Published:Updated:

நானும் விகடனும்!

இந்த வாரம் : வண்ணதாசன்படம் : தேனி ஈஸ்வர்

பிரபலங்கள் விகடனுடனான தங்களின் இறுக்கத்தை, நெருக்கத்தை, விருப்பத்தைப் பகிர்ந்துகொள்ளும் பக்கம்!

##~##

'' 'நானும் விகடனும்’ தொடர் ஆரம்பித்த புதிது. பாலகுமாரன், கோபுலுவைப்பற்றி எழுதியிருந்தார். எனக்கும் கணபதி அண்ணனுக்கும் கோபுலு பிடிக்கும். கணபதி அண்ணன் ரொம்ப சந்தோஷமாகத் தொலைபேசினான். 'நீ எழுத வேண்டியதை பாலகுமாரன் எழுதியாச்சு’ என்றான். 'நீ எப்போ எழுதப்போறே?’ என்றும், 'உன்கிட்டே கண்டிப்பாக் கேட்பாங்க. இப்பமே எழுதிவெச்சுக்கோ’ என்றும் சொன்னான். நான் விடிந்த பிறகுதான் கோலம் போடுகிறவன். குடை இருந்தால்கூட, மழை வந்து கொஞ்சம் நனைந்த பிறகுதான் குடையை விரிக்கிறவன். சில சமயம் அதையும் செய்யாமல் நனைகிறவன். முன் ஏற்பாடுகளைவிடத் தாமதங்களை நம்புகிறவன். இது எல்லாம் அண்ணனுக்கும் தெரியும். ஆனாலும், சொன்னான். அண்ணன் என்றால் தம்பிக்குப் புத்தி சொல்வதும் சேர்த்திதானே!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதுமட்டும் இல்லை; அவ்வப்போது கூப்பிடுவான். அநேகமாக, வெள்ளிக்கிழமை மத்தியானமாக இருக்கும். வெயில் தணிந்து வருகிற பிற்பகல்களில், அந்தந்த இடத்தில் அந்தந்த மர நிழல்கள் தடவித் தடவி அசைகிறதில் கிறங்கிக்கிடக்கும் தரையில், ஒரு குல்மொஹரோ, நந்தியாவட்டைப் பூவோ உதிர்ந்து புரள்கிற அமைதியில், நமக்கு வேண்டிய பிரியமான யாரோ இப்படிப் பேசினால் நன்றாகத்தானே படும். 'இந்த வாரம் 'நீயா... நானா’ கோபிநாத் உன்னைப்பத்தி சொல்லியிருக்கார், பார்த்தியா?’ என்பான். நான் வியாழக்கிழமையே படித்திருப்பேன். ஆனாலும் பொய் சொல்வேன். 'அப்படி யாண்ணே?’ முதல் தகவல் சொல்கிறோம் போல என்கிறதில் அடைகிற சந்தோஷம் அந்தப் பக்கம் கிடைக்கிறது எனில், மேலும் ஒரு பொய் சொன்னாலும் தப்பு இல்லை. 'பி.சி.ஸ்ரீராம் 'அகம் புறம்’ புத்தகத்தை வாங்கி, தெரிஞ்சவங்களுக்குக் கொடுப்பாராம்’ என்று சொல்வான். இந்த முறை பொய் கிடையாது. அடுத்தடுத்த பொய்களைவிட இடைவெளிகள் உள்ள பொய்களுக்குத்தான் மதிப்பு. 'ஆமாண்ணே’ என்று சொல்வேன். அதைச் சொல்லும்போது, என் முகத்தையும் குரலையும் பி.சி.ஸ்ரீராம் மாதிரி வைத்துக் கொள்வேன். சந்தோஷமாக இருக்கிற மாதிரியும் துக்கமாக இருக்கிற மாதிரியும். நிறைய விஷயங்கள் அப்படித்தான் இருக்கிறது. சந்தோஷமும் துக்கமுமாக!

நானும் விகடனும்!

