Published:Updated:

சர்வர் மயில்சாமி!

சர்வர் மயில்சாமி!

சர்வர் மயில்சாமி!

சர்வர் மயில்சாமி!

ச்சிறுப்பாக்கம் ஜி.எஸ்.டி சாலையில் உள்ள கணபதி விலாஸ் ஹோட்டலின் இட்லி, வடைக்கு  சினிமாக்காரர்கள் பலர் அடிமை. ஹோட்டல் உரிமையாளர் பரமேஸ்வரன் தங்கள் வி.ஐ.பி. கஸ்டமர்கள் பற்றிப் பேசுகிறார். ''1963-ல் எங்கப்பா நடராஜ ஐயா, இந்த ஹோட்டலை ஒரு குடிசையில் ஆரம்பிச்சார். தைத்த ஆலமர இலையில் தரையில் உட்கார வெச்சுதான் அப்ப சாப்பாடு போடுவோம். அது இட்லி 5 காசு, சாப்பாடு ஒண்ணரை ரூபாய்க்கு வித்த காலம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஷூட்டிங்குக்கு வெளியூர் போறவங்க, ஷூட்டிங் முடிச்சிட்டு திரும்புறவங்கனு பல நடிகர்கள் இங்கே வந்து சாப்பிட்டுப் போவாங்க. ஷூட்டிங் ஸ்பாட்ல நடந்த சுவாரஸ்யங்களை எங்க சர்வர்கள்கிட்ட சொல்லி அரட்டை அடிச்சிட்டே சாப்பிடுவாங்க. டணால் தங்கவேல் சார் இந்தப் பக்கம் வர்றப்பலாம் இட்லி, வடை சாப்பிடாமப் போக மாட்டார். அதே மாதிரி ஜெமினிகணேசன், மனோரமானு பலர் வருவாங்க. செந்தில் வந்தாருனா கூட்டம் அள்ளும்.

கூட்டத்தைச் சமாளிக்கிறதுக்காகவே சமீபத்தில் கடையைப் பெரிதாக்கினோம். மயில்சாமி திருவண்ணாமலை கிரிவலத்துக்காகப் போகும்போதெல்லாம் இங்க வருவார். விவேக், தியாகு, மனோபாலா, சந்திரசேகர்னு பலரை எங்க கஸ்டமர் ஆக்கியது  மயில்சாமி சார்தான்.

'எல்லாரும் உட்காருங்க. இன்னைக்கு நான்தான் உங்களுக்கு சர்வர்’னு சொல்லி கிச்சனுக்குள் நுழைஞ்சு இட்லி, தோசை சுட்டு எங்க சர்வர்களுக்குப் பரிமாறி சர்ப்ரைஸ் கொடுப்பார் மயில்சாமி. 'என்னய்யா, நாளைக்குச் சாப்பிட வரலாமா?’னு போன் பண்ணி விசாரிச்சுட்டு வருவார் மதுரை ஆதீனம். எங்க ஹோட்டல் காபின்னா அவருக்கு ரொம்ப இஷ்டம். அப்ப இருந்து இப்ப வரை இளையராஜா சார் எங்க கஸ்டமர். ஆனா, அவர் வந்தா நெரிசல் அதிகமாகுதுனு, காரைக் கொஞ்சம் தொலைவில் நிப்பாட்டிட்டு, போன் பண்ணி ஆர்டர் சொல்லுவார்!'' என்று பெருமையில் பூரிக்கிறார் பரமேஸ்வரன்.

- பா.ஜெயவேல்

காஞ்சிக்கு குடை அழகு!

சர்வர் மயில்சாமி!

