Published:Updated:

மறக்கவே நினைக்கிறேன்

மாரி செல்வராஜ், ஓவியங்கள்: ஸ்யாம்

மறக்கவே நினைக்கிறேன்

மாரி செல்வராஜ், ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
##~##

வ்வொரு வருடமும் பட்டாசு வாசத்தோடும், புத்தாடை சொரசொரப்போடும் வரும் தீபாவளி, பார்த்தவுடன் முறைத்தபடி சிரிக்கிற ராஜீயின் முகத்தோடுதான் என் வீட்டுக்குள் வரும். அப்படித்தான் இந்த வருடமும் கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் ராஜீயின் முகச்சாயலோடு பட்டுப்பாவாடை உடுத்திய சிறுமியாக என் வாசலில் வந்து முறைத்துக்கொண்டு நிற்கிறது இந்த தீபாவளி.

ராஜீ, என் பால்யத்தின் முதல் பெண் சினேகிதி. வயல் வரப்புகளில் துளை போட்டு பாதாளத்தில் வசதியாக வலை பின்னி, சமயம் வரும்போதும் சாரல் வரும்போதும் வயலுக்குள் புகுந்து நெல்மணிகளை அறுத்துக்கொண்டு வருகிற காட்டு எலிகளின் சாமர்த்தியங்கள் சிறு வயதிலே நிறைந்தவள் ராஜீ. எப்போதும் ஆண்கள்கூடவே விளையாட விரும்பும் அவளும், எப்போதும் பெண்கள் கூடவே விளையாட விரும்பும் நானும் அந்த வயதில் அவ்வளவு நட்பாக நெருங்கிப்போனதில் எந்தப் பிரச்னையும் யாருக்கும் இல்லை.

அசந்து உறங்கிக்கிடப்பவனை அதிகாலையிலேயே எழுப்பி விளையாடக் கூட்டிப்போகிறவள், அவளுக்கு அகோரமாகப் பசித்தால்தான் சாப்பிட வீட்டுக்கு அனுப்புவாள். ஒரு சொட்டுத் தேன் கிடைத்தாலும் சொட்டாங்கி போடாமல் விரல் நுனியில் அதைத் தேக்கிவைத்து என்னிடம் சேர்க்கிற தோழி.  இப்படியாக ஆண், பெண் என அறியாத பால்யத்தில் இடி இடித்தால் உடனே கட்டிக்கொள்கிறவர்களை, மின்னலடித்தால் ஒன்றாக ஊளையிடுகிறவர்களை, மழை பெய்தால் ஒன்றாக நனைந்தவர்களைப் பிரித்து, ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கவிடாமல் வேறு வேறு தெருக்களில் வேறு வேறு வழிகளில் வேறு வேறு முகங்களோடு அலையவிட்டது ஒரு தீபாவளி!

மறக்கவே நினைக்கிறேன்

ஒவ்வொரு தீபாவளியையும் நாங்கள் விரலால் எண்ணி எண்ணி கயிறு கட்டி வேகமாக வந்துவிடும்படி ஆசையோடு இழுத்துக்கொண்டிருந்தால், அவள் மறுபக்கமாக நின்றுகொண்டு தீபாவளி வராமல் பாதி வழியிலே திரும்பிப் போவதற்காக சொக்கர் கோயில் உண்டியலில் காசு போடுவாள். பாம்புக்கும் பல்லிக்கும் பட்டத்து யானைகளுக்கும்கூட அந்த வயதில் பயப்படாத ராஜீ, தீபாவளி பட்டாசுகளுக்குப் பயந்தவள் என்பதுதான் எங்கள் நட்பின் துரதிர்ஷ்டம். எந்தத் திசையில் இருந்து யார் எந்தப் பட்டாசு வெடிப்பார்கள் என்ற பயத்தில், எந்த நேரமும் பறப்பதற்கு ஆயத்தமாக றெக்கைகளை விரித்தபடி வந்து இறங்கும் ஒரு காட்டுப் புறாவைப் போல தயாராக நிற்பாள் ராஜீ. அப்படிப்பட்ட ராஜீயின் பட்டாசு பயத்தை எப்படியாவது போக்க வேண்டும் என்று சிறுவர்களான நான், லட்சுமி, கோமதி மூவரும் நினைத்ததுதான், அத்தனைக்கும் காரணம்!

