Published:Updated:

நினைவு நாடாக்கள் ஒரு rewind

வாலிஓவியம் : மணி, படம் : கே.ராஜசேகரன்

அக்கிரகாரத்திலிருந்து...

##~##

'அப்துல் காதருக்கும், அமாவாசைக்கும் என்ன சம்பந்தம்?’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- இப்படியரு பழமொழி, புழக்கத்தில் இருக்கையில்

- 'சம்பந்தம் உண்டு!’ என்று, ஒரு கவிதை மூலம், அதை அருமையாக நியாயப்படுத்தியிருக்கிறார் என் இனிய இளவல் -

கவிஞர் மு.மேத்தா அவர்கள்; இந்தக் கவிதை 'விகட’னில் வந்ததாக  ஞாபகம்.

ஒரு மதக் கலவரம். அமாவாசைக்குத் தன் வீட்டில் இடம் கொடுத்து, அப்துல் காதர் காப்பாற்றுகிறான்!

நினைவு நாடாக்கள் ஒரு rewind

அஃதேபோல் -

மற்றொரு நாள் கலவரத்தில் - அப்துல் காதருக்குத் தன் வீட்டில்  இடம் கொடுத்து, அமாவாசை காப்பாற்றுகிறான்!

ப்படி எத்துணையோ விஷயங் களில் - இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என வினவ நேருகிறது; அத்தகு வினாவிற்குக் காலம் விடை பகர்கிறது!

டோபநிஷத்தைக்
கற்கும் நாக்கு -
கார்ல் மார்க்ஸைக்
கற்குமா?

மனு இஸத்தை
மருவும் இதயம் -
மாவோயிஸத்தை
மருவி நிற்குமா?

'மூலதனம்’ எனும் நூலை
முப்புரிநூல் ஒப்புமா?
பொதுவுடைமை எனும்
   சொல்லைப்
பூசுரர்வாய் செப்புமா?

வைதிகம்
வாசிக்குமா RED BOOK?

வர்ணாஸ்ரமம்
வணங்கிடுமா RED FLAG?

- இத்துணை வினாக்களுக்கும் விடைகள் இறுக்கும் விதமாய் கம்யூனிஸ்ட் கட்சியை அவாவி அரவணைத்த அந்தணர்கள் அனேகர் உண்டு!

திரு. ஏ.எஸ்.கே.அய்யங்கார்;
திரு. பி.ராமமூர்த்தி;
திருமதி. பாப்பா உமாநாத் அவர்களின் கணவர் திரு.உமாநாத்;
திரு. எம்.ஆர்.வெங்கட்ராமன்;
திரு. ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்;
திரு. எஸ்.ஏ.டாங்கே;
இத்யாதி...
இத்யாதி...

நினைவு நாடாக்கள் ஒரு rewind

ந்தப் பட்டியலில் இடம்பெறத் தக்க அளவு இடதுசாரி ஈடுபாட்டோடு இருந்தார், ஒரு சினிமாக் காரர்!

செந்தழல் ஓம்பும் அந்தணர் குலத்தில் சனித்த அவர், தீவிரமான சிவப்புச் சிந்தனையாளர்.

இன்னொரு 'வ.ரா.’ எனும் வண்ணம் அவர் ஓர் அக்கிரகாரத்து அதிசயப் பிறவியாய்த் திகழ்ந்தார்.

அவர்தான்

அடியேனின் வாழ்க்கை விளக்கை ஏற்றிவைத்தவர்; எண்ணெயும் குறைந்து, திரியும் கருகி, வறுமைக் காற்றின் வசமாகிப் படபடத்துக்கொண்டிருந்த விளக்குச் சுடரை

L.I.C. எம்ப்ளம் போல்- இருகையால் தடுத்தாட்கொண்டு -

எண்ணெய் பெய்து, திரியைச் சரிசெய்து, சுடச்சுட மீண்டும் சுடரச் செய்தவர்.

அவர் என்னை அற்றை நாளில் - ஆதரிக்காது போயிருப்பின் - பாட்டுலகில் நான் பிரகாசிப்பது என்பது, பொய்யாய்ப் பழங்கதையாய்ப் பகற்கனவாய்ப் போய் இருக்கும்!

'வாலி! விஸ்வனாதன்கிட்டே அறிமுகப்படுத்திவைக்கிறேன்-அதுவும் என் சொந்தப் படத்திலேயே! விசு, உன்  LYRIC - திருப்தியில்லேன்னு சொல்லிட்டா,  I WILL DROP YOU! ஆனா - இந்தப் பரீட்சையிலே நீ  பாஸ் பண்ணிடுவேன்னு  எனக்குத் தோண்றது!’

- இப்படிச் சொல்லி - என்னை, மெல்லிசை மன்னர்கள் முன்னால் அவர் உட்கார்த்திவைத்தார்.

பரீட்சையில் நான் பாஸாகிவிட்டேன் - அதுவும் நூறு மார்க்கு வாங்கி!

என்னிலும் - அதிக சந்தோஷப்பட்டவர் அவர்தான்!

அவர் பன்முகம் படைத்த ஓர் அறிவு ஜீவி!

படாதிபதி; பட இயக்குநர்; தான்  இயக்கிய முதல் படத்திற்கே, தேசிய விருது வாங்கியவர்; இத்துணைக்குப் பின்னும் இயல்பாக இருப்பவர்!

மமதை; மது; மாமிசம்! மாது - என, மானா வரிசையில் எந்த மானாவும் அவர்பால் இல்லை.

சிவாஜி; கமல்; ரஜினி என்று - ஏராளமான படங்கள் இயக்கி இசை கொண் டவர்.

முகவை. ராசமாணிக்கம்; பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்; டி.கே.பாலசந்தரன் மற்றும் ஜீவா -

இவர்கள் புடைசூழ இடதுசாரிச்  சிந்தனையில் இரண்டறக் கலந்தவர்.

அசல் அக்மார்க் அய்யங்காரான அவர் நெற்றியில் -

நினைவு நாடாக்கள் ஒரு rewind

இன்றும் எந்த மதச் சின்னமும் இருக்காது.

குரல் நுனியில் ஆங்கிலமும், விரல் நுனியில் அருந்தமிழும் கொலுவிருக்கக் காணலாம் அவரிடம்.

அவர் ஓர் VORACIOUS READER! - அதுமட்டுமல்ல; அற்புதமான படைப்பாளி!      

எத்துணையோ அற்புதமான, சிறுகதைகளை எழுதியிருக்கிறார். ஒவ்வொன்றும் நம்மை உலுக்கி எடுக்கும்.

'இவருடைய சிறுகதையைப் படிச்சுட்டு - அண்ணா! ராத்திரியெல்லாம்  நான் தூங்கல்லே! இவருக்குள்ளே - தி.ஜ.ர; கு.ப.ரா; இவாளெல்லாம் ஒளிஞ்சிண்டிருக்காண்ணா!’

- என்று என்னிடம் கமல்ஹாசன், விழிகள் பூராவும் வியப்பை நிரப்பிக்கொண்டு, அவரை விமர்சித்ததுண்டு!

அத்தகு மனிதர்தான் -

அக்கிரகாரத்திலிருந்தும், சமூக அவலங்களைச் சாடும் புரட்சிக்காரர்கள் புறப்படு வதுண்டு என்று -

இந்த நீணிலத்தின் கண் நிரூபித்தவர்!

ன்னோர் இளைஞன். ஆசாரமான அய்யங்கார் குடும்பத்திலிருந்து ஒரு நள்ளிரவில் வெகுண்டு வெளியேறினான்.

குலாசாரம்; சமயாசாரம் - இவற்றை  முன்னிறுத்தித் தன் தாயைத் தன் தந்தை, மூர்க்கத்தனமாக வாட்டி வறுத்தெடுப்பதைக் கண்டு

மாதாவை மட்டுமல்ல; மாதர் குலத் தையே இந்த மௌட்டிகத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டும் எனும் நெறிசார்ந்த வெறியில்  -

மாவோயிஸத்தையும்; பெரியாரிஸத்தை யும் - காடு சார்ந்த இடங்களில் வாழும் குக்கிராமத்துக் குடிமக்கள் காதுகளில் -

மடமை நோய்க்கு, மாற்று மருந்தாய்ப்  பெய்தான்; அனேக தோழர்கள், தோழிகள் அவனது அடியற்றி வந்தனர்.

அன்னணம் வந்தோரில், ஒத்த கருத்து உடைய ஒரு தோழியை - வாழ்க்கைத் துணையாய் வரித்தான். அந்தப் பெண்மணியின் பெயர் திருமதி.தமிழ்ச்செல்வி!

ஒரு மாபெரும் இயக்கத்தை முன்னெடுத்துச் சென்ற -

அந்த ஸ்ரீரங்கத்து அய்யங்கார்ப் பையனின், இயற்பெயர் இராமானுஜன். செல்லமாக அழைக்கும் பெயர் சம்பத்.

இப்போது அவன் பெயர் திரு.கருணா மனோகரன்!

கருணா மனோகரனால் கவரப்பட்டவர்கள் தாம் - இயக்குநர் மணிவண்ணன்;  இயக்குநர் சீமான்; எழுத்தாளர் பாமரன் முதலிய நவீன சிந்தனையாளர்கள்!

இந்தக் கருணா மனோகரன் - அக்கிரகாரத்திலிருந்து புறப்பட்ட மற்றொரு 'வ.ரா’!

'ஆரியம்; ஆரியம்’ என்று அரற்றுகிறார் களே. அவ் ஆரியத்திலிருந்து அரும்பியதுதான் இந்த வீரியம்!

சாதி வழி நிற்காமல், நீதி வழி நின்ற கருணா மனோகரன் -

என் சொந்த சகோதரி  மகன்; தமிழ்ச் செல்வி என் வீட்டு மருமகள்.

என் சகோதரி திருமதி. ஜெயம்மாள், பூமியினும் மிக்க பொறையுடையாள். 'பெண்ணின் பெருந்தக்க யாவுள?’ என்பது குறள்; என் சகோதரி அந்தக் குறளுக்கான பொருள்.

அவள் அருமை தெரியாத அகத்துக்காரர் பெயர் திரு.செல்லம் அய்யங்கார்!

இந்தச் செல்லம் அய்யங்காரின் தம்பி தான் -

பீஹார் கவர்னராயிருந்த திரு.G ராமானுஜம், I.N.T.U.C-ன் - தலைவராக இருந்த இவரது தயாரிப்புதான் - திரு. வாழப்பாடி ராமமூர்த்தி அவர்கள்.

பிராமணர்களிலும், பிறர் துயர் கண்டு ஆற்றாது ஆர்த்தெழும் புரட்சிக்காரர்கள் உண்டு!

ந்திர சினிமாக்காரர்களிலும் கம்யூனிஸத்தைத் தழுவி நின்ற COMRADES உண்டு. அவர்களிடையேயும் ஓர் அக்கிரகாரத்து அதிசயப் பிறவி!

அவர்தான் - ஆந்திர மக்கள் இன்றளவும் அர்ச்சிக்கும்-கவிஞர் பெருமான்  திரு.ஸ்ரீ.ஸ்ரீ!

நான் - CLUB HOUSE என்னுமிடத்தில் வறுமையில் வாழ்ந்துகொண்டிருந்த நாளில் -

ஸ்ரீஸ்ரீ எனக்குப் பழக்கமானார். ஏனெனில் நானிருந்த இடத்திற்கு அடுத்த கட்டடம் - 'ஜெயந்தி ஸ்டூடியோஸ்’ எனும் பெயரில் இயங்கிக்கொண்டிருந்தது அங்குதான் -  தமிழ் TO தெலுங்கு டப்பிங் நடைபெறும்.

ஸ்ரீஸ்ரீ - பாட்டெழுத அங்கு வருவார். அவர் மூலம் எனக்கு அறிமுகமான ஒரு நண்பனின் பெயர் அப்பாராவ்! அவனும் சிவப்புச் சிந்தனை உள்ளவன்தான்.

அவன் அருமையாகப் பாடுவான். எனவே, பெரும்பாலான நேரம் என்  அறையில்தான் இருப்பான்.

நான் எழுதி, அவன் மெட்டுப் போட்ட பாடல் ஒன்று - பொதுவுடைமை சித்தாந்தத்தைப் போற்றுவதாக இருக்கும். இதோ அந்தப் பாடல்!

பல்லவி

'பலர்வாட சிலர் வாழ்வதா? - இன்னும்
பலகாலம் எளியோர்கள்
  நிலை தாழ்வதா?

அனுபல்லவி

உலகாளும் பொது நீதி
கேடாவதா? - இங்கு
உழைப்போர்கள் உடல் தேய்ந்து
ஓடாவதா?

சரணம்

கரையான்கள் வீடாக்கக்
கருநாகம் வாழும் -
கதைபோல வாழாதீர்;
பழிவந்து சூழும்;
வரையாமல் செந்நீரை
வடிக்கின்ற கூட்டம் -
விளைவித்த தல்லவோ
வாழ்வென்னும் தோட்டம்!

- இந்தப் பாட்டை அப்பாராவ் பாடும்போது கண்ணீர் மல்கப் பாடுவான். அப்போது அவன் வறுமையின் உச்சத்தில் இருந்தான். அவனே - பின்னாளில் வளமையின் உச்சத்திற்குப் போனான்!

தெலுங்குத் திரையுலகில் திரு.சக்ரவர்த்தி என்றொரு இசையமைப்பாளர் கொடிகட்டிப் பறந்தார் - 15 ஆண்டுகளுக்கு மேல்!

ஒரு வருடத்திற்கு - அவர் இசையமைத்து, 80 படங்கள் வெளியாகும்.  

பாட்டெல்லாம் TERRIFIC HIT!

இந்தச் சக்ரவர்த்திதான் - அந்த அப்பாராவ்!

நான் - கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டேனே - என் வாழ்க்கை விளக்கை ஏற்றி வைத்தவரும், சிவப்புச் சிந்தனையாள ருமான -

ஒரு சினிமாக்காரர் என்று;

அவர்தான் -

என் நன்றிக்குரிய -

திரு.முக்தா ஸ்ரீனிவாசன் அவர்கள்!

- சுழலும்...