Published:Updated:

வழிமறித்தோம்... வரைந்தோம்!

வழிமறித்தோம்... வரைந்தோம்!

வழிமறித்தோம்... வரைந்தோம்!
##~##

எண்ணெய் போட்டுப் படிய வாரிய தலை. முட்டிக்கால் வரை நீண்ட ஜிப்பா, ஜிப்பா பாக்கெட்டில் கறுப்பும் கலருமாக ஸ்கெட்ச் பேனாக்கள், பென்சில்கள், தோளில் ஒரு ஜோல்னா பை... நிறைய வெள்ளை பேப்பர் களோடு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

 இப்படி ஓர் ஓவியர் கெட்-அப்பில் நம்மில் ஒரு 'குறும்பர்’ ரெடி... கிளம்பினோம்.

அண்ணா சாலை அமெரிக்கன் எம்பஸி...

விடியற்காலையில் இருந்தே மினி மகாமகக் கூட்டம். கூட்டத்து நடுவில் நின்று இருந்த நமது ஓவியர், நச்சு பண்ணத் துவங்கினார். ''சார்... சார்... அச்சு அசலா உங்களை அப்படியே ஒரு படம் வரைஞ்சு தர்றேனே...''

''ஸாரி... வேணாம்பா. நானே இங்கே டென்ஷன்ல இருக்கேன்.''

''சார்... ப்ளீஸ் ரெண்டே ரூபா சார். வரைஞ்ச படத்தை அப்படியே எடுத்துட்டுப் போய் லேமினேட் பண்ணி வீட்ல மாட்டிவெச்சுக்கலாம் சார்.''

வழிமறித்தோம்... வரைந்தோம்!

''வேண்டாம்னா, ஏன்யா தொந்தரவு பண்றே?''

''சார்... நம்புங்க... உண்மைலேயே ரொம்ப நல்லா வரைவேன் சார்... (பிரபல ஓவியர்கள் வரைந்து விகடனில் பயன்படுத்தப்பட்ட படங்கள் சிலதை ஜோல்னாவில் கைவசம் வைத்திருந்தார். அதைக் காட்டி...) ப்ளீஸ்... ஒரே ஒரு சான்ஸ் குடுங்க சார்... நான் ரொம்ப ஏழை சார்... நீங்க குடுக்கிற காசில்தான் வீட்டுல உலை கொதிக்கணும். படம் சரியா இல்லேன்னா, சார்ஜ் குறைச்சுக்குங்க சார்... ப்ளீஸ்...''

''சரி... சரி... வரைங்க...'' - ஒருவழியாக ஒப்புக்கொண்டவர், பக்கத்தில் இருந்த நண்பருடன் பேச ஆரம்பித்துவிட்டார்.

சரியாக ஐந்து நிமிடங்கள் கழித்து தான் வரைந்ததை நீட்டியபடி, ''ரெண்டு ரூபா தாங்க சார்...'' என்றார் இவர்.

''அட... இவ்வளவு சீக்கிரம் வரைஞ்சுட் டீங்களா?'' என்று வியப்போடு அதை வாங்கிப் பார்த்தவரின் முகம் சட்டென்று இறுகிப்போய், ''என்னங்க இது?'' என்றார் அதிர்ச்சியாகி. நம்மவர் மந்தகாசமாக இளிக்க ஆரம்பிக்க...

''என்னவாம்..? என்ன ஆச்சு?'' என்றபடி 'யாரோ’போல் நடுவில் நுழைந்தோம் நாம்.

''வரையறேன்னு சொல்லிட்டு... இதோ பாருங்க சார்!'' என்று படத்தைக் காட்டி (முதல் கிறுக்கல்) பஞ்சாயத்தை ஆரம்பித்தார்.

''ஓ.கே! எவ்வளவு குற்றம் குறை இருக்கோ, அந்த அளவுக்குப் பைசா குறைச்சுக்கலாம். ஒன் செவன்ட்டி ஃபைவ் பைசா கொடுத்திருங்க போதும்!'' என்று நம்ம பார்ட்டி, 'தருமி’ ஸ்டைலில் சொல்ல...

''ரெண்டு ரூபா தர்றேன். ஆனா, நீங்க பண்ணது கொஞ்சம்கூடச் சரிஇல்லே ஆமா... தொழில்னா ஒரு ஒழுங்கு இருக்க ணும் சார். இப்படிக் குச்சிக் குச்சியாக் கிறுக்கிட்டு, ரெண்டு ரூபா கேக்கறது எந்த விதத்துல நியாயம்? மனசாட்சின்னு ஒண்ணு இருக்கணும் சார்!'' என்று ஆதங்கத்தோடு சொன்னபடியே, பர்ஸில் இருந்து இரண்டு ரூபாயை எடுத்துக் கொடுத்தார்.

அந்த இரண்டு ரூபாயை அவரிடமே திருப்பிக் கொடுத்து, நமது குறும்பு விஷயத்தைச் சொன்னோம்.

''விகடன் குறும்பு டீமா?! சரிதான்... உங்க விளையாட்டுல நான் மாட்டிக்கிட்டேனா?'' என்று சிரித்தார். பெயர்: பொன்னம்பலம், அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர். சொந்த ஊர் மதுரை.

மெட்ராஸ் பிரசிடென்ஸி காலேஜ்... மாட்டிக்கொண்டவர், ஒரு மொட்டைத் தலை மாணவர்.

''அட்வான்ஸ் ஒரு ரூபா தந்திடறீங்களா பிரதர்?''

வழிமறித்தோம்... வரைந்தோம்!

''வரைங்க... வரைங்க... மொத்தமாத் தர்றேன்...'' என்ற மொட்டை, தன் சகாக்களுக்கு இடையே அமர்ந்தபடி கண்ணைக்கூடச் சிமிட்டாமல் 'போஸ்’ தர ஆரம்பித்தார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு வரைந்து களைத்த மாதிரி, ''ஆச்சு பிரதர்... ரெண்டு ரூபா எடுங்க...'' பக்கத்தில் இருந்த மாணவர்கள் படத்தை எட்டிப் பார்த்துவிட்டுச் சிரிக்க, அரை செகண்டு கோணிக்கொண்டது முகம். அதைத் தொடர்ந்து அவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது! (கிறுக்கல்ஸ்-2) ''இதுதான் நானா?'' என்றார் வெட்கமாக. ''ஆமா... இருக்கிறதுதானே வரும்... எவ்வளவு பெர்ஃபெக்ட்டா வரைஞ்சிருக்கேன். உங்க சட்டையில பாக்கெட் இருக்கா... இதோ படத்துல பாருங்க, மறக்காம பாக்கெட் போட்டிருக்கேன்... தோ ரஜினி ஸ்டைல்ல உங்க மொட்டைகூட தத்ரூபமாப் போட்டிருக்கேன்...'' என்று பார்ட் பை பார்ட்டாக ஒப்பிட ஆரம் பித்தார் ஓவியர்!

''பார்த்தியா... டபாய்க்கிறே பார்த்தியா?'' - காம்பவுண்டில் இருந்து இறங்கினார் மாணவர்.

விஷயத்தைத் தெரிவித்ததும், ''அய்யே... நிஜமாவே நம்பிட்டோம் சார்!'' என்றார் போஸ் கொடுத்தவர். அவர் பெயர் ராஜேந்திரன்.

மெரீனா பீச்...

அந்த நண்பகல் வேளையில் மழை பெய்து முளைத்த காளான்கள் மாதிரி அங்கங்கே ஜோடி ஜோடியாகக் காதலர்கள். அந்த அநியாய அக்குறும்புகளுக்கு மத்தியில் நம்மதெல்லாம் ஜுஜுபிம்மா!

அந்தச் சமயத்தில்தான் அந்தப் பயில்வான், 'காபரே’ ஸ்டைலில் ஒவ்வொரு துணியாகக் கழற்றிக்கொண்டு இருந்தார். ''சார், ஒரு படம் வரையவா? டூ ருபீஸ் கொடுங்க போதும்!'' என்று ஸ்கெட்ச் பேனாவை, அவரது மூக்குக்கு நேரே ஆட்டி ஆட்டி 'நம்மவர்’ கேட்டார்.

வழிமறித்தோம்... வரைந்தோம்!

தன்னை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு... ''இப்படியேவா?'' என்றார். ''ஏன், என்ன தப்பு..? பாடியை என்னமா வெச்சிருக்கீங்க? டெய்லி எக்ஸர்சைஸ் பண்ணுவீங்களா சார்? ஐயையோ...'' என்று சிலிர்த்துவிட்டு, ''ரெண்டு ரூபா தந்தாப் போதும். தத்ரூபமா வரைஞ்சு தர்றேன் சார்!''

ரொம்ப ஆழமாகச் சிந்தித்துவிட்டுத்தான் 'ஓ.கே.’ சொன்னார் -

''சார், இப்படித் திரும்பி நில்லுங்க... இங்கே பாருங்க... அசையாதீங்க...'' என்று ரொம்ப டார்ச்சர் பண்ணி வரைய ஆரம்பித்தார். பயில்வான் செம செக்ஸியாக நின்றார்.

முடிவாக, படத்தை நீட்டியதும் பார்க்கணுமே... (மூன்றாவது கிறுக்கல்) துள்ளிக் குதித்தபடி ஓவியரைக் கொத்தாகப் பிடித்துக்கொண்டார். ''என்னை என்ன கேனயன்னு நெனைச்சியா..? யார்றா நீ... இந்த மாதிரி தேடி வந்து இன்சல்ட் பண்றதுக்கு... எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க?'' என்று எகிற... நாம் உடனடியாக உள்ளே புகுந்தோம்.

டவல் எடுத்து அவசரமாகச் சுற்றிக்கொண்டு ஓவியரைக் காட்டி, ''என்கிட்டயே தமாஷ் காட்டறான் சார்...'' என்று டென்ஷனான மனிதரை நிறுத்தி, ஆசுவாசப்படுத்தி விஷயத்தைச் சொன்னோம். ஒருமுறை ஓவியரைப் பார்த்தார். பிறகு நம்மைப் பார்த்தார். கேமராவைப் பார்த்தார். ''ஐயையோ... ஜட்டியோட என் படம் வரப்போவுதா..?'' என்று வெட்கப்பட்டார். பிறகு, ''விகடனாச்சே... எப்படியோ படம் வந்தா போதாதா?'' என்று சொன்னார். பார்த்தசாரதி என்கிற இவர், உடற்பயிற்சி செய்ய பீச்சுக்கு வந்தவராம். 'பாடி பில்ட்’ பண்ணி சினிமாவில் வில்லனாக நடிக்க ஆசையாம்!

கடற்கரை ரயில்வே ஸ்டேஷன்...

அங்கே ஒரு கடைக்காரரை வம்புக்கு இழுத்தார் ஓவியர்!

''சார், நான் உங்களை வரையறேன்... நல்லா வந்தா துட்டு குடு சார்...'' என்றவர் பதிலுக்குக் காத்திருக்காமல் வரைய ஆரம்பித்தார். 'வேண்டாம்’ என்று முதலில் சொன்ன கடைக்காரருக்கு, இப்போது டென்ஷன் வந்திருந்தது. கோல்டன் பீச் சிரிக்காத மனிதர் மாதிரி சிலையாக போஸ் தரத் துவங்கி இருந்தார் - தன்னையும் அறியாமல். முடிவில் ஓவியம் காட்டப்பட்டது. கடைக்காரர் ரொம்ப ஆவலாக வாங்கிப் பார்த்து. (கிறுக்கல்ஸ் 4) கலவரமாக நம்மைப் பார்த்தார்.

''என்ன 'ஓ.கே’-வா... வரட்டா?'' என்றார் ஸ்கெட்ச் பேனாவை பாக்கெட்டில் போட்டபடி, ஓவியர் கிளம்பப் பார்த்தார். ''படம் வரையறேன்னு என் மானத்தை வாங்கிட்டு, குடிச்ச கூல்டிரிங்க்குக்குப் பணமும் தராமத் தப்பிக்கிறியா?'' என்றவரைக் கண்டுக்காமல் ஓவியர் நடையைப் போட, அதற்கு மேல் நம்மால் நிற்க முடியவில்லை. ஓடிப்போய் கடைக்காரரை 'கூல்’ பண்ணி, பைசா கொடுத்து விஷயத்தைச் சொன்னோம். இந்த முறை ராஜேந்திரன் தன் படத்தை ரிலாக்ஸ்டாக மீண்டும் பார்த்தார். அடடா... என்ன வெட்கம்!

பாரீஸ் கார்னர்...

'வேண்டாம்... நோ...’ - சொன்னார்கள் சிலர். பதில்கூடச் சொல்லாமல் நகர்ந்தார்கள் பலர். ஒருவழியாக ஒருவர் சிக்க, ரெண்டு ரூபா அக்ரிமென்ட்டுகளை முடித்துக்கொண்டு படம் வரையத் தயாரானார் ஓவியர். சில விநாடிகள்தான்... அந்தப் பயணிக்கான பஸ் வந்து விட, தாவி ஓடியவரை எகிறிப் பிடித்தார் ஓவியர். ''சார்... ஒரு நிமிஷம் சார்... முடிஞ்சிடுச்சு... ப்ளீஸ்...''

வழிமறித்தோம்... வரைந்தோம்!

''யோவ் விடுய்யா... என் பஸ் பூடும்!''

''சார், ரெண்டு ரூபா தாங்க சார்... வரைஞ்ச வரைக்கு மாவது வாங்கிக்கிட்டு தொண்ணூறு பைசா தாங்க சார்.''

பாக்கெட்டில் கைவிடுகிற மாதிரி நடித்து, சடாரெனத் துள்ளிக் குதித்து ஓடிவிட்டார் பயணி!

சோகமாக நின்ற ஓவியரின் தோளை ஒரு கை அழுத்தியது. ''ஏங்க... இப்படி? நீங்க மெட்ராஸ்ல ஏதோ நல்ல வேலைல இருக்கறதால்ல சொன்னாங்க... இப்படி பிளாட்ஃபாரத்துல லோல்பட்டுட்டு இருக்கீங்களே, வேலையை விட்டுட்டீங் களா?'' என்று உள்ளே நுழைந்தவர், நம்ம ஆஸ்தான ஓவியரின் உறவுக்காரர் ஒருவர்.

அதுவரைக்கும் அதகளம் பண்ணிக் கொண்டு இருந்த ஓவியர், உச்சகட்ட அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

'இல்லீங்...’ என்று தடுமாறலாக இருந்தவரைப் பேசவே விடாமல், ''அட, ஆண்டவா? இப்போ ரோட்டுல படம் வரைஞ்சுதான் குடும்பத்தைக் காப்பாத்தறீங்களா?

நீங்க 'ரெண்டு ரூபா... ரெண்டு ரூபா’னு கெஞ்சினது எனக்கே பரிதாபமா இருக்கு... இந்தாங்க, இதை வெச்சுக்கங்க... அப்புறம் ஒருநாள் வீட்டுக்கு வந்து பாக்கறேன்!'' என்று ஒரு 50 ரூபாயைக் கையில் அழுத்திவிட்டு, போகிற போக்கில், ''அது சரி... நீங்க இப்படி வேலை இல்லாம அலையறது குட்டிக்கு (ஓவியரின் மனைவி!) தெரியுமோ?'' என்று வேறு கேட்டு விட்டுப் போக... நம்ம தலைவருக்குக் கிறுகிறுவெனத் தலை சுற்றியது. சுத்தமாக மூட் அவுட்!

''போச்சு..! அவ என்னைய லேசுல நம்ப மாட்டாளேய்யா... ஐயோ... ஐயையோ... இவன் பெரிய டமாரம் ஆச்சே... நான் போறதுக்குள்ள கலவரம் ஆரம்பிச்சிருக்குமே...'' என்று கண்ணீர் முட்ட, நா தழுதழுத்தவரை நேராக ஆபீஸ் அழைத்துப் போனோம்.

அவர் இன்னமும் வேலையில் இருக் கிறார் என்பதைக் காட்ட அதிகார பூர்வமான ஒரு லெட்டர் (மனைவியிடம் காட்ட!) கொடுத்து அனுப்பினோம்!

கடைசிச் செய்தி:

நம்ம ஆளை நாலு நாட்களாகக் காணவில்லை!

-விகடன் குறும்பு டீம்: ஏ.உபைதுர் ரஹ்மான், ஜாசன், பொன்ஸீ.