அன்று பள்ளிக்குக் கிளம்பும்போதே புத்தகப் பைக்குள் பாம்பு மாத்திரைகளையும், கொஞ்சம் கம்பி மத்தாப்புகளையும், அதோடு சேர்த்து இரண்டு புஸ்வாணங்களையும் எடுத்துப் போட்டுக்கொண்டு போனேன். எப்போதும் ராஜீ, கோமதி, லட்சுமி மூன்று பேருமே என்னோடு சேர்ந்துதான் பள்ளிக்கு வருவார்கள். பெரியகுளத்து முதல் கிணறு மடை தாண்டும் வரை யாரும் மூச்சுவிடவில்லை. உண்டியலில் காசு போட்டு வேண்டியும் எப்பவும் போல தீபாவளி வந்துவிட்டதற்காக, சொக்கர் கோயிலில் நின்று எப்படியும் சொக்கரை முணுமுணுவென கொஞ்ச நேரம் ஏதேனும் சொல்லித் திட்டுவாள் ராஜீ. அப்போதுதான் பைக்குள் இருந்து பட்டாசை எடுக்க வேண்டும் என்பது எங்கள் திட்டம். அதன்படி கிட்ணகுளம் மடையில் உட்கார்ந்து பாம்பு மாத்திரைகளை பைக்குள் இருந்து எடுத்ததும் பதறி ஓடிய ராஜீயை, லட்சுமியும் கோமதியும் வலுக்கட்டாயமாகப் பிடித்துக்கொள்ள, நான் அவற்றைக் கொளுத்தினேன். மாத்திரையிலிருந்து எந்தச் சத்தமும் இல்லாமல் கறுப்புக் கயிறு போல மேலெழும்பும் பாம்பு வெடி அவளை அவ்வளவாகப் பயமுறுத்தவில்லை என்பதில் எங்களுக்கு சந்தோஷம். பிறகு,  கம்பி மத்தாப்புகளைக் கொளுத்தி அவள் கையில் கொடுத்தோம். 'ஊ... ஊ’வென கத்திக்கொண்டும் நடுங்கிக்கொண்டும் கையில் பிடித்தவள், அதில் வரும் தீப்பொறிகளைப் பார்த்ததும் சிரிக்கத் தொடங்கிவிட்டாள். அத்தனை வெடிகளையும் அங்கேயே வைத்து அவளுக்கு வெடித்துக்காட்ட ஆசைதான். ஆனால், அதற்குள் ஆட்கள் வந்துவிட்டதால் மிச்சம் இருக்கும் வெடிகளை அள்ளி அவளின் பைக்குள் போட்டு, ''வீட்டுக்குப் போய் இதேபோல் வெடித்துப் பார். வெடி பயம் உனக்குப் போய்விடும்'' என்று சொல்லிவிட்டு வந்தோம்.

ன்று மாலையில் ராஜீயின் அம்மா திடீரென்று வீட்டுக்கு முன்னால் கிடந்து அலறினாள். பதறிக்கொண்டு ஓடிய என் அம்மாவின் பின்னால் நானும் பயந்துகொண்டு ஓடினேன். எல்லோரும் எல்லாத் திசையிலிருந்தும் ஓடிவந்தார்கள். ''வெடினு சொன்னாலே ஒரு அடிகூட முன்னாடி வராத புள்ள, யாருகிட்டயோ வெடிய வாங்கிட்டு வந்து இப்படி முகத்துல வெச்சி வெடிச்சிருக்கே... நான் என்ன பண்ணுவேன். மூக்கும் முழியும் ஒழுங்கா இருந்தாலே, ஒருத்தன்கிட்ட புடிச்சிக் கொடுக்க வக்கில்லாத நான், பாதி மூக்கும் தீய்ஞ்ச முழியுமாக் கிடக்கிறவளை எப்படிக் கரை சேர்ப்பேன்?'' என்று ராஜீயின் அம்மா அழுததைக் கேட்டவுடனேயே எனக்கு விவரம் புரிந்துவிட்டது.

