Published:Updated:

இயற்கைச் சூழலில்... இயற்கைக்காக ஒரு பள்ளி... தொடங்கி வைத்த இயற்கை ஆர்வலர்கள்!

இயற்கைச் சூழலில்... இயற்கைக்காக ஒரு பள்ளி... தொடங்கி வைத்த இயற்கை ஆர்வலர்கள்!
இயற்கைச் சூழலில்... இயற்கைக்காக ஒரு பள்ளி... தொடங்கி வைத்த இயற்கை ஆர்வலர்கள்!

இயற்கைச் சூழலில்... இயற்கைக்காக ஒரு பள்ளி... தொடங்கி வைத்த இயற்கை ஆர்வலர்கள்!

அரை கிலோமீட்டர் நீளத்திற்கு செயற்கையாக உருவாக்கப்பட்ட மேடை இல்லை. இங்கு மண் தான் மேடை.  பெரிய கிரானைட் கற்களால் கட்டப்பட்ட கட்டடங்கள் இல்லை. மண்ணால் கட்டப்பட்ட குடில்கள் தான். வானைத் தொடும் ஆதி யோகி சிலைகள் இல்லை. கூழாங்கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இயற்கைத் தத்துவ தத்ரூபங்கள் மட்டுமே இருந்தன. நீளமான தாடி வைத்த சத்குருக்கள் இல்லை. குறுந்தாடி வைத்திருக்கும் சிவராஜ் அண்ணன் தான் இருந்தார். திறப்பு விழாவிற்கு நரேந்திர மோடி வரவில்லை. "குழந்தைகள் பொம்மைகளை உடைப்பது தான் பேரழகு" என்று சொல்லும் அரவிந்த் குப்தா தான் வந்திருந்தார். பணம் இருப்பவர்களுக்கு முன் வரிசை, பணம் இல்லாதவர்களுக்கு வரிசையிலேயே இடமில்லை என்ற கதை எல்லாம் இல்லை. இங்கு நீங்களும், நானும், யாரும் சமம் தான். அனைவருக்குமான நிலமாக உருவெடுத்திருக்கும் "குக்கூ காட்டுப் பள்ளியின்" முறையான தொடக்க விழா சமீபத்தில் நடந்தது. இன்றைய தமிழ்ச் சமூகத்தின் மிக முக்கியமான நிகழ்வு அது. 

கருப்பு நிற தார்ச்சாலையிலிருந்துக் கிளம்பிய அனலின் பிரதிபலிப்பு, கைகளைக் கருக்கியது. சிங்காரப்பேட்டையை அடைந்திருந்தேன். அங்கு கூடையில் வடை விற்றுக் கொண்டிருந்த அண்ணனிடம்... " ண்ணா இங்க அந்தப் பள்ளி..." "குக்கூ ஸ்கூல் தானே? அதோ அந்தத் தக்காளி மண்டியத் தாண்டி இடது பக்கம் திரும்புங்க. 5 கிமீ... காலைலேருந்து உங்கள மாதிரி ஆட்கள் நிறையப் பேரு போனாங்க. வடை சாப்பிடிறீங்களா... சூடா இருக்கு" . " நன்றி" சொல்லி வேண்டாம் என்பதாய் தலையாட்டி அந்த தக்காளி மண்டியைத் தாண்டி திரும்பினேன்.
உடைந்த தார்ச்சாலையைக் கடந்து, மண் சாலையில் பயணம் தொடர்ந்தது. வெயிலினால் சுணங்கிப் போயிருந்த முகம், மலையடிவாரத்திலிருந்து பரந்திருந்த அந்த நிலப்பரப்பைப் பார்த்ததும் சுறுசுறுப்பாகியது. பழைய மரத்தட்டிகளைக் கொண்டு செய்யப்பட்டிருந்த அந்த நுழைவு வாயில் அருகே, சாணியைக் கரைத்து மொழுகிக் கொண்டிருந்தார் அந்த அக்கா. தகிக்கும் வெயிலைப் பொருட்படுத்தாமல் சுறுசுறுப்பாய் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர், இந்தியா முழுவதிலிமிருந்து வந்திருந்த இயற்கைத் தன்னார்வலர்கள். 

ஒரு குழு ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த மண் பானைகளில் வெட்டிவேரையும், எலுமிச்சம் பழத்தையும் போட்டு நீரை நிரப்பிக் கொண்டிருந்தது. ஒரு குழு மாலை நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தது. ஒரு சிலர் அயர்ச்சியில் அந்தக் குடில்களில் உறங்கிக் கொண்டிருந்தனர். ஒரு கூட்டம் கிணற்றில் உற்சாகமாகக் குளித்துக் கொண்டிருந்தது. சின்னஞ்சிறு குழந்தைகள் வெயிலைப் பொருட்படுத்தாமல் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஒரு சில குழந்தைகள் தங்கள் உயரத்திற்கான சிறு கடப்பாரைகளைக் கொண்டு மண்ணைத் தோண்டி செடிகளை நட்டுக் கொண்டிருந்தார்கள். அங்கு யாருக்கும் எந்த அடையாளங்களும் இருக்கவில்லை. ஒருவொருக்கொருவர் உதவிக் கொண்டு, சிநேகப் புன்னகைகளைப் பரிமாறிக் கொண்டுமிருந்தார்கள். 

மெல்லிய தேகம், செருப்பில்லா கால்கள், அழுக்கடைந்த பருத்தி வேட்டி, சட்டை, முகம் முழுக்கப் புன்னகை... சிவராஜ் அண்ணன். புளியனூர் கிராமக் குழந்தைகளின் " சோட்டா பீம்" . நம்மாழ்வாரின் சீடன். 

" ஒவ்வொருக் குழந்தையும் ஒரு தூய்மையான ஆத்மா. நம்முடைய இன்றையக் கல்விச்சூழல் அவர்களை மொத்தமாக நசுக்குகிறது. குழந்தைகளைக் குழந்தைகளாகவே வளர்க்கும் ஒரு முயற்சி, அவர்களின் இயற்கையை இயற்கையோடு இணைக்கும் ஒரு முயற்சி தான் குக்கூ காட்டுப் பள்ளி. குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வியோடு, இயற்கை வழி விவசாயம் ,மருத்துவம்,அரசியல் குறித்த விவாதங்கள், விலங்குகள், பூச்சிகள், வானியல், நட்சத்திரம், குறித்த கற்பித்தல் , கூடை முடைவது, தையல் கலை ,காகிதம் தயாரிப்பது, மண்,மரம்,காகிதம்,சிரட்டை இவற்றைக் கொண்டு பொம்மைகள்,சிற்பங்கள் செய்வது,ஓவியம் வரைவது, பறவைகளின் சப்தம் கொண்டு இசைக் கோர்வை உருவாக்குவது,கதை சொல்லுவது,நாடகம் நடிப்பது,கூத்துப் பயிற்சிகள் என அவர்கள் உலகை அழகியலோடு தக்க வைக்கும் ஒரு இடம் தான் குக்கூ காட்டுப் பள்ளி..." என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அரவிந்த் குப்தா அங்கு வந்தார். 

அரவிந்த் குப்தா 1970களில் கான்பூர் ஐஐடியில் பட்டப்படிப்பு முடித்தவர். குப்பைகளிலிருந்து பலவிதமான பொம்மைகளை செய்யத் தொடங்கினார். இவரின் கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமைப் பெற்றால், கம்பெனிகள் கோடிகோடியாகக் கொட்டி கொடுத்திருக்கும். ஆனால், என் கண்டுபிடிப்புகள் குழந்தைகளுக்காவை. அதில் பணம் பண்ணும் நோக்கம் எனக்கில்லை என்று சொன்னவர். aravindguptatoys.com என்ற வலைதளத்தில் குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலான அறிவியல் விளக்கங்கள், கிட்டத்தட்ட 8 ஆயிரத்திற்கும் அதிகமான புத்தகங்களின் மின் - புத்தகங்களாக பதிவேற்றி, அதை யாரும் இலவசமாக பதிவிறக்கம் செய்யும் வசதியை ஏற்படுத்தியுள்ளார். 

"குழந்தைகள் அழகான விதைகளைப் போன்றவர்கள். அவர்களை விதைக்க இங்கு வளமான மண் தான் சரிவர இல்லை... " என இன்றைய கல்விச்சூழலில் பெரும் அரசியலை மிக எளிமையாக சொல்லி நகர்ந்தார். இப்படியான பல மனிதர்களால் நிறைந்திருந்தது குக்கூ.

மாலை... வெயிலின் தாக்கம் குறைந்து இதமாக இருந்தது. சில மரக்கட்டைகள் நாற்காலிகளாக மாறியிருந்தன. குழந்தைகள் பாய்களில் உட்கார்ந்துக் கொண்டனர். வேலு சரவணனின் "கடல் பூதம்" நாடகத்தின் சிரிப்பொலியில் தொடங்கிய நிகழ்ச்சி, "நிலமற்றவர்களின் நிலம்" என்ற கோவை ஜெயராஜின் நாடகத்தோடு உணர்ச்சிப்பூர்வமாக முடிந்தது. 

"குக்கூ குழந்தைகளுக்கான இடம் மட்டுமே அல்ல. அய்லான்களும், இரோம் ஷர்மிளாக்களும், நீங்களும், நானும்... நிலமற்ற யாவருக்குமான இடம். கல்வி நல்சூழல் பறிக்கப்பட்ட குழந்தைகளின் அதிகாலையாகவும், மறக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட முதியவர்களுக்கான ஓய்விடமாகவும், தாலாட்டும் அந்தியாகவும் இந்நிலம் இருக்கும். இது நிலமற்றவர்களின் நிலம். யாரும் இங்கு வரலாம். இது எல்லோருக்குமான இடம். " என்று விடைபெறும் நேரம், கைகுலுக்கி சிவராஜ் நம்மிடம் சொன்னார். அந்த இரவில் அடுத்த நாளைக்கான நெருக்கடிகள் இருந்த பலரும் கிளம்பினார்கள்... அது இல்லாதவர்களும், ஏதுவும் இல்லாத சிலரும் குக்கூவிலேயே தங்கினார்கள். "குக்கூ"... சொல்லிப் பாருங்கள். அந்த சத்தம் ஒருவித அமைதியை, நிம்மதியை, மகிழ்ச்சியை, பரவசத்தைக் கொடுக்கிறது.

 - இரா. கலைச் செல்வன். 

அடுத்த கட்டுரைக்கு