Published:Updated:

பவர் பாண்டியிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பவர்ஃபுல் பாடங்கள்! #MondayMotivation

பவர் பாண்டியிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பவர்ஃபுல் பாடங்கள்! #MondayMotivation
பவர் பாண்டியிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பவர்ஃபுல் பாடங்கள்! #MondayMotivation

அறிவுரைகளை இன்னொருவரிடமிருந்து கேட்பதை விட,  நம்மைச் சுற்றி நடப்பதிலிருந்து பாடங்கள் கற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். ஏனோ தானோ என்று நாம் கடந்து போகிற விஷயங்களில், நமக்கான பாடம் இருக்கலாம். நாமே கொண்டாடித் தீர்க்கிற ஒரு விஷயத்தில் நமக்கான பாடம் இருக்கலாம். அவற்றை அடையாளம் கண்டு உணர்வதும், பின்பற்றுவதும்தான் சவால்.

தனுஷ் இயக்கத்தில், ராஜ்கிரண் நடிக்க வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கிறது பவர் பாண்டி.  நல்லா இருக்கு /  செயற்கையா இருக்கு / ராஜ்கிரண் சூப்பர் போன்ற விமர்சனங்களை விடுங்கள். அந்தப் படத்திலிருந்து சில பாடங்கள் இன்றைக்கு.

பலம் அறி

பவர் பாண்டி வேலைக்குப் போகப்போகிறேன் என்று கிளம்புவார். பழைய ஸ்டண்ட் மாஸ்டர் என்பதால், ஹீரோவுடன் நிற்கும் ஆட்களில் ஒருவராக நடிப்பார். அந்த ஹீரோவுக்கே இவர் ஒரு பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் என்பது தெரியாது. இயக்குநர் ஒரு காட்சியில் பவர் பாண்டியை  வசனம் பேசச்சொல்ல, பேசமுடியாமல் தடுமாறுவார். இவரை மாற்றிவிடுவார்கள்.

அதே, வேறொரு நாள்.. சண்டைக்காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கும். அதில் நடிக்க இவர் போகும்போது இருக்கிற ஸ்டண்ட் கலைஞர்கள் எல்லாரும் அத்தனை மரியாதை செலுத்துவார்கள். காட்சி பற்றி, படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர்  விளக்க, இவர் ஒருமுறை கேட்டுக்கொண்டு ‘நேரா டேக் போலாமே’ என்று ஜஸ்ட் லைக் தட் செய்து முடிப்பார். கைதட்டல்களும், மனநிம்மதியும் கிடைக்கும் இவருக்கு!

உங்களுக்கு எது தெரியுமோ அதை.. எங்கே மரியாதை இருக்குமோ அங்கே செய்யுங்கள். சக்ஸஸ் சட்டைப்பாக்கெட்டுக்குள் இருக்கும்! 
 

பயம் அழி

மேலே சொன்ன காட்சியையே சொல்லலாம். இயக்குநர் கௌதம் மேனன்தான், பவர் பாண்டியை  அழைத்து ‘டயலாக் பேசறீங்களா?’ என்று கேட்பார். ‘முடியாது, தெரியாது’ என்று சொல்லவே மாட்டார் பவர் பாண்டி. தயங்கவும் மாட்டார். முயல்வார். சரியாக வராதபோது, அதற்காக முகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டு திரியவும் மாட்டார். வீட்டுக்கு வந்து பேரக்குழந்தைகளிடம் ‘நல்லா போச்சு’ என்று கதைகட்டுவார். தனக்கான நாள் வரும்போது இறங்கி அடிப்பார்!  அதே போல, தவறுகளைத் தட்டிக் கேட்கவும் தயங்க மாட்டார். தேவைப்பட்டால் ‘அடிச்சுக்கூட’ கேட்பார்!


’இப்படி ஆகிடுச்சே..  இனி என்ன செய்யப்போகிறோம்’ என்ற வருத்தம் அவருக்கு இருக்கவே இருக்காது. அடுத்து.. அடுத்து என்று போய்க்கொண்டிருப்பார்.   

உங்களுக்குள் இருக்கும் பயத்தை.. பயங்காட்டி அனுப்புங்கள். என்ன நடந்துவிடப்போகிறது என்ற கெத்தும், நடந்தால் எதிர்கொள்கிற துணிவும் கூடயே இருக்கட்டும்!
 