மறக்கவே நினைக்கிறேன்

அவரவர் தலைக்குள் அவரவர் அணுகுண்டு வெடித்தது. எல்லோரையும் விலக்கிவிட்டு வீட்டுக்குள் படுத்திருந்த ராஜீயைப் போய் பார்த்தேன். மூக்கும் கன்னமும் வெடித்து வீங்கிக்கிடந்தாள். எங்கே வெடி கொடுத்தது நான்தான் என்று சொல்லிவிடுவாளோ என்ற பயத்தில், அம்மாவின் பின்னால் பதுங்கி நின்றவனைத் தேடிப் பிடித்துப் பார்த்து கிழியாத பாதி கண்களால் அவள் அழுத அழுகை, பக்கத்தில் நின்ற லட்சுமி, கோமதி, சுந்தரி என எல்லோரையும் அழ வைத்துவிட்டது.

அந்த அழுகையோடு ராஜீயை மருத்துவ மனைக்குத் தூக்கிக்கொண்டு போனார்கள். அதோடு ராஜீ எங்களோடு விளையாட வரவில்லை. ராஜீக்கு வெடி கொடுத்தது நான்தான் என்பதை எல்லோரிடம் சொல்லிவிடுவதாகச் சொல்லி மிரட்டி, பேனா, பென்சில், ரப்பர், மிட்டாய் என நினைத்த நேரத்தில் நினைத்ததை கோமதியும் லட்சுமியும் என்னிடம் பிடுங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக ராஜீயிடமே சரணடைய முடிவு செய்தேன்.

ப்போது யார் அதிரசம் கொடுத்தாலும் ராஜீ சிரிப்பாள் என்ற அசட்டுத் தைரியத்தில், வீட்டில் யாரும் இல்லாதபோது இரண்டு அதிரசங்களோடு ராஜீயைப் பார்க்கப் போனேன். பாதி முகத்திலும் பாதி மூக்கிலும் தையல் போட்டு பட்டறைப் பாட்டி சொல்லும் கதையில் வரும் குட்டிப் பிசாசைப் போல குப்புறப் படுத்துக்கிடந்தாள் ராஜீ. அதிரசத்தைக் கொடுத்தேன். ஆச்சர்யம்... நான் நினைத்ததைப்போலவே சிரித்த முகத்தோடு வாங்கிக்கொண்டாள். முதல் அதிரசத்தை அவள் கடிக்கும்போது தொடங்கியது எங்கள் பால்யத்தின் அந்த வரலாற்று உரையாடல்.

''ரொம்ப வலிக்குதா ராஜீ?''

''இதுவரைக்கும் வலி இல்ல... இந்த அதிரசத்தைக் கடிச்சதும் கொஞ்சம் வலிக்கு.''

''நான்தான் வெடி கொடுத்தேன்னு உங்க அம்மாகிட்ட சொல்லுவியா?''

''சொல்ல மாட்டேன்... ஆனா, நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கிடணும்!''

''நானா..? நான் ஏன் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிடணும்?''

''இல்ல... எங்க அம்மா சொல்லிச்சி, என்னை இனி யாருக்காச்சும் கட்டிக் கொடுக்குறது கஷ்டமாம். என் முகமெல்லாம் அசிங்கமாகிடுச்சாம். யாருக்கும் என்னைப் புடிக்காதாம்... அதான்!''

''நான் உன்னக் கல்யாணம் பண்ணினா, 'அசிங்கமான பொண்ணை ஏன்டா கல்யாணம் பண்ணினே?’னு எங்க அம்மா என்னை அடிக்குமே!''

''நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கிடலைனா, எங்க அம்மாகிட்ட நீதான் வெடி கொடுத்தேன்னு சொல்லிடுவேன்... அப்பவும் உனக்கு அடி கிடைக்கும்!''

''ஐயையோ... சொல்லிடாத ராஜீ. நானே உன்னக் கல்யாணம் பண்ணிக்கிடுறேன்!''

''சொக்கர்கோயில் சத்தியமா?''

''சொக்கர்கோயில் சத்தியம்!''

அன்றோடு சரி... அதன் பின் ராஜீயைப் பார்க்கும்போதெல்லாம் அந்தக் கல்யாண சத்தியம் நினைவுக்குவர, ஓடி ஒளிய ஆரம்பித்ததுதான். ராஜீ, அம்மன் கோயிலில் நிற்கிறாள் என்றால் நான் பிள்ளையார் கோயிலுக்கு ஓடிவிடுவது. ராஜீ, வீட்டுக்குப் பால் வாங்க வருகிறாள் என்றால் கட்டிலுக்குக் கீழே போய் பதுங்கிக்கொள்வது. ராஜீ, ஆற்றில் குளிக்கிறாள் என்றால் மேற்கே குளத்துக்கு குளிக்கப்போய்விடுவது. ராஜீ திருநெல்வேலியில் படிக்கப் போனபோது, அப்பாவை வற்புறுத்தி தூத்துக்குடி பள்ளியில் போய் சேர்ந்தது... என, ராஜீக்கும் அந்தச் சத்தியத்துக்கும் பயந்து பயந்து நான் ஓடி ஒளிந்தது,  15 வருடங்கள்!

மறக்கவே நினைக்கிறேன்

ன் முகம் மாற அவள் முகம் மாற, என் குரல் மாற அவள் குரல் மாற, எங்கள் ஊரே மாறி எல்லாமே எல்லோருக்கும் மறந்துவிட்ட பின், திருமணமாகி தலை தீபாவளி நாளில் கணவனோடு ஆற்றுக்குக் குளிக்க வந்த ராஜீயிடம் வசமாகச் சிக்கிக்கொண்டது எதேச்சையானதுதானா?

'இத்தனை வருடம் முகத்தை மறைத்துக்கொண்டு ஓடிஓடி ஒளிந்தவனிடம் எப்படிப் பேசுவாள்?’ என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, அதிரசம் கடித்த அதே சிரிப்பில் தையல் வடு விரியும் அதே முகத்தோடு, ''அதான் எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சே மாரி... இன்னும் எதுக்கு பயந்து ஓடி ஒளியிற? வா கொஞ்சம் பக்கத்துல வந்துதான் பேசேன். இவங்கதான் என் மாப்பிள்ளை... எப்படி இருக்காரு? என்னங்க, நான் சொல்லல... வெடியக் கொடுத்து என் முகத்தைச் சின்ன வயசுல கிழிச்சி, என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சத்தியம் பண்ணிட்டு ஒரு பய பயந்து பயந்து ஓடுறான்னு... அது இவன்தான். பேரு மாரி; என் சின்ன வயசு பெஸ்ட் ஃப்ரெண்டு. ரெண்டு பேரும் ஒண்ணாவே திரிவோம். இப்போ தலைவரு சினிமாவுல இருக்காப்ல... எங்க கதையையும் ஒரு நாள் சினிமாவா எடுப்பாப்ல... என்ன மாரி!'' என்று அவள் சொல்லிச் சிரித்தபோது, அடக்க முடியாமல் துளிர்த்த கண்ணீர்தான், இந்த ஜென்மத்தின் என் அத்தனை தீபாவளிகளையும் அள்ளி எடுத்து ராஜீயின் கையில் கொடுத்து மன்னிப்பு கேட்டது!

- இன்னும் மறக்கலாம்...