Published:Updated:

வேடிக்கை பார்ப்பவன் - 1

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

வேடிக்கை பார்ப்பவன் - 1

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

Published:Updated:
வேடிக்கை பார்ப்பவன் - 1
##~##

 வெந்து தணிந்தது காடு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முன்னை இட்ட தீ முப்புரத்திலே
பின்னை இட்ட தீ தென்னிலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே!

- பட்டினத்தார்

ரு மிகப் பெரிய பொருட்காட்சிசாலையாக இந்தப் பிரபஞ்சத்தையும், அதை வேடிக்கை பார்த்தபடி வழி தப்பிய சிறுவனாக தன்னையும், இவன் அடிக்கடி கற்பனை செய்துகொள்வான்.

இவன் எதை வேடிக்கை பார்க்க வந்திருக்கிறான்? சின்னஞ்சிறிய இந்தக் கண்களைக்கொண்டு எதைத்தான் முழுமையாகப் பார்த்துவிட முடியும்! பார்வை என்பது கண் சார்ந்தது மட்டுமா என்ன?

ஜன்னல் கம்பிகள் வழியாக வேடிக்கை பார்க்கும் சிறுவனுக்கு வாசலில் கடந்துபோகும் கோயில் யானையின் பிரமாண்டம் ஒரே பார்வையில் வசப்படுமா? மலையின் அழகை அளந்துவிடத் துடிக்கும் சிட்டுக்குருவியின் சிறகுகள்தானோ இவன்?

உறக்கம் தொலைந்த அகாலங்களில், இவன் மொட்டைமாடிக்கு வந்து நட்சத்திரங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பான். இவனுக்கு அதன் மொழி தெரியாது. இருந்தாலும் பேசிக் கொண்டிருப்பார்கள்.

தோட்டத்தில் முளைத்த புல்லை, புல்லின் நுனியில் தேங்கும் பனித்துளியை, பனித்துளியில் பிரதிபலிக்கும் பரந்த மேகங்களை வேடிக்கை பார்த்தபடி வாழ்ந்துகொண்டிருப்பவன் இவன். இயற்கையை மட்டுமா? இவனையே இவன் தள்ளி நின்றுதான் வேடிக்கை பார்த்துக்கொண்டி ருக்கிறான்.

வேடிக்கை பார்ப்பவன் - 1

இவனுக்கு கதைகள் என்றால் ரொம்பப் பிடிக்கும். கருவில் இருந்தபோதே கதை கேட்டு வளர்ந்தவன். சந்தனமாக மேடிட்டிருந்த தன் வயிற்றைத் தடவியபடி இவன் அம்மா இவனுக்கு கதைகள் சொல்வாள். கர்ப்பக்கிரகத்தில் ஒருக்களித்துச் சுருண்டபடி மொழிகள் ஏதுமற்ற அந்த அமானுஷ்ய இருட்டின் கதகதப்பில் தொப்புள்கொடி வழியாக அந்தக் கதைகள் இவனுக்குள் விரியும்.

ருநாள் இவன் அம்மா இவனுக்கொரு கதை சொன்னாள். உலகம் பிறந்த கதை. பிரபஞ்சம் பெரிதாக வெடித்து, ஒரு நெருப்புப் பந்து உலகமாக விழுந்ததாம். விழுந்தது, எரிந்ததாம். பின்பு, அணைந்ததாம். அப்புறம்தான் உயிர்கள் பிறந்ததாம். இவன் தொப்புள்கொடியை இறுகப் பற்றிக்கொண்டான். இந்த உலகமெனும் நெருப்புப் பந்துக்குள்ளா நான் பிறக்கப்போகிறேன்? பிரசவத்துக்கு மருத்துவர்கள் சொன்ன தேதி தள்ளிப்போன பின்னும் இவன் வெளியே வராமல் உள்ளிருப்புப் போராட்டம் தொடங்கினான்.

மீண்டும் அம்மா ஒரு கதை சொன்னாள். சொல்லும்போதே அவளுக்கு மூச்சுத் திணறிக் கொண்டிருந்தது. 'என்ன சத்தம் இது?’ என்று இவன் மொழியில் கேட்டான். 'மூச்சுத் திணறுகிறது. நாம் உயிர் வாழ காற்று அவசியம்’ என்றாள். 'காற்று என்றால் என்ன?’ என்றான். 'இந்த உலகத்தில் நெருப்பைப் போலவே காற்றும் ஒன்று. அதுதான் நம் உயிர்வாழ்வின் சுவாசம்’ என்று அம்மா சொல்ல, இவன் உள்ளிருப்புப் போராட்டத்தை நிறுத்தி தன் தாய்க்கு சுவாசம் அளித்தான். அப்போதும் எல்லாக் குழந்தைகளையும் போலவே தலை வழியாக வெளியே வராமல், தன் இரு கால்களை நீட்டி இந்தப் பூமியை எட்டி உதைத்தான்.

வேடிக்கை பார்ப்பவன் - 1

இப்படித்தான் நண்பர்களே... நெருப்பும் காற்றும் நிலமும் இவனுக்கு அறிமுகமானது. தண்ணீர் இவனுக்கு அறிமுகமானது தனிக் கதை.

வன் அம்மா, இவன் பெண்ணாகப் பிறப்பான் என்று நினைத்தாள். பெண்ணாகப் பிறந்திருந்தால் இவன் இன்னமும் சந்தோஷப்பட்டிருப்பான். ஆணாகப் பிறந்து தொலைத்தான். பெண் பிள்ளைகள் இல்லாத வீட்டில், சுருட்டை முடியுடன் பிறந்த ஆண் குழந்தைகளுக்குக் குடுமி போட்டு, ரிப்பன் கட்டி, பூக்கள் சூட்டி அலங்கரித்து அழகு பார்ப்பதில்லையா! அப்படித்தான் இவன் அம்மாவும் இவனை அலங்கரித்தாள். தன் தலைக்கு மேல் கட்டப்பட்டிருந்த அந்த சிவப்பு ரிப்பனை கண்ணாடியில் பார்த்து ரசித்துவிட்டு, இவன் தன் நகர்வலத்தைத் தொடங்கினான்.

நகர்வலம் என்றால் நீங்கள் நினைக்கும் நகரத்தைச் சுற்றிவரும் வலம் அல்ல; இது நகரும் வலம். ஏன் என்றால், இவன் வசித்தது ஒரு கிராமம். அந்தக் கிராமத்தில் குட்டைகள், ஏரிகள், நதிகள் என்று தண்ணீர் தன் வெவ்வேறு வடிவங்களில் வாழ்ந்துகொண்டிருந்தது. அருகில் இருந்த குட்டையின் நீருடன் அறிமுகமாக விரும்பி, இவன் அதனுடன் உரையாடத் தொடங்கினான்.

'இன்னும் ஆழமாகப் பேசலாமே!’ என்றது அது.

இவன் உள்ளே இறங்கினான். பிள்ளையைக் காணோமென இவன் அம்மா தேட, உறவுகள் தேட, ஊரும் தேடியது. ஏதோ ஓர் உள்ளுணர்வில், வீட்டுக்கு அருகிலிருந்த குட்டையைத் தேடி வந்த இவன் அம்மா, தண்ணீரில் சிவப்பு ரிப்பன் மிதப்பதைப் பார்த்து உள்ளே குதித்து, இவனை வெளியே தூக்கினாள். வயிற்றை அமுக்கி, குடித்த நீரையெல்லாம் வெளியே துப்பவைத்தபோது, இவன் ஆகாயத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். வானத்தில் அசைந்தபடியே ஒரு மேகம் சொன்னது, 'என் செல்லமே! பஞ்சபூதங்கள் உனக்காகப் படைக்கப்பட்டிருக்கின்றன. நீ செய்யவேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. அவ்வளவு சீக்கிரமாக சாக மாட்டாய்.’

வனுக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அன்று காலை, அம்மா இவனை எழுப்பினாள். பல் தேய்த்துவிட்டாள். குளிப்பாட்டினாள். உணவூட்டினாள். இவனைப் பள்ளிக்கு அழைத்துச்செல்லும் மாட்டுவண்டியில் ஏற்றி அமரவைத்துக் கையாட்டினாள். மதிய உணவு இடைவேளையில், இவனுக்குப் பிடிக்காத கீரை சாதத்தைத் திறந்து பார்த்து பசியோடு அந்த டிபன் பாக்ஸை இவன் மூடிய நேரத்தில் செத்தும்போனாள்.