 பழச மறக்காதே!


ஒரு பழைய புல்லட்டை அடிக்கடி துடைத்து அதை சரிபார்த்துக்கொண்டே இருப்பார். அதுதான் அவருக்கு கடைசி வரை உதவியாக இருக்கும். ‘ரொம்ப பழசாச்சு’ என்று ஓரத்தில் ஒதுக்கி வைக்காமல்.. அதை சரிபார்த்துக் கொண்டே இருப்பார்.

அது போலவே, தன் உடலையும் பாதுகாப்பார். வாக்கிங், ஜிம் என்று உடலைப் பேணுவதற்கு என்னென்ன தேவையோ அதைச் செய்தபடியே இருப்பார்.

 
எது, எப்படி, எப்போது உதவும் என்று சொல்லவே முடியாது. நீங்கள் பீரோவின் மூலையில் போட்டு வைத்திருக்கும் ஒரு பழைய MP3 ப்ளேயர்கூட ஒருநாள் உங்கள் சோகத்தை ஆற்ற வல்லது.  

வலி ஒழி

படத்தின் காட்சிகளில் ரொம்பவும் சோகமாக தன்னைக் காட்டிக் கொள்ளவே மாட்டார் பவர் பாண்டி. மகனிடம் திட்டு வாங்கிக் கொண்டு மாடிப்படியில் நடக்கும்போது பேரக்குழந்தைகளிடம் ‘அதெல்லாம் ஒண்ணுமில்ல’ என்பதுபோல சைகை காட்டிவிட்டுச் செல்வார். வலி இருக்கும். ஆனால் அதை அதிகமாக வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார். 

உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள். அதுவே உங்களை சரியான பாதைக்கு இட்டுச்செல்லும்.

காலத்தோடு கை கோர்த்துக் கொள்ளுங்கள்

ஆங்கிலம் பேசுவார் பவர் பாண்டி.  உச்சரிப்புப் பிழை வரும் என்ற பயமெல்லாம் இருக்காது. ‘பேரப்பசங்க கத்துக் கொடுத்தாங்க’ என்பார். ஃபேஸ்புக் பற்றி நண்பர்கள் சொன்னதும் அதை அறிந்து கொண்டு... தேவைக்கேற்ப உபயோகிப்பார். ‘சால்ட் அண்ட் பெப்பர்தான் இப்ப டிரெண்டு’ என்பார். ராயல் எல்ஃபீல்டில் லேட்டஸ்ட் மாடல் ஹெல்மெட்டுடன் பறப்பார்.


கால மாற்றதுக்கேற்ப நம்மைச் சுற்றி இருப்பனவற்றை நாம் அறிந்து கொள்வது.. அவசியமானது!  

பேசு.. பழகு... பேசிப் பழகு!

பவர் பாண்டிக்கு 64 வயது. ஆனால் அனைத்து வயதினருடனும் நட்பு பாராட்டுவார். பேசுவார்.. பழகுவார். பேரக்குழந்தைகளுடன், அவர்களுக்கான உடல்மொழியில் பேசுவார். தன் வயதுக்கார நண்பர்களுடனும் பேசுவார். மகனுடன் அவருக்குத் தகுந்த மாதிரி. மகன் வயதும் அல்லாத, பேரன் வயதும் அல்லாத இடைப்பட்ட ஒரு ஜென் Z பக்கத்து வீட்டுக்காரனுக்கும் பவர் பாண்டிக்குமான நட்பு.. வாவ் ரகம். அவனுடன்தான் பகிர்தல் எல்லாமே.  யாரிடமும் சொல்லாத போதும், அவனை அழைத்து தன் நிலைகுறித்துப் பகிர்ந்து கொள்வார். 

பேச, பழக, நட்பு பாராட்ட  உங்கள் வயது முக்கியமல்ல. மனதுதான் முக்கியம்!

இதுவும் இன்னமும் கத்துக்குடுத்ததுக்கு.. தேங்க்ஸ் ப.பாண்டி!  
 

-பரிசல் கிருஷ்ணா

அடுத்த கட்டுரைக்கு