Published:Updated:

ஜெர்மன் மொழி, ஜெர்மனியில் படிப்பு .. ஏராளமான வேலைவாய்ப்பு! - இதோ சில டிப்ஸ்! #VikatanExclusive

SAKTHIVEL MURUGAN G
ஜெர்மன் மொழி, ஜெர்மனியில் படிப்பு .. ஏராளமான வேலைவாய்ப்பு! - இதோ சில டிப்ஸ்! #VikatanExclusive
ஜெர்மன் மொழி, ஜெர்மனியில் படிப்பு .. ஏராளமான வேலைவாய்ப்பு! - இதோ சில டிப்ஸ்! #VikatanExclusive

"ஜெர்மனியில் ஆண்டுக்கு ஒரு லட்சம் இன்ஜினியர்கள் தேவைப்படுகிறார்கள். ஜெர்மன் மொழி தெரிந்தால் எளிதில் ஜெர்மனியில் வேலை வாய்ப்பினை பெற முடியும்" என்கிறார் சென்னையில் அமைந்துள்ள ஜெர்மன் மொழிக்கான பயிற்சி மையத்தின் தலைவர் பிரபாகர் நாராயணன். 

"தற்போது ஜெர்மனி மொழி கேந்திரியா வித்யாலயா பள்ளிகளிலும், சிபிஎஸ்இ பள்ளிகளிலும் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. சில மாநில பள்ளிகளிலும் பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பிலும் ஜெர்மன் மொழி சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஜெர்மன் மொழியினை கற்றுக்கொள்ள ஏ1, ஏ2, பி1, பி2, சி1, சி2 என ஆறு நிலைகள் (6 Level)  இருக்கின்றன. 

பிளஸ் 1, பிளஸ் 2 ஜெர்மன் மொழி சொல்லிக்கொடுக்கப்படும் பள்ளியில் ஏ1 நிலைக்குப் படிப்பார்கள். இந்த ஏ1 நிலையைக் கோடைக்காலத்தில் ஐந்து வாரங்களில் சொல்லி கொடுத்து விடுகிறோம். ஆகையால், பள்ளியில் ஜெர்மன் படிப்பவர்கள் கோடைக்காலத்திலேயே எங்களிடம் படித்து முடித்து விட்டு இதர பாடங்களில் படிப்பதற்குக் கவனம் செலுத்தலாம்.  

14-வயதுள்ள குழந்தைகள் பி2 நிலை வரை படிக்கிறார்கள். இங்கு பி2 நிலையில் படிப்பவர்கள் ஜெர்மனியில் எளிதாக இளநிலை பட்டப்படிப்புக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம். அங்கு இளநிலை பட்டப்படிப்புகள் ஜெர்மன் மொழியிலேயே சொல்லி கொடுப்பார்கள். பி2 நிலைக்கு மாணவர்களைக் கொண்டு வர நிறையச் சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகிறோம். இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் இங்கிருந்து ஜெர்மனி சென்று படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். 

ஜெர்மனியில் ஐஐடிக்கு இணையாகவும், உலக அளவில் உயர்ந்த மதிப்பைப் பெற்ற பல தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்க வாய்ப்பு உள்ளது. இதர நாடுகளுடன் ஒப்பிடும் போது இங்குப் படிப்புச் செலவு மிகவும் குறைவு. இங்கு இளநிலை பட்டப்படிப்புக்கு உதவித் தொகை எதுவும் வழங்குவதில்லை.  முதுநிலை பட்டப்படிப்புக்கு உதவித்தொகை வழங்குகிறார்கள். 

ஜெர்மனியில் முதுநிலை பட்டப்படிப்பு படிக்கச் செல்பவர்கள் பி2 லெவல் முடித்துச் சென்றால் சிறப்பு. இந்த லெவல் முடித்ததும் வெளிநாட்டில் படிக்க செல்வதற்கு டொபல் தேர்வு எழுதுவது போல் TestDaF என்ற தேர்வை எழுத வேண்டும். ஜெர்மனியில் குறைந்த செலவில் சொல்லிக்கொடுப்பதற்கு காரணம், இங்குப் படிப்பவர்கள் குறிப்பிட்ட காலம் வரை அங்கேயே பணியாற்ற வேண்டும் என்று விதிமுறை இருக்கிறது. எங்கள் ஊரில் படித்து விட்டு வேறு நாட்டில் சென்று வேலை பார்த்தால் எங்கு என்ன பயன் என்று கேட்கிறார்கள். இரண்டு வருடங்கள் படித்தால் ஆறு ஆண்டுகள் தொழிற்சாலையில் பணியாற்ற வேண்டும். பல்கலைக்கழகத்தில் படிப்பு ஆங்கிலத்தில் சொல்லிக்கொடுத்தாலும் தொழிற்சாலையில் பணியாற்றும் போது ஜெர்மனியில் பேசியாக வேண்டும். ஆகையால், ஜெர்மனி மொழி படித்தால் வேலை வாய்ப்பினை பெறுவது எளிது. 

ஜெர்மன் மொழி ஆசிரியராக வேண்டும் என்றால் அவர்களுக்கு இலவசமாகச் சொல்லிக்கொடுக்கிறோம்.  ஆசிரியராகப் பணியாற்ற வேண்டும் என்றால் சி2 முடித்திருக்க வேண்டும். நாங்கள் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஆசிரியர்களாக இருப்பவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கிறோம். இதனைப் படிப்பதற்கு உதவித்தொகையினை வழங்குகிறோம். ஆர்வம் உள்ளவர்கள் எங்களது அலுவலகமான சென்னையில் உள்ள மேக்ஸ் முல்லர் பவன் தொடர்புகொள்ளலாம்" என்றார் பிரபாகர் நாராயணன். 

"ஜெர்மனிக்கு உயர்கல்வி படிக்க பெரிய அளவில் பணம் தேவையில்லை. பல பல்கலைக்கழகங்களும் எந்த விதமான கட்டணமும் இல்லாமல் சொல்லிக்கொடுக்கின்றன" என்கிறார் ஃப்ளை ஸ்டேடி ஓவர்சீஸ் நிறுவனத்தின் இயக்குநர் முகமது ரியாஸ். 

இவர் ஜெர்மனியில் உயர்கல்வி சேர வழிகள் என்னென்ன என்பதை விளக்கினார். "மாணவர்கள் குறிப்பிட்ட அளவு மதிப்பெண்ணைப் பெற்றிருந்தால் பல பல்கலைக்கழகங்களில் கல்வி கட்டணத்தை பெறுவதில்லை அல்லது மிகக்குறைந்த அளவே கட்டணத்தை பெறுகின்றன. பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, கல்லூரியில் பெற்ற மதிப்பெண்களின் பெற்ற விவரத்தையும், மற்றும் IELTS (International English Language Testing System) ஆங்கில தேர்வுக்கான மதிப்பெண், ஜெர்மன் மொழி படித்து பெற்ற சான்றிதழ்களையும் அங்குள்ள பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதனுடன் உயர்கல்வி ஏன் ஜெர்மனியில் உள்ள அந்தப் பல்கலைக்கழகத்தை தேர்ந்தெடுக்கிறோம் என்பதற்கான விரிவான கடிதத்தையும், ரெஜ்யூம் போன்றவற்றை அனுப்பி வைக்க வேண்டும். இதனை எல்லாம் மதிப்பீடு செய்து பல்கலைக்கழகத்தில் இருந்து சேர்வதற்கான வாய்ப்பினை வழங்குவார்கள். 

ஜெர்மனியில் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகமும் இளநிலை பட்டப்படிப்பில் குறிப்பிட்ட சதவீத அளவு மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்கவே அனுமதிப்பார்கள். சில குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களில் ஒரு சில துறைகளிலும், ஒரு சில படிப்பில் மட்டும் சேர கடுமையான போட்டி இருக்கும். அந்தப் படிப்புகளுக்கும் குறிப்பிட்ட மதிப்பெண்ணைப் பெற்றிருக்க வேண்டும் என்று நிர்ணயித்து இருக்கிறார்கள். சிலவற்றில் IELTS தேர்வில் குறிப்பிட்ட அளவு மதிப்பெண்ணையும், ஜெர்மன் மொழியில் ஏ1 லெவலை முடித்திருந்தால் போதும் என்கிறார்கள். இந்தத் தகவலை தெரிந்துகொண்டு பல்கலைக்கழங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பெரும்பாலான வெளிநாட்டுக் கல்வி ஆலோசனை நிறுவனங்கள் மாணவர்களை அனுப்பி வைத்து கல்வி நிறுவனங்களில் இருந்து கமிஷன் பெற்றுக்கொள்வார்கள். ஆனால் ஜெர்மனியில் அது போல் எந்த வகையிலும் பணத்தைப் பெறுவதில்லை என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். மேலும், ஜெர்மனியில் சென்று படிக்கும் போது நகரத்தில் தங்கி படித்தால் வீட்டின் வாடகை மற்றும் இதர செலவுகள் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு ஒரு வருடத்தில் ஏழு லட்ச ரூபாய் வரை செலவாகும். அதனை வங்கியில் கடனாகப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஜெர்மனியில் 650 யூரோ மட்டும் தான் வங்கியில் இருந்து எடுக்க முடியும். ஜெர்மனியில் படித்தால் அங்கேயே வேலை வாய்ப்பினையும் பெற்று விட முடியும். இதனை எல்லாம் செய்தாலே ஜெர்மனியில் சென்று படிப்பது எளிதாகும்" என்கிறார் முகமது ரியாஸ். 

நம் நாட்டிலும் அறியப்படாத பல துறைகள் உள்ளன. இல்லை, வெளிநாட்டில் பணிபுரியும் ஆர்வம் இருந்தால் ஜெர்மனியையும் கருத்தில் கொள்ளலம். உலக அளவில் பொறியியல் துறையிலும், ஆட்டோ மொபைல் பிரிவிலும் புகழ்பெற்று விளங்குகிறது ஜெர்மனி. நீங்களும் ஜெர்மனி சென்று தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ளலாம். 

-ஞா. சக்திவேல் முருகன்