Published:Updated:

எம்.ஜி.ஆருக்குப் பிடித்த ராயர்!

Chennai
News
Chennai

மணக்கும் மயிலாப்பூர் மெஸ்

##~##

''காபி சாப்பிட்டீங்களாண்ணா? டிபன் சாப்பிட்டீங்களாண்ணா?'' என்று வாடிக்கையாளர்களை உறவினர்போல் உபசரித்துக்கொண்டு இருக்கிறார் மயிலாப்பூர் ராயர் மெஸ் உரிமையாளர் குமார். 'இது ஏதோ சினிமா காமெடி டயலாக்’ என்று நாம் யோசித்தால், ''ஆமாம்ண்ணா, இங்கே சாப்பிட வர்றவங்களை, விருந்தாளி கணக்கா கவனிப்போம். 'சார்’ போட்டு சொன்னா, அந்நியமாத் தெரியும்ங்கிறதால 'டிபன் சாப்பிட்டீங்களாண்ணா?, காபி சாப்பிட்டீங்களாண்ணா?’னு கேட்போம். இதைத்தான் சினிமா வில் காமெடி பண்ணிட்டாங்க!'' என்று சிரிக்கிறார் குமார். கச்சேரி சாலையை ஒட்டி உள்ள  அருண்டேல் தெரு சந்துக்குள்  15 பேருக்கு மேல் அமர முடியாத அறைக்குள், அமைந்து இருக்கும் ராயர் மெஸ் மயிலாப்பூரின் அடையாளங்களுள் ஒன்று.

 ''ஆரம்பத்தில் ராயர் கஃபேனு இருந்துச்சு. இப்போ ராயர்ஸ் மெஸ். பேரை நாங்க மாத்தலை. எம்.ஜி.ஆர். மாத்த வெச்சிட்டாரு. எம்.ஜி.ஆர். முதல்வரா இருந்தப்ப, 'சின்ன ஹோட்டல்களுக்கு, கஃபேனு பேரு வைக்கக் கூடாது. மெஸ்னுதான் பேர் வைக்கணும்’னு சட்டம் போட்டாரு. அப்ப மாத்தினோம்ண்ணா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
எம்.ஜி.ஆருக்குப் பிடித்த ராயர்!

எங்களுக்குப் பூர்வீகம் கர்நாடக மாநிலம். அப்பா 70 வருஷம் முன்னாடி மெட்ராஸ் வந்து இந்த டிபன் கடையை ஆரம்பிச்சார். கர்நாடகாவில் இருந்து வந்தவங்களை ராயர்னு சொல்வாங்க. அதான் 'ராயர்ஸ் கஃபே’ங்கிற பேர்லயே ஹோட்டல் ஆரம்பிச்சோம்!'' என்று பூர்வீகம் சொல்லிவிட்டு தற்போதைய நிலவரம் சொல்கிறார் குமார்.

''சந்துக்குள்ள இருந்தாலும், தேடி வந்து சாப்பிட்டுப் போற வி.ஐ.பி-கள் நிறைய இருக்காங்க. 'டேஸ்ட் நாக்குல ஒட்டிக்கிச்சுண்ணா’னு எல்லாரும் மறக்காம சொல்லிட்டுப் போவாங்க. ஜெயகாந்தன், பிரபஞ்சன் தொடங்கி எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதானு எழுத்தாளர்கள் பலர் எங்க ரெகுலர் வாடிக்கையாளர்கள். எம்.ஜி.ஆர்.முதல் வர் பதவிக்கு வர்றதுக்கு முன்னாடி மெயின் ரோட்ல  காருக்குள்ள  உட் கார்ந்துக்கிட்டே எங்க கடை டிபனை வாங்கிச் சாப்பிடுவாரு. முதல்வரான பிறகு பார்சல் வாங்கி வரச் சொல்லி சாப்பிடுவார்.

எம்.ஜி.ஆருக்குப் பிடித்த ராயர்!

அப்போ இருந்து இப்போ வரை 'துக்ளக்’ சோ வந்து சாப்பிடுவார். விவேக், ஜீவன்னு ஏகப்பட்ட நடிகர்களும் இங்க வாடிக்கையா வந்து சாப்பிடுவாங்க. கிரேஸி மோகன் ரெகுலரா இங்கே வருவார். அவரோட நாடகத்துல கூட யாராவது, அடிக்கடி அண்ணானு சொன்னா, 'யோவ், என்னயா இது ராயர்ஸ் கஃபேவா?’னு கிண்டல் பண்ணுவார்!'' என்றவர், ''ரெண்டே ரெண்டு நிமிஷம்ங்கண்ணா'' என்றபடி வடை மாவை உருட்டி கைகளில் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கிறார். சமைப்பது, பரிமாறுவது, கல்லாவில் காசு வாங்கிப் போடுவது என சகல வேலைகளையும் குமார்

எம்.ஜி.ஆருக்குப் பிடித்த ராயர்!

மட்டுமே செய்கிறார். தண்ணீர் கொடுப்பது, இலை போடுவதற்கு மட்டும் இருவர் உதவிக்கு இருக்கிறார்கள்.

வடை சுட்டு முடித்துவிட்டு, அடைக்கு மாவு பிசைந்து கொண்டே தொடர்கிறார் குமார். ''காத்திருந்து சாப்பிடற அளவுக்குக் கூட்டம் வருதே, கடையை விரிவாக்கலாமேனு சொல்றாங்க. ஆனா, எங்க வெற்றியே இந்தச் சின்னக் கடையில்தான் இருக்கு. அதனாலதான் ஒவ்வொருத்தரையும், கவனிச்சு பரிமாற முடியுது. பணம் மட்டும் முக்கியமில்லைங்ண்ணா. நாம செய்யறத் தொழில் மத்தவங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கணும்.  அதுதான் நிரந்தர செல்வம். அந்தச் செல்வத்தை யாரலும் அழிக்க முடியாதுண்ணா!'' என்று தத்துவம் சொல்கிறார்.

- பொன்.செந்தில்குமார், படங்கள்: எம். உசேன்