Published:Updated:

கொஞ்சம் அரிசி, தண்ணீர் கொடுத்தால் கல்யாணம்! - சோமாலியாவின் சோகக் கதைகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கொஞ்சம் அரிசி,  தண்ணீர் கொடுத்தால் கல்யாணம்! - சோமாலியாவின் சோகக் கதைகள்
கொஞ்சம் அரிசி, தண்ணீர் கொடுத்தால் கல்யாணம்! - சோமாலியாவின் சோகக் கதைகள்

கொஞ்சம் அரிசி, தண்ணீர் கொடுத்தால் கல்யாணம்! - சோமாலியாவின் சோகக் கதைகள்

" இதச் செய்றதுக்கு  நான் செத்திடுறேன். அதோ... அந்தக் காட்டோட புதருக்குள் போய் சிங்கங்களுக்கு இரையாகிடுறேன்..."

" போ... நாங்க மட்டும் என்ன ஆகப் போறோம். நீ போயிட்டன்னா, கொஞ்ச நேரத்திலேயே நாங்களும் தான் போய் சேரப் போறோம். பாரு... உன்னோட ரெண்டு தங்கச்சிங்கள. அதுங்களும் கருகி, உருகி சாகத்தான் போகுது. வெறும் எலும்புகளா இந்த மண்ணுக்குள்ள போகப்போறோம்..." 

கருப்பை தோலின் நிறமாகக் கொண்ட ஒரு தாய், மகளின் உரையாடல் இது. நமக்கு அந்த மொழி புரியாது. 

சுடு மண்ணில் உட்கார்ந்து தாரைதாரையாக கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறாள் அந்த 14 வயதுப் பெண். அவள் ஒரு 40 வயது ஆணை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்பது அவள் தாயின் கோரிக்கை. அதற்குத் தான் அவள் செத்து போகிறேன் என்று கதறுகிறாள். ஆனால், வேறு வழியில்லை. எவ்வளவு அழுதாலும், புரண்டாலும் அவள் அதை செய்யத் தான் போகிறாள். தன் குடும்பத்திற்காக, பஞ்சத்தில் பரதேசியாய் பரிதவித்துக் கொண்டிருக்கும் தன் குடும்பத்திற்காக... தான் திருமணம் செய்யப்போவதால் அவர்களுக்குக் கிடைக்கும் கொஞ்சம் தண்ணீருக்காகவும், சொற்ப பணத்திற்காகவும் அவள் அதை செய்யத் தான் போகிறாள். 

இந்த மனிதர்களின் வலியை உணர நாம் முதலில் வெப்பம், சூடு, தாகம், பசி, பட்டினி, பஞ்சம், மரணம் போன்ற விஷயங்களை என்னவென்று உணர வேண்டும்... உலகளவில் பஞ்சத்திற்கு பெயர் பெற்ற சோமாலியாவின் இன்றையக் கதைகளைத் தான் மேலே பார்த்தோம், இனி பார்க்கப் போகிறோம். நீங்கள் இதை நிச்சயம் பார்த்திருப்பீர்கள். தோல்... எலும்புகளோடு ஒட்டிய குழந்தைகள், எலும்புக் கூடுகளாய் கிடக்கும் விலங்குகள், காய்ந்துப் போய் கருகும் நிலையிலிருக்கும் மரங்கள் என சோமாலியாவின் பஞ்சத்தைப் பறைசாற்றும் புகைப்படங்களை எங்கேயாவது ஒரு தடவையாவது பார்த்திருப்போம்.  

"அடப் போங்கப்பா... சும்மா ஆப்ரிக்கா, பசி, பட்டினி, பஞ்சம்.... வேறெதுவுமே இல்லையா ?" என்று சலித்துக் கொள்ளும் அன்பர்களுக்கு இதைப் புரிந்துக் கொள்வது கொஞ்சம் கடினம் தான்.  கருப்பினத் தென்னிந்தியர்களோடு பழகி இந்திய தேசத்தின் சமத்துவத்தைப் பறைசாற்றும் மேன்குடி மக்களுக்கு, ஆப்ரிக்க கருப்பர்களின் வலி கடந்து போகும் செய்தியாகத் தான் இருக்கும். இருந்தும் அது பதிவு செய்யப்பட வேண்டிய அவசியத்தைக் கொண்டுள்ளது. 

சோமாலியாவின் முக்கிய முதுகெலும்பு கால்நடை வளர்ப்பு தான். ஆனால், பலரும் வளர்த்த கால்நடைகள் இன்று வெறும் எலும்புகளாய் மிஞ்சிக்கிடக்கின்றன. சோமாலியாவில், இன்றைய நிலையில் 60 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கடுமையான பசிப் பட்டினியில் சிக்குண்டுள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. சோமாலியாவைச் சேர்ந்த உணவு மற்றும் விவசாய அமைப்பு, பல கால்நடை மருத்துவர்களை உலகம் முழுக்க இருந்து வரவழைத்து கால்நடைகளைக் காப்பாற்றும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சோமாலிய மக்களுக்கான தண்ணீரையும், உணவையும் வழங்கப் போராடிக் கொண்டிருக்கின்றன. 
கடந்த மார்ச் மாதம் மட்டும் 2 லட்சம் மக்கள் தங்கள் கிராமங்களை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர். தாகத்தை நீண்ட நேரம் வரைத் தாக்குப்பிடிக்கும் ஒட்டகங்கள் கூட, ஆங்காங்கே மரணித்து விழுகின்றன. சந்தைகளில் 950 டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒட்டகங்கள் இன்று 200 டாலர்களுக்கு கம்மியாகவே வாங்கப்படுகிறது. 

குடும்பத்தைக் காப்பாற்ற சொற்ப காசிற்காகவும், கிடைக்கும் கொஞ்சம் உணவு மற்றும் தண்ணீருக்காகவும் சின்னஞ்சிறு பெண் குழந்தைகளை விற்கும் அவலம் நடந்தேறி வருகிறது. கிட்டத்தட்ட 4 லட்சம் குழந்தைகள் புரதச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டு எலும்பும், தோலுமாய் காட்சியளிக்கிறார்கள். ஒரு கைப்பிடி அளவிலான சோற்றை 10 பேர் பகிர்ந்து உண்ணுகிறார்கள். வாழும் வழி தெரியாதவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.  

ஆப்பிரிக்க கண்டத்தின் மற்றொரு நாடான கென்யாவிலும், கடுமையான வறட்சியால் மிருகங்களும், மனிதர்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஆப்ரிக்க நாடுகளின் வறட்சியைப் போக்க ஐ.நாவுக்கு அமெரிக்கா வழக்கமாகக் கொடுக்கும் தொகையைத் தற்போது தர இயலாது என சமீபத்தில் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால், இது மிக மோசமான நடவடிக்கை என்று சொல்லியிருக்கிறார் ஐநாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஜெனரல் செக்ரெட்டரி, ஸ்டீபன் ஓ பிரையன். அவர் மேலும் கூறுகையில்,

" உலக வரலாற்றின் மிக மோசமான காலகட்டத்தில் நிற்கிறோம். ஐ.நா. சபை உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து இது போன்ற மிக மோசமான ஒரு நிலையைக் கண்டதில்லை. கொஞ்சம் தவறினாலும், இரண்டாம் உலகப் போரில் அழிந்த, அழிக்கப்பட்ட உயிர்களைவிட ஆப்ரிக்காவில் நாம் இழக்க நேரிடும்..." எனும் மிகப் பெரிய அபாயத்தைக் கூறியுள்ளார். 

பூமியின் இயற்கை ஆதாரமாய் திகழ்ந்த ஆப்ரிக்காவில் மக்களும், யானைகளும், மான்களும், சிங்கங்களும், ஒட்டகங்களும், மாடுகளும், ஆடுகளும், குதிரைகளும், முயல்களும், பாம்புகளும், இன்னும்... இன்னும்... உயிரினங்களும் தாகத்தில் தவித்து, பசியில் பரிதவித்து மரணித்து வருகின்றனர். 

சொந்த நாட்டு விவசாயிகளை அம்மணமாக்கிப் பார்த்து ரசிக்கும் மோடிகளோ, சிரியாவில் அரசாங்கம் தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு அந்த நாட்டிற்கு ஏவுகணை விட்டு மனிதத்தைக் காக்க முயற்சித்து, ஆப்ரிக்காவின் மனிதர்களைக் காக்க ஒதுக்கிய பணத்தைக் கூட தர மறுக்கும் டொனால்ட் ட்ரம்ப்களோ அல்ல ஆப்ரிக்க மக்களுக்குத் தேவை. தங்கள் வலிகளைக் கேட்க முனையும் சில இதயங்கள் தான்... வலிகளைக் கேட்கும் இதயங்கள் தான், ஒரு கட்டத்தில் அந்த வலிகளைப் போக்கும் மருந்தாகவும் மாறும். 

- இரா. கலைச் செல்வன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு