Published:Updated:

பிளாஸ்டிக் சாப்பிடும்‌ மீன்களை நாம்‌ சாப்பிட்டால்..? அதிர்ச்சியூட்டும் உண்மைகள்

பிளாஸ்டிக் சாப்பிடும்‌ மீன்களை நாம்‌ சாப்பிட்டால்..? அதிர்ச்சியூட்டும் உண்மைகள்
பிளாஸ்டிக் சாப்பிடும்‌ மீன்களை நாம்‌ சாப்பிட்டால்..? அதிர்ச்சியூட்டும் உண்மைகள்

தயாராகுங்கள். கடலுக்குள் ஒரு பயணம் போகப்போகிறோம். சுவாசிக்க ஆக்ஸிஜன் மாஸ்க். முதுகில் ஆக்ஸிஜன் சிலிண்டர். அது கிட்டத்தட்ட 22 கிலோ எடை. அந்த நீல நிறப் படகின் பெயர் "ஜேம்ஸ் பாண்ட்". பாண்டிச்சேரி துறைமுகத்திலிருந்து சில கிலோ மீட்டர் பயணித்து இந்த இடத்தை அடைந்திருக்கிறோம். அலைகளில் ஆர்ப்பரிப்பில்லாத நடுக்கடல். சுற்றிலும் நீலக் கடல், மேலே  நீல வானம். காற்றின் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருக்கிறது. வெயில் அத்தனை உக்கிரமாக இல்லை. பின்பக்கமாக திரும்பி உட்கார்ந்து, இரண்டு கால்களையும் நேராக தூக்கி அப்படியே கடலுக்குள் விழுகிறோம்.  கொஞ்சம் படபடப்பாகத் தான் இருக்கிறது. சில நிமிடங்கள் படகின் கயிற்றைப் பிடித்தபடியே இருந்து... ஒரு மூச்சை இழுத்து அப்படியே கடலுக்குள் மூழ்குகிறோம். காற்றின் சத்தம் கேட்கவில்லை. வெளியிலிருந்த பளிச் வெளிச்சம் குறையத் தொடங்குகிறது. 

படபடப்பு குறையத் தொடங்குகிறது. ஆழ்கடலின் அழகைக் கண்கள் பார்க்கத் தொடங்குகின்றன. பரந்து, விரிந்திருக்கும் கடல். கொஞ்சம் குளிர்ச்சியாக இருக்கிறது மஞ்சள் நிற வால், உடல் முழுக்க சாம்பல் நிறம் என இருக்கும் அந்த மீன்கள்... நிச்சயம் ஒரு நூறு மீன்களாவது இருக்கும். அப்படியே நம் அருகே ஓடுகின்றன. கொஞ்சம், கொஞ்சமாக உள்ளே போகிறோம். கிட்டத்தட்ட 60 அடி ஆழத்தை அடைந்துவிடுகிறோம். மண்ணில் கால்கள் படுகின்றன. அத்தனை மென்மையாக இருக்கிறது மண். அழகான நண்டுகள் நகர்ந்துக் கொண்டிருக்கின்றன. உலகை மறந்து, அத்தனை ஆழத்தில் அந்த அற்புதமான உணர்வை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென அது கண்களில் படுகிறது. ........... ரீஃபைண்ட் சன்பிளவர் ஆயில் பாக்கெட். அங்கிருந்த சிறு பாறையின் இடுக்கில் அந்தப் பிளாஸ்டிக் கவர் மிதந்து வந்து நிற்கிறது. அந்த இடுக்கிலிருந்து வெளிவர ஒரு மீன் முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அது போராடிக் கொண்டிருக்க, நம்மை அழைத்து வந்த பயிற்சியாளர் "டெம்பிள் அட்வெஞ்சர்ஸ்" அரவிந்த் , நீந்திச் சென்று அந்த பிளாஸ்டிக் கவரை எடுத்து அந்த மீனை விடுவிக்கிறார். 

மீண்டும் கொஞ்ச தூரம் நீந்துகிறோம். இப்படியாக ஆழ்கடலின் அழகோடு ஆங்காங்கே, அந்த உயிரினங்களின் உயிரை வாங்கும் பிளாஸ்டிக் பொருட்கள் வந்தபடியே இருக்கின்றன. அரவிந்தும் தன்னால் இயன்ற அளவிற்கு அவைகளை அள்ளிக்கொண்டே இருக்கிறார். 40 நிமிடங்கள் கழித்து படகிற்கு வருகிறோம். ஸ்கூபா அனுபவத்தைப் பரவசத்தோடு அனைவரும் பகிர்ந்துக் கொண்டார்கள். எனக்கு மட்டும் ஏனோ, அங்கிருந்த குப்பைகள் குறித்த எண்ணமே பெரிய கவலையைக் கொடுத்துக் கொண்டிருந்தது. "ஜேம்ஸ் பாண்ட்" கரைக்கு திரும்பும் சமயம், ஒரு பெரிய ஆமை மிதந்தபடியே வந்துக் கொண்டிருந்தது. அதன் குடல் வெளியே தொங்கிக் கொண்டிருந்தது. இறந்து நாட்களாகியிருந்தது. அரவிந்த் அதனருகே சென்று பார்த்தார். கால்களில் மீன் வலைகள் சிக்கியிருந்தன. அதனால் தான் அந்த ஆமை இறந்திருந்தது. படகு கடலில் மிதந்துக் கொண்டிருக்க சில விஷயங்களைப் பேச ஆரம்பித்தார் அரவிந்த்,

" நமக்கு இப்போதான் நிலத்தையே சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணமே வர ஆரம்பித்திருக்கிறது. ஆனால், ஆழ்கடல் படு மோசமான நிலையை எட்டிக் கொண்டிருக்கிறது. இது குறித்து யாருக்கும் தெரிவதில்லை. உலகம் முழுக்க வருடத்திற்கு, 80 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலுக்குள் வந்து சேர்கின்றன. அது கடல் உயிர்களுக்குப் பேராபத்துக்களை விளைவிக்கின்றன. ஐரோப்பிய நாடுகளிலேயே கடல் வாழ்க்கை மோசமான நிலையில் இருக்கிறது எனும் போது, நம் நாட்டில் சொல்லவே தேவையில்லை. 
கடற்கரையை சுத்தமாக வைப்பதே கஷ்டமாக இருக்கிறது. கடலுக்கடியில் இருக்கும் குப்பைகளை யார் கண்டு கொள்ளப் போகிறார்கள்?.

2008ல் " ஆழ் கடல் சுத்தப்படுத்துதல்" என்ற பெயரில் நானும் என் நண்பர்கள் இருவருமாக முதன் முதலில் பாண்டிச்சேரியின் குறிப்பிட்ட இந்த "டெம்பிள் ரீஃப்" பகுதியை சுத்தப்படுத்தினோம். மூன்று பேர் மட்டும் சேர்ந்து 250 கிலோ அளவிற்கான குப்பைகளை அப்புறப்படுத்தினோம். ஆழ்கடலை சுத்தப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. பயிற்சி பெற்ற "டைவர்"களால் மட்டுமே இதைச் செய்ய முடியும். நாங்கள் இதை உயிரைப் பணையம் வைத்து செய்கிறோம். 10 பேர் கீழே போய் சுத்தப்படுத்துவார்கள். அவர்களுக்கு மேல், 5 பேர், அவர்களுக்கு மேல் 3 பேர் என அடுக்கடுக்காக இருந்தபடி வேலை செய்வோம். யாராவது வலையில் மாட்டிக் கொண்டாலோ, அல்லது ஆக்ஸிஜன் தீர்ந்து போவது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டாலோ மற்றவர் வந்து காப்பாற்றுவார்கள். இப்போது, வருடத்திற்கு ஒரு முறை 30 பேர் சேர்ந்து ஆழ் கடலை சுத்தப்படுத்தும் வேலைகளை செய்து வருகிறோம்..." என்று சொல்லவும் "ஜேம்ஸ்பாண்ட்" கரையை அடையவும் சரியாக இருந்தது. 

அரவிந்த் சொன்னதைத் தொடர்ந்து, பிளாஸ்டிக்கினால் ஆழ்கடலில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்த சில விஷயங்களை ஆராய்ந்தோம். பல அதிர்ச்சிகரமான விஷயங்கள் தெரியவந்தன.

கடலில் மீன்களைவிட, பிளாஸ்டிக் குப்பைகள் அதிகம்!

கடந்த வருடம் பிரிட்டனில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில், அங்கு பிடிக்கப்படும் மீன்களில் மூன்றில், ஒரு மீனின் வயிற்றில் பிளாஸ்டிக் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.  உலகம் முழுக்க பரந்து, விரிந்திருக்கும் கடற்கரையில் காலாட நடந்து சென்றால் ஒரு அடிக்கு 5 பிளாஸ்டிக் பைகளை நிரப்பும் அளவிற்கான குப்பைகள் இருக்கின்றன. 

இதே நிலைத் தொடர்ந்தால், 2050ல் 99% கடற்பறவைகள் பிளாஸ்டிக் சாப்பிட்டிருக்கும், கடலில் மீன்களின் எண்ணிக்கையைவிட பிளாஸ்டிக் குப்பைகள் தான் அதிகமிருக்கும். வருடத்திற்கு 10 லட்சத்திற்கும் அதிகமான கடல் உயிரினங்கள் பிளாஸ்டிக்கினால் உயிரிழக்கின்றன. கடலில் சேரும் பிளாஸ்டிக் குப்பைகளில் 80% நிலத்திலிருந்து வருகிறது, 20% கடலில் பயணிக்கும் கப்பல்களால் வருகிறது. 

நாம் போடும் பிளாஸ்டிக் மீண்டும் நமக்கே!

உலகளவில் பெரும்பாலான மீன்கள், அதிகப்படியான பிளாஸ்டிக்கை உண்கின்றன. அந்தப் பிளாஸ்டிக் அதன் குடலிலேயே தங்கிவிடுகின்றன. அந்த மீன்களை மனிதர்கள் சாப்பிடும் போது, அந்த பிளாஸ்டிக் கெமிக்கல் மீண்டும் நம் வயிற்றுக்குள் போகிறது. " மீன்களின் குடலைத் தான் நீக்கிவிடுகிறோமே?" என்று கேட்கலாம். ஆனால், 2015ம் ஆண்டு ஜூலையில் "பிளைமோத் மரைன் லேபில்" மேற்கொண்ட ஆராய்ச்சியில் கடலில் வாழும் நுண்ணியிரிகள் கூட பிளாஸ்டிக்கை உண்ணும் விநோதத்தைக் கண்டனர். சில மீன்களின் குடலில் பிளாஸ்டிக் செரித்தாலும், அந்தப் பிளாஸ்டிக்கின் ரசாயனங்கள் அதன் உடலில் தங்கும். அதை மீண்டும் மனிதர்கள் சாப்பிடும் போது, அது பெரும் கேடுகளை விளைவிக்கும். 

கடலில் நாம் தூக்கிப்போடும் ஒவ்வொரு பிளாஸ்டிக் துண்டிற்கும் நாம் பொறுப்பாகிறோம். ஒன்று கொலைகாரனாக அல்லது தற்கொலை செய்து கொள்பவனாக. இதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், ஒரு பிளாஸ்டிக் கவரை முகத்தை சுற்றி இறுக கட்டிவிடுகிறோம். கைகளை உபயோகப்படுத்த முடியாது. சில நொடிகள் இருக்க முடியுமா நம்மால்? ஆனால், நாம் போடும் பிளாஸ்டிக் கவர்கள் ஒரு ஆமையின் முகத்தையோ, மீனின் முகத்திலோ அப்படித் தான் சிக்குகின்றன. என்ன செய்வதென தெரியாமல், மூச்சுத் திணறி அந்த ஆழ்கடலில் அமைதியாய் அவை மரணித்து விடுகின்றன. இது கொலை. அடுத்ததாக, பிளாஸ்டிக்குகளை சாப்பிடும் மீன்களை, அதன் ரசாயனங்களோடு நாம் சாப்பிடுகிறோம். இது தற்கொலை. 

இது ஒரு உண்மைக் கதை... அல்பட்ராஸ் என்ற அந்தக் கடற்பறவை நெடுந்தூரம் பறந்து, பறந்து தன் குஞ்சிற்கு உணவை எடுத்து வந்து ஊட்டுகிறது. 90 நாட்களே ஆன, அந்தப் பறவைக் குஞ்சு கரையில் இறந்து விழுகிறது. தன் குழந்தை இறந்ததைக் கண்டு நீண்ட நேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தது அந்த தாய்ப்பறவை. இறந்த அந்தப் பறவையை ஒரு மாணவர் எடுத்து ஆராய்ச்சி செய்கிறார். அதன் வயிற்றில் 276 பிளாஸ்டிக் துண்டுகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். அத்தனை நாட்களும் பிளாஸ்டிக் துண்டுகளை, உணவு என எண்ணி அந்த தாய்ப்பறவை குஞ்சிற்கு கொடுத்தது வந்துள்ளது... தன்னை அறியாமலேயே, தன் குழந்தைக்கு விஷத்தை ஊட்டியுள்ளது. உலகின் மிகத் துயரமான மரணம் அது... 

- இரா. கலைச் செல்வன்.