Election bannerElection banner
Published:Updated:

கசடறக் கற்பிக்க...

கசடறக் கற்பிக்க...

##~##

'உண்மையில் யாரையும்விட கல்வி அதிகம் அவசியம் ஆசிரியர்களுக்குத்தான்!’ என்றார் தந்தை பெரியார்.  சமச்சீர்க் கல்வி, வகுப்பறை வன்முறை, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான அதிகாரப் படிநிலை ஆகியவை பற்றி விவாதிக்கப்படும் இன்றையச் சூழலில் கல்லூரிப் பேராசிரியர்களுக்கான கருத்துப் பட்டறையை திருவண்ணாமலை எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியில் நடத்தினார் எழுத்தாளர் பவா.செல்லத்துரை.

'சுற்றுச் சூழலும், பல்லுயிர்ப் பெருக்கமும்’ என்ற தலைப்பில் பேசிய குறும்பட இயக்குநர் காஞ்சனை சீனிவாசன், ''50 சதவிகிதமாக இருந்த காட்டுப்பகுதியில் தற்போது, 17 சதவிகிதம்தான் மிச்சம் வைத்து இருக்கிறோம். பறவைகள், விலங்குகள், மண், நீர் என்று சகலத்தையும் களவாடித் தீர்த்துவிட்டோம். அன்றைக்கு நதிகள் இல்லாத பூமியில்  இன்று அடுக்குமாடி குடியிருப்புகளும், ஓங்கி உயர்ந்த கட்டடங்களும்தான் பரவிப் பெருகி இருக்கிறது.  நாம் மலையைக் குடைந்து பாதை அமைத்தோம், உல்லாச ரிசார்ட்டுகள் கட்டினோம். அங்கே யானைகள், சிறுத்தைகள் வந்தால், 'அட்டகாசம்’ செய்வதாகச் சொல்கிறோம். காடுகளை அழித்த நாம், விலங்குகளின் மீது வார்த்தை வன்முறையையும் செலுத்துகிறோம். இதன் பரிசாகக் கடும் வறட்சி, நீரற்றப் பிராந்தியங்கள்,  பருவநிலை மாற்றம் என்று பல்வேறு வகைகளில்   மனித இனமே வதைப்பட்டுக் கொண்டு இருக்கிறது!'' என்று ஆவேசமும் ஆதங்கமுமாகப் பேசி நிறுத்த... ஆழ்ந்த நிசப்தம் மூலம் அதை ஆமோதித்தது அரங்கம்!

கசடறக் கற்பிக்க...

  'உணவு அரசியல்’ என்ற தலைப்பில் பேசினார் மருத்துவர் சிவராமன், ''நம் பாரம்பரிய சிறுதானியங்களிலும், பாரம்பரிய நெல்லிலும் உடலுக்குத் தேவையான பெரும்பாலான சத்துகள் இருக்கின்றன. அவற்றை நாம் பன்னாட்டு கம்பெனிகளுக்குப் பலிகொடுத்துவிட்டோம். கேரட்டில் இருக்கும் வைட்டமின்களைவிட, அதிக வைட்டமின்கள் நாம் அன்றாடம் உண்ணக்கூடிய முருங்கைக் கீரையில் இருக்கிறது. ஆனால், நமக்கு இங்கிலீஷ் காய்கறிகளைத்தான் பிடிக்கிறது. அரிசியை மூன்று முறை பாலீஷ் செய்வதால், அவற்றில் இருக்கும் சத்துகளை இழக்கிறோம். நம்முடைய சிறுதானியங்களான சாமை, திணை, கேழ்வரகு, கம்பு போன்ற உணவுகளை நாம் மறந்தே விட்டோம்.  அவை இன்று 'லவ் பேர்ட்ஸ்’ போன்ற பறவைகளுக்கு உணவாக மாறி இருக்கிறது. இந்தத் துரித உணவு முறைகள் அளித்த பரிசுதான் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி, புற்றுநோய் வகையறாக்கள். நம்மைச் சுற்றி விளையும் காய்கறிகள்தான் நாம் சாப்பிடுவதற்கு ஏற்றது. பன்னாட்டு கம்பெனிகளின் வியாபரத் தந்திரங்கள் காரணமாக, பாரம்பரிய உணவு வகைகளான தோசை, இட்லி போன்ற உணவு வகைகளை ஒழித்துவிட்டு ஓட்ஸ், கார்ன் ஃப்ளேக் என்று அந் நிறுவனங்களின் உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும் என்ற நிலை உருவாகிக் கொண்டு இருக்கிறது!'' என்று பல அதிர்ச்சித் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

கசடறக் கற்பிக்க...

'அப்போதும் கடல் பார்த்துக்கொண்டுதான் இருந்தது’ என்ற தலைப்பில் பேசிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், ''நான் குடும்பத்துடன் வெளிநாடு செல்ல வேண்டி இருந்தது. அதற்காக வீட்டில் வளர்க்கும் மீன் தொட்டியை பக்கத்து வீட்டில் கொடுக்கச் சென்றேன். அவர்களோ, 'நாங்க ரெண்டு பேருமே வேலைக்குப் போறோம். எங்களால மீனுக்கு உணவு போட முடியாது’ என்றார்கள். இப்படிப் பல வீடுகளில் தட்டிக்கழித்தார்கள். ஒரு மீனுக்குப் ஒரு பருக்கைக் கூட போட முடியாத மனநிலையில் தான் நகரத்து மனிதர்கள் வாழ்கிறார்கள்.

திண்டுக்கல்லில் நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றேன். அவருக்குச் சொந்தமான திராட்சை தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். பூச்சிக்கொல்லிக் கலவை தெளிக்கப்பட்ட பழங்களை அப்படியே பறித்துச் சாப்பிடச் சொன்னார்கள். அதுபோன்ற ரசாயனம் கலந்த பழங்களைச் சாப்பிட்டால் நோய் தாக்குதல் நிச்சயம். திராட்சை பழத்தின் விதைகளை மென்று துப்பும் அளவுக்குக்கூட பொறுமை இல்லாமல்,  'சீட்லெஸ்’ பழங்களை விரும்பி உண்கிறார்கள். அடுத்த தலைமுறைகளை உருவாக்க முடியாத ஒரு பழத்தைச் சாப்பிடுபவர்கள், எப்படி ஒரு பண்பாட்டையும், கலாசாரத்தையும் மதித்து நடப்பார்கள்?'' என்று கேள்வியுடன் முடித்தார்.

விடை இருக்கிறதா உங்களிடம்?

- காசி.வேம்பையன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு