Published:Updated:

இன்று தேசிய திருநங்கையர் தினம்! - திருநங்கைகள் சொல்லும் வாழ்த்து என்ன?

இன்று தேசிய திருநங்கையர் தினம்! - திருநங்கைகள் சொல்லும் வாழ்த்து என்ன?
இன்று தேசிய திருநங்கையர் தினம்! - திருநங்கைகள் சொல்லும் வாழ்த்து என்ன?

2014 ஏப்ரம் 15-ம் தேதி உச்சநீதிமன்றம் திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலினம் என்ற அங்கீகாரம் கொடுத்து தீர்ப்பு வழங்கியது. இந்த நாளை தேசிய திருநங்கையர் தினமாகக் கொண்டாடுகிறார்கள் திருநங்கைகள். இந்தச் சமூகத்தில் இன்னமும் என்னென்ன மாற்றங்களும், உரிமைகளும் தேவை என்பதைச் சொல்கிறார்கள் சில திருநங்கைகள். 

காவல் உதவி ஆய்வாளர், க.பிரித்திகா யாஷினி; , "இனி வரும் காலங்களில் திருநங்கைகள் அனைவரும் பல துறைகளிலும் சாதனை செய்யணும். அதுதான் என் ஆசை. இப்ப நமக்கு இருக்கிற நிலைமை எந்தத் துறையை எடுத்தாலும் நமக்கான உரிமையைப் போராடி... போராடித்தான் பெற வேண்டி இருக்கு. அந்தச் சூழ்நிலையில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால், இந்தப் போராட்டத்தை எப்படிக் கையாள்வது என்பதுதான் முக்கியம். நிச்சியமாக ஒவ்வொரு திருநங்கையும் மனது வைத்தால், என்னைப் போல வெற்றியையும், உரிமையும் பெறலாம்." 

சமூக செயற்பாட்டாளர், கவிஞர், ஓவியர், நடிகை மற்றும் சகோதரி தொண்டு அமைப்பின் நிறுவனர் திருநங்கை கல்கி சுப்ரமணியம்: "உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்து மூன்று வருடம் ஆகியும் சமூகத்தில் பெரிய மாற்றம் இல்லை. தனிப்பட்ட சில திருநங்கைகளின் வெற்றிகள் ஒட்டுமொத்த திருநங்கைகளின் வெற்றியாகாது. எனினும் போக வேண்டிய பாதைகள், அடைய வேண்டிய வெற்றிகளுக்கு அவை உற்சாகத்தையும், உந்துதலையும் நிச்சயம் தரும். திருநங்கைகளைப் பெற்றோர்கள் புறக்கணிக்கக் கூடாது. அப்படிப் புறக்கணிக்கும் பெற்றோர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும். அதையும் தாண்டி திருநங்கைகள் சுமூகமாக வாழ இந்த அரசாங்கமும், கல்வியாளர்களும், சட்டமும் ஏற்படுத்தித் தர வேண்டும். மூன்றாம் பாலினம் பற்றி பள்ளி பருவத்திலேயே பயிற்றுவிக்க வேண்டும். பெற்றோர்களின் புறக்கணிப்புதான் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணமாக இருக்கிறது. இந்த நாளில் ஒவ்வொருவரும் திருநங்கைகளை புரிந்துகொள்ள முயற்சி செய்வோம்." 

பொறியியல் கல்லூரி மாணவி பானு;  "உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, பல திருநங்கைகளின் வாழ்க்கை மாறி இருக்கு. இவ்வளவு பெரிய சமூக மாற்றத்துக்குக் காரணம் அந்தத் தீர்ப்புதான். எங்களுக்கான நல வாரியம் அமைஞ்சதும் இந்த நாளில்தான். இதுக்காக தமிழகத்தைச் சேர்ந்த பல திருநங்கைகளும் 1997-ல் இருந்தே போராடி இருக்காங்க. நீதி மறுக்கப்பட்டு, நிறைய வலிகளை அனுபவித்து இருக்காங்க. அந்தப் போராட்டங்களால்தான் இப்போது பல இளம் திருநங்கைகள் நல்ல நிலைமையில் இருக்காங்க. இந்த போராட்டப் பாதை இன்னும் முடிவு பெறலை. ஒடுக்கப்பட்ட நம்ம சமூகம் மசோதா தயார் செய்து நாடாளுமன்றத்திற்குச் சென்று கொடுக்கக் கூடிய அளவுக்கு வளர்ந்திருக்கிறோம். இன்னும் பல குறிக்கோள்கள் இருக்கு. அதுல முக்கியமானது, கல்வியிலும், வேலை வாய்ப்பிலும், அரசியலிலும் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்பது. இந்தக் குறிக்கோளை அடையும் வரையிலும் நாங்க போராடணும். ஒரு திருநங்கைக்கு இன்னொரு திருநங்கை உறுதுணையாக இருக்கணும்." 

காரைக்கால் திருநங்கை சங்க தலைவி, சுபிக்‌ஷா "திருநங்கைகள் அனைவருக்கும் வாழ்த்துகள். நம்மில் இருந்து முதல் முறையாக ஒருவர் காவல்துறை அதிகாரி ஆகி மாற்றத்திற்கான விதையை முதலில் விதைச்சு இருக்கார். இது நம்ம முன்னேற்றத்துக்கான தொடக்கம்தான். இனிவரும் காலங்களில் திருநங்கைகள் அனைவரும் அரசியலில் ஈடுபட ஆர்வம் காட்ட வேண்டும். அப்போதுதான் நமக்கான உரிமையை நாமே கேட்டு பெற முடியும். அதுதான் என் ஆசை." 

சமூக ஆர்வலர், அருணா: "சில வருடங்களுக்கு முன்பு வரையிலும் தடை செய்யப்பட்ட குழுக்கள் மாதிரிதான் திருநங்கைகள் இங்க வாழ்ந்துகொண்டு இருந்தார்கள். இப்ப இந்த நிலைமை மாறியிருக்கு. கடந்த 15 வருடத் தொடர் போராட்டத்தால் தான் இவ்வளவு மாற்றம் நடந்திருக்கு. வாக்களிக்கும் உரிமை, குடும்ப அட்டைனு உரிமைகளுக்கான எல்லாம் கிடைச்சுட்டு இருக்கு. இப்போது திருநங்கைகளை புறக்கணிப்பது, வெறுத்து ஒதுக்குவது எல்லாம் குறைந்து இருந்தாலும் இன்றுவரை சம உரிமை, அங்கீகாரம் கிடைத்திருக்கிறதா என்றால் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எங்களுக்கான சம உரிமை, சம மரியாதை கொடுக்க வேண்டும் என்று அரசியல் அமைப்புகளிடமும், பொதுமக்களிடமும் கோரிக்கை வைக்கிறேன். போராட்டத்தால் இறந்த பல திருநங்கைகளுக்கு இந்த நாளை சமர்ப்பணம் செய்கிறேன்." 

மூத்த திருநங்கை, நூரி: "நான் கடந்த 30 ஆண்டுகளாக ரொம்ப கஷ்டப்பட்டேன். இப்ப அது எல்லாமே மாறி இருக்கு. இளம் திருநங்கைகள் பலர் சாதிக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கு. முதியவர், சிறியவர் என்ற பாகுபாடு இல்லாமல், ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக செயல்படணும். உரிமைகளை மீட்டு எடுக்கணும். அப்பத்தான் இந்த நாளைக் கொண்டாடுவதில் உண்மையான அர்த்தம் கிடைக்கும்." 

- நா.சிபிச்சக்கரவர்த்தி