'உங்க அம்மா செத்துட்டாங்க.. உன்னைக் கூட்டிட்டுப் போக ஆள் வந்திருக்கு’ - ஸ்கூல் ஆயா வந்து சொன்னபோது, இவனுக்கு சந்தோஷமாக இருந்தது. மேத்ஸ் ஹோம்வொர்க்கை இவன் செய்யவில்லை. அடுத்த பீரியடின் அடியில் இருந்து இவன் தப்பித்துக்கொண்டதாக நினைத்தான்.

இவனைவிட்டு தள்ளி நின்று, இவன் வாழ்க்கை இவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை இவன் அறியவில்லை.

வேடிக்கை பார்ப்பவன் - 1

வீட்டை நெருங்குகையில் இவன் பால்ய சிநேகிதன் இவனிடம் ஓடிவந்து, 'உங்க வீட்டுல பாம்பு பூந்துருச்சு. அதான் கூட்டமா இருக்கு!'' என்று சொல்ல, 'இல்லடா, அவங்கம்மா செத்துட்டாங்க. அதான் எல்லாரும் வந்திருக்காங்க!’ என்று இன்னொரு நண்பன் சொல்ல, பாம்பையும் மரணத்தையும் நினைத்து இவன் குழம்பி நின்றான்.

ஏனென்று புரியாமல் எல்லோருடனும் அழுது முடித்து, சாவுக்கு வந்திருந்த சொந்தக்காரக் குழந்தைகளுடன் இவனும் விளையாடிக்கொண்டிருந்தான். ஆற்றங்கரை மணலைச் சேர்த்து அந்தப் பிஞ்சுக் கைவிரல்கள் வடித்த கோபுரம் அழகாக இருந்தது. ஒரே ஒரு குறை, அதை வண்ணங்களால் அலங்கரிக்க வேண்டும். சட்டென்று இவனுக்கொரு யோசனை தோன்றியது. இவன் தந்தை ஓர் ஆசிரியர். வீட்டில் ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக வகுப்பு எடுப்பார். அதனால் இவன் வீட்டில் கலர்கலராக சாக்பீஸ்கள் இருக்கும். வேகமாக வீட்டுக்கு ஓடினான். பலகையில் இறந்துகிடந்த அம்மாவையும், அழுதுகொண்டிருந்த உறவினர்களையும் தாண்டி, அம்மா சீதனமாகக்கொண்டு வந்த தேக்குமரப் பீரோவைத் திறந்து, வண்ண வண்ண சாக்பீஸ்களை கால்சட்டையில் நிரப்பிக்கொண்டு ஆற்றங்கரையை அடைந்தான்.

இப்போது கோபுரம் முழுமை பெற்றுவிட்டது. அதன் அழகை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கையில், யாரோ ஓர் உறவினர் இவனைத் தேடிவந்து அழைக்க, இவன் தலை மொட்டையடிக்கப்பட்டு எங்கேயோ கூட்டிச் செல்லப்பட்டான்.

அது சுடுகாடு என்றும்; அன்று இவன் தீ வைத்தது இவன் தாயின் தலை மீது என்றும் இவன் அறிந்தானில்லை. அதன் பிறகு பல நாட்கள் தன் பால்ய வயது தோழர்களிடம் இவன் பெருமையாகச் சொல்லிக்கொள்வான். 'எங்க அம்மா தலைல நான்தான் நெருப்பு வெச்சன். எப்படி எரிஞ்சுச்சி தெரியுமா!’

இப்போது யோசித்துப் பார்க்கையில், இவனுக்கு ஒன்று புரிகிறது. 'நெருப்பு’ என்றால், நெருப்பு மட்டுமல்ல; நெருப்புக்குள்ளும் நீர் இருக்கிறது. அந்த நீர்... கண்ணீர்!

- வேடிக்கை பார்க்கலாம்...