விகடன் அப்படி இல்லை. சந்தோஷம் மட்டும்தான். சந்தோஷம்கூட இல்லை. அதைவிடக் கூடுதல். ஆனந்தம் அனந்தானந்தம். முடிவற்ற, எல்லையற்ற மகிழ்ச்சி. இந்தத் தொடருக்கு 'விகடனும் நானும்’ என்று தலைப்பு வைத்து இருக்க வேண்டும். 'நானும் விகடனும்’ என்பதைவிட, அதுதான் சரி. பொருத்தம். விகடன் எல்லையற்றவன். அனந்தானந்தன். கல்யாணிக்கு இன்று 65. ஆகஸ்ட் 22-ல் 66. எல்லை உண்டு.

லீலா சின்னம்மை வாங்கியதா, எங்களுடைய அப்பாவுடையதா என்று தெரியவில்லை. இன்றைக்கு என்றால், பால் பாயின்ட் பேனாவைக்கூட இரண்டு வயதுப் பிள்ளை தன் கையில் வைத்துக்கொண்டு, 'இது உன்னோடதா?’ என்று அப்பாவிடம் கேட்கிறது. கேட்காவிட்டால்தான் ஆச்சர்யம். அன்றைக்கு விகடன் தீபாவளி மலரை ஒரு 10 வயதுப் பையன் கையில் கொடுத்துப் பார்க்க அனுமதித்ததே பெரிய விஷயம். எனக்கு அதைத் தூக்கக்கூட வசதியாக இல்லை. அந்த வயதில் புழங்கிய புத்தகங் களில் ஆக்ஸ்போர்டு அட்லஸ் ஒன்றுதான் அவ்வளவு பெரிய சைஸில் இருந்தது.

எனக்கு அட்லஸ் பிடிக்கும். விகடன் தீபாவளி மலரையும் பிடித்தது. அது அந்த வருடத்து மலர்கூட இல்லை. அதற்கும் முந்தியது. ஐம்பதுகளில் வந்ததாக இருக்கலாம். மாலி வரைந்த படங்கள் மட்டும் இப்போது ஞாபகத்தில் மிஞ்சி இருக்கிறது. இப்போது டிசம்பர் சீஸன்போல, அப்போது நடந்த சங்கீதக் கச்சேரிகளில் பாடுகிறவர்களை, வாத்தியக்காரர்களை, மாலி இரண்டு மூன்று பக்கங்களில் வரைந்து இருந்தார். என் குறைந்த சங்கீத அறிவில் அப்படி வரையப்பட்டமுகங் களில் அரியக்குடி ராமானுஜம் அய்யங் கார் முகம் ஒன்று மட்டும், ஒப்பீட்டு அளவில் சரியான சாயலுடன் மிஞ்சியிருக்கிறது. நான் சங்கீதம் பக்கம் சாயாததற்கு சங்கீதமும், மாலியின் பக்கம் சாய்ந்ததற்கு நானும் இன்று சந்தோஷப்பட, அந்த விகடன் பலரைத் திருப்பிய நேரத்தின் ஜன்னல் வெளிச்சமே காரணமாக இருக்க வேண்டும்.

மீண்டும் அறுபதின் ஆரம்பங்களில், என்னுடைய உயர்நிலைப் பள்ளிப் பருவத்தில் விகடனை என்னுடைய சேக்காளி யாக்கிக்கொள்கிறேன். பாம்பே சர்க்க ஸில் இரண்டு வெள்ளைக் குதிரைகள் மேல், காலை வலது இடதாக ஊன்றிச் சிரித்துக்கொண்டே வட்டமிடுகிற பெண் களைப்போல, நான் ஒரு பக்கம் படம் வரைந்துகொண்டும், மறுபக்கம் கதை படித்துக்கொண்டும் வளரலானேன். மழை அதேதான். அதற்காக சாதாக் கப்பலே செய்துவிடுவதா? அப்புறம் கத்திக் கப்பல், ராஜா ராணிக் கப்பல்களை எந்தக் காகிதத்தில் செய்து, எந்தத் தண்ணீரில் விடுவது?

நான் கோபுலுவின் லட்சத்து ஒன்றாவது ஏகலைவன் ஆனேன். அவருடைய விகடன் கார்ட்டூன்களை நேரடியாக பிரஷ்ஷாலும், அவருடைய கதைப் படங் களை இந்தியன் இங்க் பேனாக்களாலும் வரைய ஆரம்பித்தேன். 'உன் கண்ணில் நீர் வழிந்தால்’, 'என் கண்ணில் பாவை யன்றோ’, 'நடைபாதை’ தொடர்களுக்கு கோபுலு வரைந்த படங்களை அச்சடித்தது போல அப்படியே வரைந்த நாட்கள் அவை. ஓங்காரச் சாமியாரை இப்போதும் என்னால் வரைய முடியும். ஜெயகாந்தனின் முத்திரைக் கதைகளுக்கு கோபுலுவும், மாயாவும், சிம்ஹாவும் போட்டி போட்டுக் கொண்டு வரைவார்கள். 'நான் இருக் கிறேன்’, 'ஒரு பகல் நேர பாசஞ்சர் வண்டி யில்’, 'கோகிலா என்ன செய்துவிட்டாள்’ கதைகளுக்கு மாயா வரைந்ததையும், 'இருளைத் தேடி’, 'ஒரு முன் நிலவும் பின் பனியும்’ கதைகளுக்கு சிம்ஹாவும் வரைந்த படங்களை வேறு எவரும் வரைவதற்கு இல்லை. 'பாரிசுக்குப் போ’, 'ஒரு வீடு ஒரு உலகம் ஒரு மனிதன்’. அடே பாவி. ஜெயகாந்தன்தான் என்னவெல்லாம் எழுதினார். அது அவருடைய காலம் ('இதுவும் அவருடைய காலம்தான்’ இப்படிச் சொல்ல, 'ஓ... அதற்கு ஒரு பக்குவம் தேவை.’)

'இரவுக்கு முன்பு வருவது மாலை’, 'காகிதம் ஒட்டப்பட்ட ஜன்னல்கள்’ இவை எல்லாம் எவ்வளவு அழகான தலைப்புகள். இவற்றை எழுதிய ஆதவனுடையதெல்லாம் எவ்வளவு அருமையான எழுத்துகள். 'எங்கள் தெருவில் ஒரு கதாபாத்திரம்’ என்ற ராஜேந்திர சோழனின் வருகையும் அதைத் தொடர்ந்து மு.மேத்தாவும், வேலுச்சாமியும், ஜி.எம்.எல்.பிரகாஷ் என வந்தவர்களின் படைப்புகளும் துவங்கிய புதிய வார்ப்பின் கண்ணிகளை, பாஸ்கர் சக்தியும், க.சீ.சிவகுமாரும், எழில் வரதனும், சந்திராவும், அ.வெண் ணிலாவும் தொடர்ந்துகொண்டு தானே இருக்கிறார்கள்.

'மொகல் ஏ ஆஸம்’ படத்தின் தமிழ் வடிவமாக அக்பர் மொழி மாற்றப்பட்டபோது கறுப்பு வெளுப்புப் புகைப்பட இணைப்பாக வந்த புகைப்படங்களில் இருந்த திலீப்குமாரையும் மதுபாலாவையும்விடவும் பிருத்ருராஜ் கபூர் எவ்வளவு அழகாக இருந்தார். எலிசபெத் ராணி தமிழ் நாட்டுக்கு வந்திருந்த சமயமும் இப்படி ஒரு புகைப்பட இணைப்பு வந்து இருந்தது. சமீபத்தில் விக்ரமாதித்யனின் 'அவன்-அவள்’ தொகுப்பில் 'எலிசபெத் ராணி’ என்கிற கதையை மீண்டும் வாசித்தபோது, அந்த விகடன் புகைப்படங்கள் தன்னைச் சிறகுகள்போல அந்தக் கதையுடன் பொருத்திக்கொண்டன. காலம் ஒரு பறவைதான். எந்தச் சந்தேகமும் இல்லை. அந்தப் படங்களை எல்லாம் எடுத்தவர் யார் என்று தெரியவில்லை. ஞாபகத்தில் இருக்கிற பெயர்கள் ராஜசேகரனும், தேனி ஈஸ்வரும், வின்சென்ட் பாலும்தான். 'சீவலப்பேரி பாண்டி’ தொடருக்கு வெளிவந்த படங்கள் விறுவிறுப்பானவை.

எனக்கு தேனி ஈஸ்வரைப் பிடிக்கும். தெருக்களில் பேசிக்கொண்டு நிற்கிற பெண்களை, 'எல்லாத்தையும் பார்த்தாகி விட்டது. இது எல்லாம் என்ன?’ என்று செருப்பைக் கழற்றிப் பக்கத்தில் போட்டு, காலை நீட்டிக்கொண்டு, 'அட போடா, உன்னை மாதிரிக் கொள்ளைப் பேரைத் தெரியும்டா’ என நம்மைப் பார்க்கும் அப்பத்தாக்களை, உலக அழகிகளுக்குச் சற்றும் குறையாத அழகுள்ள நாட்டு நாய்களையும் அவர் எடுத்திருக்கிற படங்கள் ஜீவன் உள்ளவை. அவ்வளவு ஏன்? குறுக்குத் துறைக் கல் மண்டபத்தில் என்னை உட்கார்த்தி வைத்து எடுத்த படங்களைப் பார்த்த பிறகு அல்லவா, என் 60 வயதில் நான் எவ்வளவு லெச்சணமாக இருக்கிறேன் என்று எனக்கே தெரிந்தது. எங்கள் 21-ணி சுடலைமாடன் கோவில் தெரு வீட்டுக்குத் தபால் விநியோகிக்கிற போஸ்ட்மேன் பாலசுப்ரமணியத்தை வின்சென்ட் பால் எடுத்திருந்த படம், நிஜமாகவே ஒரு இந்தியத் தபால்காரரின் ஆவணக் களஞ்சியத்துக்கு உரியது அல்லவா!

'விகடனும் நானும்’ என்று இருந்தாலும், என்னைப்பற்றி எழுதாமல் விகடனில் எனக்குப் பிடித்ததை எழுதவே தோன்றுகிறதோ? நான் விகடனில் எழுதிய நாலைந்து கவிதைகளை, பத்துப் பதினைந்து கதைகளை, 30 வாரங்கள் வந்த 'அகம் புறம்’ தொடரை யும்விட, அழகான கவிதைகளும், கதைகளும், தொடர்களும் எழுத எஸ்.ராமகிருஷ்ணனின் 'துணையெழுத்து’ தொடங்கி, சுகாவின் 'மூங்கில் மூச்சு’ வரை எத்தனை பேர் இருக்கிறார்கள்.

ஜெயகாந்தன் எழுதியதுபோல, சிலர் வெளியே இருக்கிறார்கள் என்ற பட்டியலில் மேலே குறிப்பிட்ட ராம கிருஷ்ணனும், தமிழருவி மணியனும், நாஞ்சில் நாடனும் வர, 'இவர்கள் உள்ளே இருக்கிறார்கள்’ என்று அருள் எழிலனும், பாரதி தம்பியும், திருமாவேலனும் வருகிறார்கள். விகடனின் குழுவுக்குள் இருந்துகொண்டு, 'நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளுடன்’ சமீப வருடங்களில் பாரதி தம்பியும் திருமாவேலனும் எழுதிய கட்டுரைகள், பத்திரிகையாளர் என்ற அளவில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்துக்கு வரலாற்றுச் சாட்சி சொல்பவை!

ஈழம் தொடர்பான விகடனின் நிலைப்பாட்டை, மிக உறுதியுடனும் அக்கறையுடனும் முன்வைத்த, முன்வைத்து வருகிற அவர்களின் கட்டுரைகள், மொத்த இந்தியப் பத்திரிகைகளிலும் ஒலிக்காத, ஒரே ஒரு தனிக் குரல் உடையவை. மே. 19, 2009-க்கு முன்னும் பின்னுமாக எந்த ஆவணங்களும் அவற்றின் ஒற்றை வரியைக்கூடத் தவறவிட்டு விட முடியாது.

ஓர் ஆளும் அரசுக்கு எதிராக, அதன் அதிகார செல்வாக்குகளைத் துளிக்கூடப் பொருட்படுத்தாமல், அச்சுறுத்தல்களுக் குப் பின்வாங்காமல் தொடர்ந்து செயல் படுவதன் மூலம், ஒரு மாற்று அரசுக்கான அவசியத்தை வாக்காளர்களிடம் முன் வைத்து, வெற்றியும் பெற்றிருக்கிற அவர் களின் கட்டுரைகளை, வென்றிருக்கிற அ.தி.மு.க. அரசும் அகற்றப்பட்டு இருக்கிற தி.மு-க.வும் தொடர்ந்து கவனிப்பார்கள் எனில் நல்லது. ஆனால், அப்படி எல்லாம் அவர்கள் இருவருமே கவனித்துவிடுவார்களா என்ன?

எதையும் சொல்லாமல் விட்டுவிட்டேனா என்று யோசிக்கையில், இந்த நான்காம் பக்கத்தில்கூட எதையுமே சொல்லிவிட வில்லை என்றுதான்படுகிறது. ஒவ்வொருத் தரும் ஒன்று சொல்வார்கள். ஒன்றைச் சொல்ல வரும்போதே, ஒன்று மறந்து போகும். தவளையைத் தராசில் நிறுத்துகிற மாதிரி. ஆற்றுத் தண்ணீர் விரலிடுக்கில் ஓடுகிற மாதிரி. மல்லாந்து படுத்து நட்சத் திரங்கள் எண்ணுவது மாதிரி.

நா.கதிர்வேலனின் பி.சி.ஸ்ரீராம் பற்றிய பேட்டியும் கட்டுரைகளும் விட்டுப்போயிற்றே என்றிருக்கிறது.

தென்னாட்டுச் செல்வங்கள் சில்பியும், தில்லானா மோகனாம்பாளும், கஸ்தூரி திலகமும் கென்னடியின் கதையும் ஞாபகம் இல்லையா என்றால், அது எப்படி என அம்மிக் கல்லுக்குக் கீழ் பூரானாக ஓடுகிறது இன்றும் ஏதேதோ.

அரஸ், ஸ்யாம்பற்றிச் சொல்ல வேண்டும். ஆர்.கே.லக்ஷ்மண் பாணியில் எளிய கோடு களுடன் வந்த மதன்பற்றி, மிகச் சமீபத்திய முகங்களை அபாரமாக இழுத்துக்காட்டும் கண்ணாபற்றிப் பாராட்ட

நானும் விகடனும்!

வேண்டும். ராஜ்குமார் ஸ்தபதியை, இளையராஜாவை, சிவபாலனை, அனந்தபத்மநாபனை, பழைய கோடுகளையும் பழைய முகங்களையும், அழித்துப் புதிய கோடுகளும் புதிய முகங்களும் வரைந்து, கோட்டில் பழசு புதுசு முகத்தில் பழையது புதியது எல்லாம் கிடையாது என அதே கோடும் அதே முகமும் அந்தந்த வாழ்வுக்குத் தக்க அடையும் புதிய சாயல்களை மிகுந்த வீச்சுடன் காட்டிய, காட்டுகிற ஆதிமூலமும் மருதுவும் விகடனில் செய்துள்ள ஓவியச் செயல்பாட்டைச் சொல்ல வேண்டும்.

இவை என்ன... இதற்கு மேலும் சொல்ல லாம். விகடனும் வெளியிடும். என் சமீபத்திய இன்னொரு நல்ல படம்கூடப் பிரசுரமாகும். ஆனால், அந்தக் குறிப்பிட்ட வெள்ளிக்கிழமை பிற்பகலில் 'கல்யாணி, விகடன்ல போட்டிருக்காங்கப்பா’ என்ற தொலைபேசிக் குரல் மட்டும் கணபதி அண்ணனிடம் இருந்து வராது. கவிதையையும் ஓவியத்தையும் எனக்குக் காட்டிய கணபதி அண்ணனை நாங்கள் இழந்து ஒரு மாதம் ஆகப்போகிறது!''