Published:Updated:

என் ஊர்!

தாயைப் புதைத்த தாய்மண்!

##~##

''வெயில், மழைனு வெக்கையோடயும், குளுமையோடயும் சேர்த்து பூமி உள்வாங்கி வெச்சுக்கிறதப்போல ஒவ்வொரு ஊரைப்பத்தின நினைப்பையும், சந்தோஷமாவும், சோகமாவும் மனுசப் பய மனசு உள்வாங்கி வெச்சுக்குது!''- மண் வாசனையுடன் பேசத் தொடங்குகிறார் வ.கௌதமன். 'சந்தனக்காடு’ சின்னத் திரை, 'மகிழ்ச்சி’ வெள்ளித் திரை எனத் தன் படைப்புகளின் வழியே சமூகமும் அரசியலும் பேசும் படைப்பாளி!

 ''இடைச்செருவாய் பாளையம்தான் என் ஊர். எங்க ஊர்லயே ரெண்டு அல்லது மூணுதான் ஓடு போட்ட வீடுகள். மீதி அத்தனையுமே கரும்புச் சக்கையால் வேயப்பட்ட கூரை வீடுகள்தான். கொஞ்சம் அழுத்தமா காத்து வீசுனா, வீதியில் கிடக்கும் கூரை. அப்படி ஒரு வீட்லதான் நான் பிறந்து, வளர்ந்து, படிச்சு, வாழ்ந்து இருக்கேன். எங்க வீட்டுக்குப் பின்னாடி, கிணறு, தோட்டம் எல்லாம் இருந்தது. அடிப்படையில் நாங்க விவசாயக் குடும்பம்கிறதால அந்தத் தோட்டத்தில் தக்காளி, கத்திரிக்காய்னு எங்க தகுதிக்குப் பயிரிட்டு வளர்த்தோம். எங்க தோட்டத்துல முயல்குட்டிகள்  புகுந்து விளையாடும். என்னோட சின்ன வயசு விளையாட்டுத் தோழர்கள் அந்த முயல்குட்டிகள்தான். தேன் எடுக்கிறது, கிட்டிப்புல் விளையாடுறது, மரத்துல ஏறி குட்டிக்கரணம் அடிச்சு ஏரியில் விழுந்து நீச்சல் அடிக்கிறதுனு இதுதான் நம்ம பொழுதுபோக்கு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
என் ஊர்!

எங்க வீட்டுப் பக்கத்தில் இருந்த தலித் மக்கள்  இருக்க இடமில்லாம இருந்தப்போ, எங்க அப்பா எங்க விளைநிலத்தை அவங்களுக்காகக் குடியிருக்கக் கொடுத்தார். எங்க ஊர்ல ஒரு மாரியம்மன் கோயில் இருக்கு. எங்க மூணாவது தாத்தா அப்பாவு முயற்சியில்தான் அந்தக் கோயில் கட்டப்பட்டது.

என் ஊர்!

ஒவ்வொரு வீட்ல இருந்தும் செம்பு, அண்டானு வாங்கிட்டுப் போயி அதை உருக்கிச் செஞ்சதுதான் அந்தச் சாமி சிலை. நான் சென்னை வந்த பிறகு, என்னோட ஞாபகம் வர்றப்ப எல்லாம் பாதி ராத்திரியில் அந்தக் கோயிலுக்குப் போயி சூடம் ஏத்தி எனக்காக வேண்டிக்குவாங்க எங்க அம்மா.

எங்க அப்பா கம்யூனிஸ்ட்காரரா இருந்ததால், எப்பப் பார்த்தாலும் ஆர்ப்பாட்டம், போராட்டம்னு ஊர் ஊரா அலைஞ்சுட்டு இருப்பாரு. வீட்டைப்பத்தி கவலையே இல்லை. அதனால், நான் பள்ளிக்கூடம் சேருகிற வயசு வந்தப்புறம்கூட என்னால சேர முடியலை. ஒருவழியா

நானே போய் பள்ளிக்கூடம் சேர்ந்தேன். ஆறு மாசம் கழிச்சுதான், எங்க அப்பா வந்து கையெழுத்துப் போட்டாரு. அப்பவே எங்க வீட்டுல ஜனசக்தி வரும். நான் படிச்ச முதல் பத்திரிகை அதுதான். அப்ப எங்க வீட்டுக்கு புலவர் கலியப்பெருமாள், தோழர் தமிழரசன், இலங்கைப் போராளிகள்னு நிறையப் பேரு வந்து போவாங்க. இப்படி ஆரம்பக் காலத்துல இருந்தே, திராவிடம், பொதுவுடைமைனு வளர்ந்ததால் 85, 87 வாக்குல மறுபடியும் இந்தி மொழியைக் கொண்டுவர்ற முயற்சிகள் நடந்துட்டு இருந்த சமயத்தில் நான் என்னோட நண்பர்களோட ஊர்ல இருந்த தபால் நிலைய இந்தி எழுத்துகளைத் தார் பூசி அழிக்கிற போராட்டத்தை நடத்தினோம்.

ஹோட்டல், தியேட்டர்னு எந்த நவீனங்களும் இல்லாதது எங்க ஊர். கிராமத்துக்கே உரிய வரகுச் சோறு, புளிச்ச கீரை ரெண்டையும் உருண்டை பிடிச்சு எங்க அம்மா கொடுப்பாங்க. வயல் நண்டைப் பிடிச்சு, உரல்ல இடிச்சு அதனோட சாறை ரசமா வைப்பாங்க பாருங்க... அடடா... உணவே அருமருந்துங்க!

அக்கா, தம்பி, தங்கைனு அஞ்சு பேரோட பொறந்தவன் நான். எல்லோரும் ஒவ்வொரு பக்கமா கிடக்கோம். அம்மா இறந்துட்டாங்க. அப்பா என்னோட இருக்கார். கஷ்டப்பட்டு எங்களை வளர்த்த அம்மாவுக்கு எங்க வீட்டுத் தோட்டத்திலேயே கோயில் மாதிரி ஒரு சமாதி கட்டி வெச்சிருக்கோம். அம்மாவோட படத்திறப்பு விழாவுக்கு பழ.நெடுமாறன் ஐயா, காசி அனந்தன் ஐயா, சீமான், பெ.மணியரசன் எல்லோரும் வந்திருந்தாங்க.

தாய் தந்தையைப் புதைத்த மண் உரமாகி, நம்மை எப்போதும் வாழ வைக்கும். என் தாய் புதைத்த இடம் எனக்குத் தாய் மண். என் மண் எனக்குத் தாய்!''

என் ஊர்!

- ந.வினோத்குமார், படங்கள்: பொன்.காசிராஜன், எஸ்.தேவராஜன்