Published:Updated:

சன் லைட்டில் ஒரு கூடை!

வால்டாக்ஸ் சாலை வாழ்க்கை

##~##

சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒட்டிய  வால்டாக்ஸ் சாலையைப் புதிதாகக் கடப்பவர்களுக்கு 'ஏதாவது கிராமத்துக்குள் நுழைந்துவிட்டோமா?’ என்று சந்தேகம் எழும். காரணம், வரிசையாக 30, 40 வீடுகளின் வாசல்களில் கும்பல் கும்பலாக அமர்ந்து கூடை, பாய் பின்னிக்கொண்டு இருப்பார்கள்.  

 ''இங்க ஸ்ரீமலாளம்மன், பாளையத்தம்மன்ங்ற பேர்ல ரெண்டு மகளிர் சங்கம் இருக்கு தம்பி. எங்களுக்குனு அரசாங்கம் எந்தச் சலுகையோ, மானியமோ தர்றது இல்லை. ரொம்பப் போராடி கீழ்ப்பாக்கம் இந்தியன் பேங்க்கில் 4 லட்ச ரூபாய் லோன் வாங்கினோம். மாசம் தவறாம அந்த லோனை ஒரே  வருஷத்தில் அடைச்சோம். ஆனாலும் மறுபடியும் லோன் தர மாட்டேனுட்டாங்க.  பத்துப் பதினஞ்சு தலைமுறையா இந்தத் தொழில்லதான் இருக்கோம். இதுல வர்ற வருமானத்தை வெச்சு புள்ள குட்டிங்களை படிக்கவைக்க முடியலை. அரசாங்கம் எங்க புள்ளைங்களை படிக்க வெக்கணும், வியாபாரம் செய்ய இடம் ஒதுக்கித் தரணும், அப்பத்தான் நாங்க பிழைச்சிக் கெடக்க முடியும்!'' என்கிறார் தனகோட்டிஅம்மாள். இவர்தான் ஸ்ரீமலாளம்மான் மகளிர் சங்கத் தலைவி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சன் லைட்டில் ஒரு கூடை!

''வியாசர்பாடி, திருவொற்றியூர், மூலக்கடைனு அலைஞ்சி திரிஞ்சி மூங்கில் வாங்குறோம். ஒரு மூங்கிலோட விலை 250 ரூபாய். நல்ல மூங்கியா இருந்தா பாய் செய்யலாம். சுமாரா இருந்தா ஒரு மூங்கியில் மூணு கூடை வரை செய்யலாம். ஒரு கூடை 70 ரூபாய்க்கும், 10 அடி நீளம், அகலம் உள்ள பாய் 3000 ரூபாய்க்கும் போகுது. 'என்னா இம்புட்டு விலை சொல்றீங்க? குறைச்சுக் கொடுங்க’னு வர்ற வாடிக்கையாளர்கள் அடிமாட்டு விலைக்குக் கேட்பாங்க. கஷ்டப்பட்டு நெய்ஞ்சு வித்தாலும் பெருசா எதுவும் மிஞ்ச மாட்டேங்குது. என் பையன் டென்த் முடிச்சுட்டு மவுன்ட் ரோட்ல ஒரு கம்பெனியில் வேலை செய்றான். நானும், 'இந்தச் சிரிப்பா சிரிச்ச பொழப்பு என்னோட போகட்டும். நீயாவது நல்ல நிலைமைக்கு வாடா’னு சொல்லி விட்டுட்டேன்.

மெட்ராஸை சுத்திப்பாக்க வர்ற வெள்ளைக்காரங்க ஆட்டோவுல போகும்போது எங்களைப் பார்த்ததும் போட்டோ புடிப்பாங்க. அந்த ஒரு சின்ன சந்தோஷத்தைத் தவிர இதுல எதுவுமே மிஞ்சுறது இல்லை தம்பி!'' என்கிறார் எத்திராஜன். அந்தக் காலத்தில் இங்கிலீஷ் மீடியத்தில் யூ.கே.ஜி வரை படித்த இவர், ஏரியாவில் கூடை செய்வதில் எக்ஸ்பர்ட்டாம்.

சன் லைட்டில் ஒரு கூடை!

''அடையாறு செட்டியார் பங்களா, கவர்னர் மாளிகைனு பெரிய இடத்தில் இருந்து ஆளுங்க வந்து, 'பல்க்கா வேலை இருக்கு. வாங்க. ஆனா அங்கயே தங்கி வேலை செய்யணும்’னு மூங்கில் பாய் பின்ன கூட்டிட்டுப் போவாங்க. ஆனா, பெருசா காசு பணம் எதுவும் கையில் கிடைக்காது!'' என்கிறார் வெங்கடம்மா. ''1940-ல் நாங்க பூக்கடை பக்கத்தில் குடியிருந்தோம். 1975-ல் பஸ் ஸ்டாண்ட் பெருசாகப் போவுதுனு சொல்லி அரசாங்கமே இந்த இடத்தை ஒதுக்குச்சு. மெட்ரோ ரெயிலு, சிங்காரச் சென்னைனு இந்த இடத்துக்கும் ஆபத்து வருமோனு பயந்து பயந்து உட்கார்ந்து இருக்கோம்!'' என்று விவரமாகப் பேசும் சாந்தி, தொடர்ந்து மூங்கில் தொழில் பெருமைப் பேசுகிறார். ''ரப்பர், பிளாஸ்டிக்னு எவ்வளவோ விஷயம் வந்தாலும், இந்தக் கூடைக்கு இருக்குற மகத்துவமே தனி சார். ஒழுங்காப் பராமரிச்சா இரும்பு, பிளாஸ்டிக் பொருளுங்கெல்லாம் இதுக்கு முன்னால நிக்க முடியாதுங்க. இன்னும் ஊர் நாட்டுப் பக்கம் போனீங்கன்னா பத்துப் பதினஞ்சு வருஷத்துக்கு முன்னால வாங்குன கூடையைக் கூட சாணி போட்டு மொழுகி பத்திரமா வெச்சிருப்பாங்க. இங்கதான் மாடும் இல்லை, சாணியும் இல்லையே. இந்த அவசர உலகத்தில் இதை எல்லாம் யார் தம்பி பாக்குறா? எங்களையும் மக்க மனுஷங்களா மதிச்சு ஏதாவது செஞ்சாத்தான் பொழச்சு கெடக்க முடியும் தம்பி. இல்லைனா இந்த 26 குடும்பமும் போகப் போக சிதைஞ்சி சின்னாபின்னமாக வேண்டியதுதான்!'' வேகமும் வேதனையுமாகப் பேசுகிறார்.

அரசு ஏதாவது செய்யுமா?

- க.நாகப்பன், அ.முகமது சுலைமான், படங்கள்: அ.ரஞ்சித்