Published:Updated:

இதைப் படிக்காதவர்களுக்கு ஏற்படும் நஷ்டத்துக்கு மிஸ்டர். K பொறுப்பல்ல!  #MondayMotivation #MisterK

இதைப் படிக்காதவர்களுக்கு ஏற்படும் நஷ்டத்துக்கு மிஸ்டர். K பொறுப்பல்ல!  #MondayMotivation #MisterK
இதைப் படிக்காதவர்களுக்கு ஏற்படும் நஷ்டத்துக்கு மிஸ்டர். K பொறுப்பல்ல!  #MondayMotivation #MisterK

நான்  மிஸ்டர் K.. ’Only For You' என்ற ஒரு குறிப்பில் என் மேசையில் ஒரு கடிதம் இருந்தது. கடிதம் என்று சொல்ல முடியாது... துண்டு அறிவிப்பு எனச் சொல்லலாம். 

திறந்து பார்த்தேன். நண்பன் பரிசல் கிருஷ்ணாதான் எழுதியிருந்தான். 'அவசர வேலையாக ஊருக்கு செல்கிறேன். நாளைக்கான #MondayMotivation-ஐ நீயே எழுதிவிடு’  - இதுதான் அந்தக் குறிப்பில் இருந்தது. 

பாவி. இதை அவன் வாட்ஸ் அப்பிலோ, மெசேஜிலோ, அல்லது ஒரு போன்காலில்கூடச் சொல்லியிருக்கலாம். ஆனால் இப்படி ஒரு குறிப்பெழுதிச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

அவன் சொல்ல வந்ததை, எப்படிச் சொன்னால் என் கவனத்தை ஈர்க்கும் என்பதை யோசித்துச் செய்திருக்கிறான்.   'Only For You' என்று எழுதி வைத்துவிட்டு, வாட்ஸ் அப்பில், ‘மேசை மேல் ஒரு தகவல் இருக்கிறது. பார்க்கவும்’ என்று அனுப்பியிருக்கிறான். என்னை வேலை செய்யத் தூண்டும் ஒரு விஷயம். அல்லது, அதை நான் மறக்காமல் இருக்கச் செய்யும் ஓர் உத்தி. 

சரி, இதையே இன்றைக்கான தகவலாக உங்களுக்குச் சொல்வது என்று முடிவெடுத்துவிட்டேன். 

மார்க்கெடிங்! சந்தைப்படுத்துதல் அல்லது விற்றல் எனலாம். பொருட்களுக்கு மட்டும்தான் மார்க்கெடிங் தேவைப்படும் என்ற காலம் போய்விட்டது.   பொருளுக்கும், மனிதனுக்கும் , நிறுவனத்திற்கும்,  ஒரு மாநிலத்துக்கும்,  நாட்டுக்கும் ஏன், உணர்வுகளைக்கூட சந்தைப்படுத்தியே ஆகவேண்டி உள்ளது.  

”கொஞ்சம் லேட் ஆகும். நீ சாப்டுட்டு தூங்கு. லவ் யூ’ என்று மனைவிக்கு குறுஞ்செய்தி அனுப்பும்போது சேர்க்கும் ‘லவ் யூ’ அவர் மீது உங்களுக்கு இருக்கும் அன்பின் மார்க்கெடிங்.

கிரிக்கெட்டில் இடது கை ஆட்டக்காரரின் ஹெல்மெட்டில் வலதுபுறம் லோகோ இருப்பதும், வலது கை ஆட்டக்காரர் ஹெல்மெட்டில் இடதுபுறம் இருப்பதும்.. மார்க்கெடிங்.

இந்த #MondayMotivationக்கு வைக்கப்பட்டிருக்கும் தலைப்பு ஒரு மார்க்கெடிங். சரி, முக்கியமாக நாம் மார்க்கெடிங் செய்ய வேண்டியவை நிறைய இருக்கும். ஆனால், கீழே சொல்லப்பட்டுள்ளவற்றை நிச்சயம், பிறருக்குத் தெரியும் வண்ணம் சந்தைப்படுத்துதல் அவசியம். 

அன்பை...

“ ‘நீ வெச்ச சாப்பாடு நல்லாருக்குனு ஒரு நாளைக்காவது சொல்லீருக்கீங்களா?’ - திருமணமான கணவன்மார்கள் எதிர்கொள்ளும் ஒரு வழக்கமான கேள்வி. அன்பு இருக்கும்தான். ஆனால் வெளிக்காட்டாவிட்டால் என்ன பயன்? வெளிக்காட்டுங்கள். உங்கள் அன்பை துணையிடம் மார்க்கெடிங் செய்யுங்கள். நண்பர்களிடத்தில் மார்க்கெடிங் செய்யுங்கள். சும்மா, அன்பு இருக்கு’ என்று சொல்லி ஒரு பிரயோஜனமும் இல்லை; காட்டிக்கொண்டால் குற்றமில்லை!   

அறிவை..

அலுவலகத்தில் இந்தக் கேரக்டரை நீங்கள் பார்த்திருக்கலாம். சம்பந்தமே இல்லாமல், எல்லாரும் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை ஜஸ்ட் லைக் தட், கையாண்டு முடிப்பார். ஆனால் அவருக்கு அந்தத் திறமை இருப்பதை அவர் வெளிக்காட்டியே இருக்க மாட்டார். ‘நமக்கு இருக்கற வேலையே போதும்பா’ எனும் ஆசாமியாக இருந்தால்.. ஸாரி.. இது உங்களுக்கில்லை. ஆனால், தொடர்ச்சியாக வளர்ச்சியை விரும்புபவர்கள் நிச்சயம் தங்களுக்கு இருக்கும் அறிவை, திறமையை மார்க்கெடிங் செய்தே ஆகவேண்டும். யாருக்குத் தெரிய வேண்டுமோ.. அவர்களிடம்!

கலையை....

அது என்ன கலை? வேலையை கலையாகச் செய்வதாய் இருக்கலாம்.  வேலையைத் தவிர, பிற கலையாக இருக்கலாம். ஓய்வு நேரத்தில் உங்களுக்கு இருக்கும் நடிப்புக்கலையை டப்மாஷில் நண்பர்களோடு பகிர்வதாய் இருக்கலாம். வரையத் தெரியுமா.. வரையும் ஓவியங்களை ஃபேஸ்புக்கில் பகிர்வதாய் இருக்கலாம். விளம்பரப்படுத்துங்கள். அது நிச்சயம் உங்களை உற்சாகப்படுத்தும்!

விலையை...

அது என்ன’விலை’யை விளம்பரப்படுத்துவது? உங்களுக்கென்று ஒரு விலை இருக்கிறது. பல புத்திசாலித்தனமான ஊழியர்கள் இதைச் செய்வதுண்டு; குறிப்பிட்ட இடைவெளியில் தங்கள் ‘மார்க்கெட் வேல்யூ’ என்ன என்பதை வேறொரு நிறுவனத்திற்கு அப்ளிகேஷன் போட்டுத் தெரிந்து கொண்டு, அதை எப்படியாவது தங்கள் மேனேஜருக்கு / மேலதிகாரிக்குத் தெரிவித்துவிடுவார். ‘இன்னைய தேதிக்கு என் வேல்யூ இவ்வளோ... ஞாபகம் வெச்சுக்கோங்க’ என்று மறைமுகமாய் மார்க்கெடிங் செய்துகொள்வார். இது உங்கள் வாழ்க்கைத் தரத்துக்கு நிச்சயம் உதவியாக இருக்கும்.   

இப்போது ஒரு குட்டிக்கதை. இது உண்மையாகவே  நடந்த கதை என்பவர்களும் உண்டு.  
இங்கிலாந்தில் ஒரு ஃபேன்சி கடை. ஊருக்குள் ஓரளவு ஃபேமஸான அந்தக் கடையைச் சுற்றியுள்ள இடத்தை மொத்தமாக வாங்கி, பெரிய ஷாப்பிங் மால் கட்ட திட்டமிடுகிறார்கள். இவரது கடையையும், அதைச் சார்ந்த இடங்களையும் விலை பேச, இவர் முடியாது என்று மறுத்துவிடுகிறார்.

ஷாப்பிங் மால் கட்டும் ஐடியாவில் இருந்தவர்கள், இவரைப் பழிவாங்கும்விதமாக, இவர் கடை 40, 50 அடி உள்ளே போகும் வண்ணம், தங்களது ஷாப்பிங் மாலை -  இவரது ஃபேன்ஸி கடைக்கு இருபுறமும் - கீழே உள்ள படத்தில் உள்ளவாறு - கட்டிவிட்டனர்.  

 இதனால் இவர் கடைக்கு, வழக்கமாக வரும் கூட்டம் கன்னாபின்னாவென கம்மி ஆனது. உடனே ஒரு விளம்பர நிறுவனத்தை அணுகுகிறார்.  ரொம்ப சிம்பிளாக ஒரு ஐடியாவில் அதைச் சரிசெய்தார்கள், விளம்பர நிறுவனத்தினர். 

என்ன தெரியுமா?

இவரது கடையின் பெயரை ENTERANCE என்று மாற்றிவிட்டார்கள். பிறகு, அந்த ஷாப்பிங் மாலின் நான்கு மூலைகளிலும் Enterance என்று எழுதி இவர் கடை இருக்கும் இடத்திற்கு அம்புக்குறியிட்டுவிட்டார்கள். பலரும் ஷாப்பிங் மாலுக்கான வழி என்று நினைத்து உள்ளே வந்து, ‘ஆஹா.. இந்தக் கடையிலேயே எல்லாம் இருக்கே.. ஏன் பத்து மாடி ஏறிகிட்டு’ என்று இவரிடம் இருப்பதை வாங்கிச் செல்ல ஆரம்பித்தார்கள்.

சொல்ல மறந்துவிட்டேன்; இது ரொம்ப முக்கியம். அவர் அப்படி கடைக்குப் பெயர் மாற்றினாலும், தரமான பொருட்கள், குறைவான விலை என்று வைத்திருப்பதால், அந்த மார்க்கெடிங் உத்தி செல்லுபடி ஆகிற்று. அதேபோல, நீங்கள் செய்யும் விஷயங்களில் பாசாங்கு இல்லாத நேர்மை, மிக முக்கியம்! 

ஆல் த பெஸ்ட்!