'திருப்பதி வடை அழகு/ ஸ்ரீரங்க நடை அழகு/ காஞ்சி குடை அழகு’ என்ற சொலவடையில் காஞ்சி சேர்ந்ததற்கு கிருஷ்ணமூர்த்தியின் பரம்பரைக்கும் மிகப் பெரும் பங்கு உண்டு. உள்ளூர் சிவன் கோயில் முதல் சிங்கப்பூர் முருகன் கோயில் வரை காஞ்சியில் இருந்தே கோயில் குடைகள் தயாரித்து அனுப்பப்படுகின்றன. தாத்தா சுப்பராஜி, தந்தை வெங்கடப்பெருமாள் ராஜி, மகன் ராமச்சந்திரன் என நான்கு தலைமுறைகளாகக் கிருஷ்ணமூர்த்தியின் குடும்பமே குடை தயாரிப்பு தொழிலைச் செய்து வருகிறது. ''திருப்பதியில் உற்சவருக்கான குடையை என் தாத்தா காலத்தில் இருந்து என் மகன் காலம் வரை நாங்கதான் செஞ்சு அனுப்பிட்டு இருக்கோம். ஒரு முறை திருப்பதி தேவஸ்தான அதிகாரி, 'தங்க இடம், நல்ல சம்பளம் கொடுக்குறோம். அங்கேயே வந்து தங்கி குடை செஞ்சுக் கொடுங்க’னு கேட்டார். மறுத்துட்டேன்.  அதேபோல் என் பையனுக்குக் கிடைச்ச அரசாங்க வேலையையும் வேணாம்னு சொல்லச் சொல்லிட்டேன். ஏன்னா இது பணம் வர்ற ஒரு தொழில் மட்டும் கிடையாது. காஞ்சிபுரத்துக்கான பெருமைகள்ல ஒண்ணு.

குடையோட அளவு, பிரமாண்டம் பொறுத்து 4,000-த்தில் இருந்து 45 ஆயிரம் வரை விலை இருக்கும். அந்தந்த கோயில் பாரம்பரியப்படி ஆர்டர் இருக்கும். இந்தியாவில் 22 ஜாண் அளவிலான குடையை நாங்க மட்டும்தான் செய்யுறோம். இதுக்குக் கூடுதலா 15 நாட்கள் தேவைப்படும். குடைக்கான மூங்கில் கேரளாவுல இருந்து வருது!'' என்கிற கிருஷ்ணமூர்த்தி, சற்று இடைவெளி விட்டு, ''என்னதான்  பாரம்பரியமான வேலையா இருந்தாலும் பெரிய அளவில் லாபம் கிடைப்பது இல்லை. ஆனாலும், இந்தத் தொழிலை விட மனசு இல்லை. ஏன்னா காஞ்சிக்குக் குடை அழகு!'' என்று முடிக்கிறார்.

- எஸ்.கிருபாகரன், படங்கள்: வீ.ஆனந்தஜோதி

'ஜி'ன்னாலே அலர்ஜி!

சர்வர் மயில்சாமி!

'பஜனைக் கூட்டத்துக்கு இவ்வளவு ஜனத் திரளா?’ என ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது திருமுல்லைவாயிலில் நடந்த 'சாஹர் நாமா பஜனைக் கூட்டம்!’ ஜிம்மிஜிப் கிரேன் கேமரா, நேரடி ஒளிபரப்பு, டிஜிட்டல் திரைகள் என பிரம்மாண்ட பிரமாதம். ஆட்டம் போடவைக்கும் விட்டல் தாஸின் பஜனைப் பாடல்கள்தான் நிகழ்ச்சியின் ஹைலைட்! ''மும்பை தாண்டியா விழாவில் அமிதாப்புடன் ஆட்டம் போட பத்தாயிரம் ரூபாய் டிக்கெட்டாம். ஆனால், இங்கு இறைவனை வேண்டி ஆடிப் பாடும்  போது கிடைக்கும் நிம்மதியும் சக்தியும் வேறு எங்காவது கிடைக்குமா?'' என்று கூட்டத்தைப் பார்த்து இடையிடையே கேள்வி கேட்டபடி, விட்டல்தாஸ் உற்சாக உள்ளத்துடன் பஜனைப் பாடல்களை ஹை-பிட்சில் பாட, வயது வித்தியாசம் இன்றி மொத்தக் கூட்டமும் ஆர்ப்பரிக்கிறது. ''அடிக்கடி 'ஜே... ஜே...’ என்று பக்தர்கள் பக்தியோடு உச்சரிப்பதுதான் ஜெயலலிதாவை ஜெயிக்கவைத்திருக்கிறது என்று சிலர் என்னிடமே போனில் சொல்கிறார்கள். (பலத்த கைத்தட்டல்) ஆனா, அப்படி எதுவும் இல்லை. இந்த நிகழ்ச்சியை நீங்கள் நேரடியாக இன்டர்நெட்டிலும் பார்க்கலாம். 3ஜி செல்போனிலும் பார்க்கலாம். இந்த 2ஜி, 3ஜின்னாலே பயமாக இருக்கிறது!'' என்று விட்டல் அரசியல் டச் கொடுக்க... கூட்டத்தில் அலைக்கற்றைச் சிரிப்பு!

- த.கதிரவன்