டிமன்றங்களையும், பாட்டு மன்றங்களையும் நடத்திப் புகழ்பெற்ற குடியாத்தம் புலவர் சீனி.சம்பத், வேலூர் கவிஞர் அன்பு, திமிறி சதாசிவம், பொன்னை வேதநாயகி ஆகியோர் இந்த ஜாலி ஜமாவில் கலந்து கொண்டனர்.

டேய் நிறுத்துடா! - டெரர் மிரட்டல்

''என்ன வேதநாயகி, வரும்போதே ரொம்பக் கோவமா இருக்கே. வீட்டுல யாரையாவது அடிச்சுட்டியா?'' ஓப்பனிங்கிலேயே சிக்சர் அடிக்க... சீண்டிப் பார்த்தார் பல வருடங்கள் பட்டிமன்ற நடுவராக இருந்து பஞ்சாயத்துத் தீர்ப்பு சொல்லும் புலவர் சீனி.சம்பத். ''ஐயா பட்டிமன்றத்துலதான் என்னை கலாய்ப்பீங்க... இங்கேயுமா?'' என்று பொய்க் கோபம் காட்டினார் வேதநாயகி. ''அது சரி... நாம மலேசியா போனபோது நடந்த சம்பவங்களைச் சொல்லு பார்க்கலாம்!'' என்றார் வேலூர் கவிஞர் அன்பு. ''அது அவ்வளவு சாமான்யத்துல மறக்குமா? வெளிநாடு போறோமேனு பந்தாவா இருக்கட்டும்னு துணிக் கடையில் பவுசா

டேய் நிறுத்துடா! - டெரர் மிரட்டல்

4,500-க்கு சுடிதார் வாங்கிட்டு வந்தேன். அந்த சுடிதாரை போட்டுட்டு ஃப்ளைட்ல இருந்து இறங்கினா... வரவேற்க வந்த எல்லாத் தமிழ்ப் பெண்களும் பாந்தமா சேலையில் இருந்தாங்க. 'தமிழ்நாட்டுப் பொண்ணா இருந்துக்கிட்டு சுடிதாரில் வர்றியேம்மா?’னு அவங்க கேட்ட ஜோர்ல அரை லிட்டர் அசடு வழிஞ்சது!'' என்றார் வேதநாயகி. உடனடியாக, ''பாருங்க நாம சொன்னா கேட்க மாட்டாங்க. இதைச் சொல்றதுக்கு சிங்கப்பூர் போக வேண்டி இருக்கு!'' என்று பஞ்ச் கொடுத்தார் சதாசிவம்.

தொடர்ந்து சதாசிவம் சொன்ன சங்கதி ரொம்பவே சுவாரஸ்யம். ''ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கிருஷ்ணகிரி பக்கம் உள்ள ஒரு கிராமத்தில் பட்டி மன்றத்தில் பேச ஆரம்பிச்சேன். உடனே கீழே இருந்த ஒருத்தன் 'டேய்.. நிறுத்துடா’னு அதட்டினான். திடுக்குன்னு ஷாக் ஆனாலும் ஏதோ தெரியாம சொல்லிட்டான்னு நினைச்சு தொடர்ந்து பேசினேன். அஞ்சு நிமிஷம் கழிச்சு,  'டேய் ஒழுங்கா நிறுத்துடா’னு திரும்பவும் அவன்கிட்டே இருந்து அதே வாய்ஸ். செம கடுப்பாயிட்டேன். உடனே மைக்கில் அவனைக் கூப்பிட்டு 'எதுக்குய்யா மரியாதை இல்லாமப் பேசுற’ன்னு கேட்டேன். அவன் திரு திருனு விழிச்சுட்டு, 'சார் நான் இதுவரை இயர் போன்ல ஃப்ரெண்ட்கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன். நீங்க கண்டினியூ பண்ணுங்க’னு சொன்னான். எனக்கு மயக்கம் வராத குறைதான்!'' என்றார்.

புலவர் சீனி.சம்பத் ''ஏங்க...  இதே மாதிரிதான் போன மாசம் நம்ம வேதநாயகி பட்டிமன்றத்தில் பெண்களைப் பற்றி ரொம்பப் பெருமையாப் பேசிட்டு இருந்துச்சு. நான் உடனே 'பாருங்க ஜனங்களே, வீட்ல புருஷனை தினம் கொடுமைப் படுத்திக்கிட்டு இருக்கு, இங்க ரொம்ப அப்பாவி மாதிரி பேசுது’னு விளையாட்டுக்குச் சொன்னேன். பட்டிமன்றம் முடிஞ்சு கீழே வந்ததும் அங்கே இருந்த பெண்கள் எல்லாம் வேதநாயகியைச் சூழ்ந்துக்கிட்டு கன்னாபின்னான்னு திட்டுறாங்க. வேதநாயகி அழாத குறையா என்னைப் பார்க்குது. உடனே நான், 'அம்மா, அந்தப் பொண்ணுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. நான்தான் ஒரு ஃபுளோவுல சொன்னேன்’னு சொன்னேன். அதுக்கப்புறம் எனக்கு ஆரம்பிச்சுச்சு பாருங்க அர்ச்சனை!'' என்று சொல்ல... சிரிப்பொலி சிதறியது.

டேய் நிறுத்துடா! - டெரர் மிரட்டல்

சிரிப்புக்கு நடுவே சீரியஸ் விஷயம் சொன்னார் கவிஞர் அன்பு. ''பட்டிமன்றம் சில சமயம் பல பாடங்களை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது. ஒரு முறை பெற்றோர் எப்படி இருக்க வேண்டும் என்று நடுவர் ஐயா அரை மணி நேரத்துக்கு மேல பேசிக்கிட்டு இருந்தாரு. ரொம்ப அழகா தீர்ப்பை வழங்கினார். நாங்க கீழே இறங்கியதும் ஒரு போலீஸ்காரர், நடுவர்கிட்ட வந்து தேம்பித் தேம்பி அழுறார். காரணம் கேட்கும் போது, அவர் தினமும் தன் மகனை அடித்து வளர்த்து வந்தாராம். இதனால் அந்தப் பையனுக்கும் இவருக்கும்  பேச்சுவார்த்தையே இல்லாமப் போச்சு. 'நீங்க பேசறதைக் கேட்ட பிறகுதான் ஒரு மகனை எப்படி வளர்க்கிறதுனு புரிஞ்சுக்கிட்டேன். இனி என் மகனை ஒழுங்கா வளர்ப்பேன்’னு சொன்னார். அதைக் கேட்டதும் மனசுல பரவின சந்தோஷம் இன்னும் நெஞ்சுக்குள்ளேயே நிற்குது!'' என்று சொல்ல மற்றவர் முகங்களில் பெருமிதம்  கலந்த ஆமோதிப்பு!

   - கே.ஏ.சசிகுமார், படங்கள்: ச.வெங்கடேசன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு