Published:Updated:

இந்தச் சிறுமியின் டூடுலுக்கு கூகுள் அளித்த பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா? #GoogleDoodle

இந்தச் சிறுமியின் டூடுலுக்கு கூகுள் அளித்த பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா? #GoogleDoodle
இந்தச் சிறுமியின் டூடுலுக்கு கூகுள் அளித்த பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா? #GoogleDoodle

லகின் மிகப்பெரிய தேடுதல் தளமான கூகுள் உலகின் ஒவ்வொரு முக்கிய நிகழ்வின் போதும், பிரபலங்களின் பிறந்த நாளன்றும் தனது முகப்புப் பக்கத்தில் உள்ள லோகோவில் அதைக் குறிப்பிடும்படி சிறிய மாற்றம் செய்து கவுரவப்படுத்தும். இதை கூகுள் டூடுல் என அழைக்கிறார்கள். கூகுள் டூடுல் என்பது உலகம் முழுக்க கிட்டத்தட்ட ஒரு கவுரவச் சின்னமாகவே பார்க்கப்படுகிறது. புத்தாண்டுப் பிறப்பு தொடங்கி வருடத்தின் இறுதி நாள் வரை கூகுள் வெளியிடும் டூடுல் ஒவ்வொன்றும் தனிச்சிறப்புடன் இருக்கும்.

மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் ஆண்டுதோறும் 'டூடுல் 4 கூகுள் (Doodle 4 Google)' என்ற பெயரில் போட்டிகளை நடத்தி வருகிறது. அமெரிக்கா முழுவதும் கடந்த ஆண்டில் நடைபெற்ற போட்டியில், எதிர்காலத்தில் பார்க்க விரும்புவதை மாணவர்களிடம் வரையச் சொன்னார்கள். இந்தப் போட்டியின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் கனெடிகட் மாகாணத்தைச் சேர்ந்த சாரா ஹாரிசன் எனும் 15 வயதுச் சிறுமி பரிசை வென்றிருக்கிறார்.

'A Peaceful Future' என்ற தலைப்பின் கீழ் சாரா வரைந்த ஓவியத்துக்குப் பரிசாக 30 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.19.44 லட்சம்) மதிப்புள்ள உதவித்தொகையும், அவர் படிக்கும் பள்ளிக்கு 50 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.32.40 லட்சம்)  மதிப்புள்ள தொழில்நுட்பக் கல்விக்கான கொடையையும் கூகுள் வழங்கியிருக்கிறது. மேலும், இந்த ஓவியத்தைத் தனது லோகோவில் மாற்றம் செய்து டூடுளாகவும் வெளியிட்டுக் கவுரவப்படுத்தியிருக்கிறது கூகுள்.

வெவ்வேறு மதம் மற்றும் இனத்தைச் சேர்ந்த சிறுவர்களும் ஒற்றுமையாக இருப்பது போன்று இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. "எனது எதிர்கால உலகம் என்பது அனைவரும் மதம், பாலினம், இனம், நிறப்பாகுபாடு போன்ற அனைத்தையும் கடந்து ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தும்படி இருக்க வேண்டும். அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதோடு, யார் எங்கு சென்றாலும் அவர்களுக்கான தனித்துவத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்பது எனது எதிர்காலக் கனவு" என்ற வரிகளோடு தனது ஓவியத்தைப் பதிவு செய்திருக்கிறார் சாரா.

மதம், இனம், நிறப்பாகுபாடு காரணமாக உலகம் முழுவதும் அமைதியின்மை நிலவும் இந்நேரத்தில், பன்முகத்தன்மை கொண்ட வடிவில் சாராவின் ஓவியம் இருந்ததால் அதைத் தேர்வு செய்ததாக கூகுள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. தனது ஓவியம் பரிசு வென்றது மிகுந்த உந்துதலையும், மகிழ்ச்சியையும் அளிப்பதாக சாரா தெரிவித்துள்ளார்.

டூடுல் குறித்த சில சுவாரசியத் தகவல்கள் :

  • 1998-ம் ஆண்டிலிருந்து கூகுள் தனது முகப்புப் பக்கத்தில் டூடுளை வெளியிட்டு வருகிறது.
  • ஆரம்ப காலத்தில் டூடுல்கள் வெளியாட்கள் மூலம் வரையப்பட்டிருக்கின்றன. அதன் பின் டூடுல்களை வரைவதற்காக 'Doodlers' என்ற பெயரில் தனியொரு குழுவே இயங்கி வருகிறது.
  • 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஐசக் நியூட்டனை கவுரவப்படுத்தும் விதமாக வெளியிட்ட டூடுல் தான், முதல் அனிமேட்டட் டூடுல் ஆகும்.
  • அதிகமான கூகுள் டூடுல்களை வரைந்திருப்பவர் என்ற பெருமை ஜெனிஃபர் ஹாம் என்ற சீன வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கப் பெண்மணிக்கே சொந்தம்.
  • இதுவரை பல்லாயிரக்கணக்கான டூடுல்களை கூகுள் வெளியிட்டுள்ளது. https://www.google.com/doodles என்ற இணையதள முகவரியில் அவற்றை மொத்தமாகப் பார்வையிடலாம்.

இந்தியர்களைக் கவுரவப்படுத்தும் விதமாக கூகுள் தனது முகப்புப் பக்கத்தில் வெளியிட்ட சில முக்கியமான டூடுல்களை இங்கு பார்வையிடலாம்.

- கருப்பு