Published:Updated:

என் ஊர்!

கோவையில் இருந்த இரு கடல்கள்!

##~##

சாதி ஒழிப்பு, கடவுள் மறுப்பு, ஆரிய எதிர்ப்பு என தந்தை பெரியாரின் கருத்தியல்களையே தன் வாழ்க்கையாக மாற்றிக்கொண்டவர் கோவை கு.ராமகிருஷ்ணன். பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளரான இவர், ஈழ ஆதரவாளராகவும் அரசு எதிர்ப்பாளராகவும் இருக்கும் 'குற்றத்துக்காகவே’ மிசா, தடா, பொடா, தேசியப் பாதுகாப்புச் சட்டம் என ஆள் தூக்கிச் சட்டங்களுக்கு ஆட்பட்ட சிறைப் புலி. தனது சொந்த ஊரான கோவை சித்தாபுதூர்பற்றி இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

 ''நான் பிறந்த காலகட்டத்தில், சித்தாபுதூர், கோவை நகரத்தின் விளிம்பில் இருந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையில் பொழியும் மழை நீர், எங்கள் சங்கனூர் ஓடையில் பாய்ந்தோடும் நீரின் இரைச்சல் ஊருக்குள் கேட்கும். இப்படி தண்ணீர் ஓசை கேட்டு வளர்ந்த நாங்கள், இன்று வாகன இரைச்சல்களுக்கு இடையில் வாழ்க்கையை ஓட்டுகிறோம். சங்கனூர் ஓடை இன்று கழிவு நீர் கால்வாயாக மாறிப்போனது பெரும் துயரம்.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
என் ஊர்!

ஈழப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலகட்டம் அது. 1983-ல் 100 விடுதலைப் புலிப்களுக்கு முகாம் அமைத்து பெருமை தேடிக்கொண்டது என் மண். என் தந்தை குப்புசாமிக்கு ஜின்னிங் மில், ஆயில் மில் ஆகியவை சொந்தமாக இருந்தன. இந்த மில்களை நம்பி பல நூறு குடும்பங்கள் இருந்தன. ஊருக்குள் அப்போது திருமண மண்டபங்கள் கிடையாது.  திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்த மில்களை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், இப்போது ஒரு ஜின்னிங் மில்லைக்கூட பார்க்க முடிவது இல்லை. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று கோவைக்குப் பெருமை சேர்த்ததில் டெக்ஸ்டூல், லட்சுமி மில்ஸ் என்ற இரண்டு நிறுவனங்களின் பங்கு அதிகம். ஆனால், இன்று டெக்ஸ்டூல் நிறுவனம் கவனிப்பார் அற்று இருக்கிறது. லட்சுமி மில் சங்கொலிக்குத்தான் முன்பு கோவை கண் விழிக்கும். அந்தச் சங்கொலியும் மெள்ள மெள்ள அடங்கிவிட்டது.

என் ஊர்!

கோவையில் கடல்போல பெரிய குளமும், அம்மன் குளமும் இருந்தன. தளும்பி, நிரம்பி இருக்கும் இந்தக் குளங்களில் கடற்படை வீரர்களுக்குப் பயிற்சி கொடுப்பார்கள். இன்று இவற்றில் பெரும்பாலான பகுதி கான்க்ரீட் காடுகளாக மாறிவிட்டன.

தொண்டாமுத்தூர், மாதம்பட்டி, சிறுவாணி பகுதிகளில் திராட்சை, கொய்யா, மாம்பழச் சாகுபடி அதிகம். வெள்ளிமலைப்பட்டணம் பக்கம் காய்கறி விவசாயம் பரபரக்கும். மாலையில் காலாற நடந்து சென்றால், வீதிகளின் திருப்பங்களில் வெள்ளை கொண்டைக் கடலை சுண்டலும், சுக்குக் காபியும் கிடைக்கும். தியேட்டர்களிலும் பயறு வகைகள்தான் இடைவேளை நிமிடங்களை ஆக்கிரமித்தன. ஆனால், இன்று பானி பூரியும், பேல் பூரியுமே கோவைவாசிகளின் இரவு உணவு ஆகிவிட்டது.

கோவையில் அந்தக் காலத்தில் குத்துச்சண்டை போட்டிகள் பிரபலம். 'கிங்காங், தாராசிங் இருவரும் ஆக்ரோஷமாக மோதிக்கொள்வதை காணத் தவறாதீர்கள்’ என்று வீதிகளில் ஒலிபெருக்கி விளம்பரம் விறுவிறுப்புக் கூட்டும். அந்த வீரர்களுக்கு செந்தேள் வெட்டு, கருந்தேள் வெட்டு என்று அடைமொழி எல்லாம் உண்டு. வீரர்களின் ஒரு நாள் உணவு அட்டவணையை நோட்டீஸாக அடித்துத் தருவார்கள். அந்த நோட்டீஸைப் பெறுவதில் இளந்தாரிகளுக்குள் ஏக போட்டி இருக்கும். இந்த உள்ளூர் வீரர்களை தயார் செய்வதற்காக, புலியகுளம், சவுரிபாளையம், உடையாம்பாளையம் பகுதிகளில் உடற்பயிற்சிக் கூடங்கள் இருந்தன. அதற்கு கோதாபட்டி என்று பெயர்.

என் ஊர்!

1980-ம் ஆண்டு வரை கோவை இளைஞர்களிடையே பரபரப்பாகப் பேசப்பட்டது, கோவையில் நடக்கும் அகில இந்தியக் கால்பந்துப் போட்டிகள்தான். உள்ளூர் அணிகளுடன் கேரளா மற்றும் கொல்கத்தா அணிகள் மோதும் ஆட்டங்களில் பொறி பறக்கும். போட்டியைப் பார்க்க கேரளாவில் இருந்தும் வண்டி பிடித்து வருவார்கள். ஆனால், என்றைக்கு கிரிக்கெட் மோகம் பரவத் தொடங்கியதோ, அப்போதே கால்பந்து மீதான ஆர்வம் குறைந்துவிட்டது.

நிலம், நீர், சூழல், வாழ்வியல் எல்லாமே மாறிவிட்டாலும், கோவையில் என்றும் மாறாது இருப்பது மனிதநேயம்தான். ஈழத்தில் இனப் படுகொலைகள் நடந்தபோது, தமிழகத்தில் இருந்து கிளம்பிய ஆவேசக் குரல்களில் கோவையின் குரலுக்கு உக்கிரம் அதிகம். இந்த மனிதாபிமானம் நிலைத்து இருக்க வேண்டும் என்பதுதான் என் தீராத விருப்பம்!''

- எஸ்.ஷக்தி, படங்கள்: வி.ராஜேஷ்