Published:Updated:

என் ஊர்!

ஒளியும் ஒலியும் பார்த்த கறுப்பு வெள்ளை நாட்கள்!

##~##

''புரசைவாக்கத்துக்கும் வியாசர்பாடிக்கும் இடையே உள்ள ஒரு நிலப்பரப்புதான் கன்னி காபுரம். பிரசித்திப் பெற்ற கன்னியம்மன் கோயில் அமைந்த இடம் என்பதால், அதுவே ஊரின் பெய ராக மாறிவிட்டது!'' - கன்னிகாபுரத்தின் கதை சொல்லத் துவங்குகிறார் கவிஞர் கபிலன்.

''சென்னை பேசின் பிரிட்ஜில் இருந்து பெரம்பூருக்குச் செல்லும் வளைவான இருப்புப் பாதை நடுவே இருக்கிறது எங்கள் ஊர். என் முதல் வகுப்பில் இருந்து ப்ளஸ் டூ வரை அவ்வூர் மாநகராட்சிப் பள்ளியில் பயின்றேன். அங்கு இருந்து ஒரு மைல் தொலைவில் உள்ள பின்னி மில்லில் அப்பா பணியாற்றிக்கொண்டு இருந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
என் ஊர்!

பள்ளி நாட்களில் மாலையில் கால்பந்து, இரவில் தெருவிளக்கு வெளிச்சத்தில் கேரம் போர்டு என என் ஆடுகளம் அமைந்தது. ஒன்பதாம் வகுப்புக்குப் பிறகு ஊருக்குள் இருக்கும் அரசு நூலகத்தில் என் இலக்கிய வாசிப்புத் தொடங்கியது. அவ்வூரில் வசித்த தி.மு.க. பேச்சாளரும், கவிஞருமான அண்ணன் சிங்கார சடையப்பன் அவர்களின் நட்பு கிடைத்ததும், எனக்குள் கவிதைக் குழந்தை மூச்சுவிடத் தொடங்கியது. புதுக் கவிதை என்ற பெயரில் எனக்குத் தெரிந்த வடிவத்தில் எழுதத் தொடங்கினேன். இரங்கல் கூட்டம் நடந்தால்கூட வாய்ப்புக் கேட்டு கவிதை வாசிப்பேன்.

பின்னொரு காலத்தில் கவிஞர் சிங்கார சடையப்பன் அவர்களிடம் மரபுக் கவிதைக்கு உண்டான யாப்பிலக்கணம் கற்று, கட்டளைக் கலித்துறை, வெண்பா, எண்சீர், அறுசீர், அகவல் ஆகியவற்றை எழுதத் தொடங்கினேன். மற்ற பள்ளிகளில் நடக்கும் கவிதை, பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பல பரிசுகளை வென்று இருக்கிறேன்.  அப் பரிசுகளை எங்கள் பள்ளியின்  தமிழ்த் தாய் வாழ்த்தின்போது, தலைமையாசிரியர் என்னைப் பாராட்டி வழங்குவார். இதனால் பள்ளியில் எனக்கென ஒரு மரியாதை கிடைத்தது.

ஊருக்குள் ஆடி மாதத் திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படும். வாரா வாரம் கூழ் ஊற்றி அம்மனுக்கு அழகு செய்வதும், பெரியபாளையம் கோயிலுக்குச் சென்று வருவதும், பல்வேறு குடும்பங்களின் வழக்கம். எங்கள் குடும்பமும் அவ்வாறு சென்றது உண்டு. மேலும் வடசென்னைக்கு மட்டுமே தெரிந்த திருப்பதி குடை திருவிழாவும் கொண்டாட்டம் நிறைந்தது. சென்னை சௌகார்பேட்டையில் இருந்து அழகாக அலங்கரித்த நான்கு, ஐந்து வெள்ளைக் குடைகளை புளியந்தோப்பு வழியாகத் திருப்பதிக்கு எடுத்துச் செல்வார்கள். இதைத் திருவிழாபோலத் திரண்டு நின்று வழிபடுவார்கள்.

என் ஊர்!

கன்னிகாபுரத்தில் வாகனம் சென்று வர ஒரே ஒரு வழி மட்டுமே இருக்கும். அவ்வாறு அமைந்த அந்த ஊர்தான் என்னை தத்தெடுத்து வளர்த்தது.

என் நண்பர்களின் ஆதரவோடு 'பாமரன் இலக்கியப் பேரவை’ என்ற ஓர் அமைப்பை நிறுவி மாதந்தோறும் நான் நடத்திய இலக்கியக் கூட்டங்கள், கவியரங்கங்கள் என்னை நானே பட்டை தீட்டிக்கொள்ள உதவின.  பள்ளிப் பருவத்தில் எம்.ஜி.ஆரின் சத்துணவு என் பசியையும் ஆற்றியது. பள்ளி விடுமுறை தினங்களில் என் வயிற்றுக்கும் விடுமுறை. ஆண்டுதோறும் அடைமழையில் எங்கள் ஊர் ஒரு தீவைப்போல மாறிவிடும். தண்ணீர் வடிய நான்கு நாட்கள் ஆகும். மக்களோடு மக்களாக என் வகுப்பறையில் குடும்பத்தோடு அகதியாக வாழ்ந்து இருக்கிறேன்.

பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை தொடங்கி எம்.ஃபில் வரை ஏழு ஆண்டுகள் படித்தேன். திருமணத்துக்குப் பிறகுதான் அவ்வூரை விட்டு இடம்பெயர்ந்தேன். இப்போதும் அடிக்கடி கன்னிகாபுரத்துக்குச் செல்வது உண்டு.

என் ஊர்!

படித்தப் பள்ளி, விற்றுவிட்ட வாழ்விடம், நூலகம், நாளிதழ் வாசித்த தேநீர்க் கடை, என் கவிதை குருநாதரின் வீடு, கன்னியம்மன் கோயில், தையல்கடை, பழைய மனிதர்கள், சுற்றித் திரிந்த தெருக்கள், விளையாடிய மைதானம், தெரு விளக்கு, தண்டவாள ஓரங்களில் முளைத்த பூண்டுச் செடி, கறுப்பு - வெள்ளை தொலைக்காட்சியில் ஒலியும், ஒளியும் பார்த்த செல்வந்தர் இல்லம் இன்னும் பிறவென அந்த ஊரின் வாழ்வியல் அப்படியே இருக்கிறது. என் வாழ்க்கை மட்டும் மாறிவிட்டது!''