Election bannerElection banner
Published:Updated:

ஊருக்கு மரம் வளர்ப்போம்!

பாண்டி பசுமை நண்பர்கள்

##~##

'' 'தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு
சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டென்பான்  
சின்னதொரு கடுகுபோல்
உள்ளம் கொண்டோன்
தெருவோர்க்குப் பயனற்ற சிறிய வீணன்!’

- என்று எழுதிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எங்க ஊர்க்காரர்தான். தன் வாழ்க்கையை தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் முழு மனசா அர்ப்பணித்தவர். எங்க ஊர்க்காரர் சொன்னதை நாங்க செயல்படுத்த வேண்டாமா? அதனால்தான் புதுவை முழுக்க அலைந்து திரிந்து பசுமை வளர்க்கிறோம்!'' அழுத்தமாகவும் ஆழமாகவும் பேசுகிறார்கள் ரவிச்சந்திரனும் சுப்ரமணியனும்.

ஊருக்கு மரம் வளர்ப்போம்!

அரசுப் பணியாளர்களான இருவரும் கடந்த எட்டு வருடங்களாக ஓய்வு நேரம், விடுமுறை நாட்கள் என கொஞ்ச நேரம் கிடைத்தாலும்  மரம் நடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

''இதுவரை நான் 10 முறைக்கு மேல் ரத்த தானம் செய்து இருப்பேன். ரவிச்சந்திரன் 22 முறை ரத்த தானம் செய்து இருப்பார். இப்படி சமூக சேவை செய்வதில் எங்களுக்குள் சளைக்காத போட்டி. நல்ல விஷயங்களில் போட்டி போடுவது நல்லதுதானே சார்?'' என்கிறார் ரவிச்சந்திரன்.

''கல்லூரி முடித்ததும் இருவருமே புதுச்சேரி மின் துறையில் வேலைக்குச் சேர்ந்தோம். சனி, ஞாயிறு விடுமுறைகளை வீணாக்காமல் கடந்த எட்டு வருஷங்களா மரங்கள் நட்டு வருகிறோம். இதுவரை 600-க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு இருக் கோம். ஒவ்வொரு வாரமும் முறைவெச்சு மரங்களைப் பராமரிப்போம்!'' என்று சுப்ர மணியன்  சொல்ல, ரவிச்சந்திரன் தொடர் கிறார்.

ஊருக்கு மரம் வளர்ப்போம்!

''மரங்களை நட்டால் மட்டும் போதாது. குறைந்தது ஓர் ஆண்டாவது பராமரிக்கணும். இதுவரை 600 மரங்களுக்கு மேல் நட்டு இருப்போம். அதில் 200 மரங்கள் செத்து இருக்கும். முக்கியமா இடுகாடு, அரசுப் பள்ளிகள், மின் துறை இடங்கள்னு வாய்ப்பு உள்ள இடங்களில் எல்லாம் மரங்கள் வெச்சிருக்கோம். மரம் நடுவதற்கான இடங்களைத் தேர்வு செய்த பிறகு, வனத் துறையில் இருந்து செடிகளை வாங்கி வருவோம். கஷ்டப்பட்டு ஆறு மாதம் பராமரிச்சுட்டா போதும்... அடுத்த ஆறு மாதம் மழை சீஸன். மிச்சத்தை இயற்கைப் பார்த்துக் கொள்ளும்!''

ஊருக்கு மரம் வளர்ப்போம்!

''பெரும்பாலும் நிழல் தரும் மரங்களைத்தான் நடறோம். பாதாம் மரம், அரச மரம், தூங்குமூஞ்சி மரம், வேப்ப மரம் போன்றவைகள்தான் அதிக நிழல் தரும்.  மாடுகளால் இந்த மரங்களுக்குத் தொந்தரவும் இருக்காது. இரண்டு பேரால் மட்டுமே ஒட்டுமொத்தப் புதுவையையும் பசுமை பூமியா ஆக்க முடியாது. இதை ஓர் அமைப்பா மாற்றினால் இன்னும் சிறப்பா பசுமை வளர்க்கலாம். ஏதோ எங்களால் முடிஞ்சது... எங்க குடும்ப உறுப்பினர்களையும் இந்த வேலையில் ஈடுபடுத்துகிறோம். குழந்தைகளுக்கும் புது அனுபவமா இருக்கும். இந்த ஆண்டுக்குள் 100 மரங்களை நடணும் என்பது எங்கள் இலக்கு!'' என்று விருப்பம்  தெரிவிக்கிறார்கள் இந்த 'இயற்கை’ நண்பர்கள்!

நா.இள.அறவாழி                    

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு