Published:Updated:

மாணவர்களுக்கு சட்டைப் பொத்தான்களை தைக்கக் கற்றுத்தரும் அரசுப் பள்ளி ஆசிரியர்!

மாணவர்களுக்கு சட்டைப் பொத்தான்களை தைக்கக் கற்றுத்தரும் அரசுப் பள்ளி ஆசிரியர்!
மாணவர்களுக்கு சட்டைப் பொத்தான்களை தைக்கக் கற்றுத்தரும் அரசுப் பள்ளி ஆசிரியர்!


‘தபால் பெட்டி!’ இந்த வார்த்தைக்கு மாணவர்களிடையே என்ன அர்த்தம் தெரியுமா? பள்ளி அல்லது வேறு இடங்களில் வழுக்கு மரம் விளையாட்டில் சறுக்கி, சறுக்கி ஆடும் மாணவருடைய கால்சட்டையின் பின்புறம் கிழிந்துவிடும். அந்த மாணவனையே மற்ற மாணவர்கள் தபால் பெட்டி என்று பட்டப் பெயர் வைத்துகூப்பிடுவார்கள். சிறுவயதில் உங்களையும் யாரேனும் இப்படி அழைத்திருக்கக்கூடும்.

மாணவர்கள் விளையாட்டின் ஆர்வத்தில் தங்கள் ஆடைகளை அழுக்காவது மட்டுமல்ல கிழிந்துபோவதுகூட தெரியாமல் விளையாடுவார்கள். இதில் நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லை என்றாலும் கிராமத்தில் அப்படி விளையாடுபவர்களின் எண்ணிக்கை அதிகம். அப்படிப்பட்ட கிராமங்களில் ஒன்றுதான் குடியாத்தம் ஒன்றியத்தில் இருக்கும் ஆர்.வெங்கடாபுரம்.

இந்த ஊரில் இருக்கும் ஆதி திராவிட நல ஆரம்பப் பள்ளி மாணவர்கள் தினந்தோறும் சரியான நேரத்துக்கு பள்ளிக்கு வந்தாலும், அவர்களின் ஆடைகள் சரியாக இருப்பதில்லை. பொத்தான்கள் பிய்ந்தும், ஓரத்தில் கிழிந்தும் இருக்கும். இவற்றைச் சரிசெய்யச் சொல்லி ஆசிரியர்கள் பலமுறை சொல்லியும் எந்த மாற்றமும் இல்லை. அதற்கு ஒரு முடிவு எடுத்தார் அந்தப் பள்ளியின் ஆசிரியர் வி.டி.ஜானகி ராமன்.

“எங்கள் பள்ளியின் மாணவர்கள் நன்றாக படிக்கக் கூடியவர்கள். சொன்னப் பேச்சைக் கேட்பவர்கள்தான். ஆனால் இந்த ஆடை விஷயம் மட்டும் விதிவிலக்கு. தமிழ்நாடு அரசு முதல் பருவத்தின்போது இரண்டு செட் சீருடைகளும் அடுத்தடுத்த இரண்டு பருவங்களின்போது தலா ஒரு செட் சீருடைகளையும் தருகிறது. மாணவர்களுக்கு இது போதுமான எண்ணிக்கைத்தான் என்றாலும் விளையாட்டு மும்மரத்தில் சட்டையைப் பற்றி கவலைப் படுவதில்லை. சிலரின் சட்டைகளின் ஒரு பொத்தான்கூட இல்லாமல் இரண்டு இடங்களில் ஊக்குகள் மாட்டுக்கொண்டு பள்ளிக்கு வருவார்கள். அவர்களின் பெற்றோர்களின் பெரும்பாலோனோர் தினக்கூலி வேலைக்குச் செல்பவர்கள். வேலை முடிந்து களைத்து வருபவர்கள். அதனாலோ என்னவோ பிள்ளைகளின் ஆடைகளைச் சீர்ப்படுத்தி அனுப்புவதில் போதுமான அக்கறை காட்டுவதில்லை என்று நினைக்கிறேன்.

மாணவர்களிடம், 'ஆடையைச் சரிச் செய்து வா' எனத் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருப்பதால் மட்டுமே இந்தப் பிரச்னை தீர்ந்துவிடாது என முடிவுக்கு வந்தேன். பொத்தான்கள், நூல் கண்டுகள், ஊசி முதலியவற்றை வாங்கி வந்தோம். அவற்றைக் கொண்டு ஆடைகளிலிருந்து விழுந்த பொத்தான்களுக்குப் பதிலாக வேறு பொத்தான்களை எப்படி தைப்பது எனக் கற்றுத்தந்தேன். மாணாவர்களும் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டனர். உடனே, தன் சட்டையில் ஒரு பொத்தானை வைத்து தைத்துப் பார்த்தான் ஒரு மாணவன்.

ஒவ்வொரு மாணவருக்கும் பத்து பொத்தான்கள், ஊசி, நூல்கண்டு ஆகியவற்றைக் கொடுத்தேன். விடுமுறை நாட்களில் தங்கள் ஆடைகளைச் சரிசெய்யச் சொல்லியுள்ளேன். பொத்தான்களை தைப்பதோடு, சின்னக் கிழிசலையும் தைத்துக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளேன்." என்கிறார் ஜானகிராமன்.

மாணவர்களுக்கு கல்வியைப் போலவே பல்வேறு விஷயங்களை அளித்து வருகின்றனர் இந்தப் பள்ளி ஆசிரியர்கள். அறிவியல் அறிஞர்கள், தேசத் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர்களின் பிறந்த நாள் வரும்போது, அவர்களின் உருவத்தை பள்ளி மைதானத்தில் பிரமாண்டமான ஓவியங்களை வரைகின்றனர் மாணவர்கள்.

“மாதம் தொடங்கியதுமே அந்த மாதத்தில் பிறந்த சிறப்பானவர்கள் யார் என்று குறித்துக்கொள்வோம். அவர்களில் ஓவியம் வரையத் தேர்ந்தெடுத்தவர்களின் உருவத்தை கரும்பலகையில் வரைவேன். அதை மாணவர்கள் தங்கள் நோட்டில் வரைந்து பழகுவார்கள். பின், மைதானத்தில் கோல மாவினைக் கொண்டு பிரமாண்டமான அளவில் அந்த உருவத்தை வரைவார்கள். அவர்கள் வரைந்துகொண்டிருக்கும்போது அந்தத் தலைவர் பற்றிய செய்திகளைக் கூறிக்கொண்டே இருப்பேன். இப்படி வரையச் சொல்வதன் மூலம் அந்தத் தலைவர் அல்லது விஞ்ஞானியின் முகம் மாணவர்களின் மனதில் தெளிவாக பதிந்துவிடும்." என்கிறார் ஜானகிராமன்.

கல்வியோடு மாணவர் நலன் சார்ந்த விஷயங்களின் கவனம் காட்டும் ஜானகிராமன் போன்ற ஆசிரியர்கள் அதிகரிக்க வேண்டும்.

- வி.எஸ்.சரவணன்.

அடுத்த கட்டுரைக்கு