Published:Updated:

சாம்பியன்ஸ் டிராஃபி.. இந்திய அணி ஏன் இன்னும் அறிவிக்கப்படவில்லை? #ChampionsTrophy

சாம்பியன்ஸ் டிராஃபி.. இந்திய அணி ஏன் இன்னும் அறிவிக்கப்படவில்லை? #ChampionsTrophy
சாம்பியன்ஸ் டிராஃபி.. இந்திய அணி ஏன் இன்னும் அறிவிக்கப்படவில்லை? #ChampionsTrophy

சாம்பியன்ஸ் டிராஃபி.. இந்திய அணி ஏன் இன்னும் அறிவிக்கப்படவில்லை? #ChampionsTrophy

மினி உலகக்கோப்பை என்று கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராஃபி தொடர், வருகின்ற ஜூன் மாதம் 1-ம் தேதி தொடங்கி, ஜூன் மாதம் 18-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் கலந்து கொள்ளக்கூடிய இந்திய அணியை, அதற்கான காலக்கெடு கடந்துவிட்ட நிலையிலும் (ஏப்ரல் 25, 2017), இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ) இந்நாள்வரை அறிவிக்கவில்லை. ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது என்றால், சாம்பியன்ஸ் டிராஃபியில் பங்கேற்கும் மொத்தமுள்ள 8 அணிகளில், 7 அணிகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டன! இதுதவிர வர்ணனையாளர்கள் குழு மற்றும் தூதுவர்கள் பட்டியலும் வெளிவந்துவிட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் (ஐசிசி) போட்டிகளில் கிடைக்கும் வருமானத்தைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக எழுந்துள்ள பிரச்னையாலேயே, அணியை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தற்போது தகவல்கள் வந்துள்ளன!

பிரச்னை என்ன?

தனது நிதியமைப்பு மற்றும் நிர்வாகக் குழுவில், சில அதிரடியான மாற்றங்களை, ஐசிசி கொண்டு வந்துள்ளது. இதன் வெளிப்பாடாக, கிரிக்கெட் உலகின் The Big Three எனச் செல்லமாக அழைக்கப்படும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களின் தற்போதைய செல்வாக்கு மற்றும் வருமானத்தின் அளவுகள், இதனால் முன்பைவிடக் கணிசமாகக் குறையும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கிரிக்கெட் வாரியங்கள், இதற்குப் பெரியளவில் ஆட்சேபனை  தெரிவிக்காவிட்டாலும், அந்த மாற்றங்களை ஆரம்பம் முதலே கடுமையாக எதிர்த்து வருவது இந்திய கிரிக்கெட் வாரியம்தான்! எனவேதான் பிசிசிஐக்கும் - ஐசிசிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

(PC: BCCI)

இந்திய அணி அறிவிக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்துக்குக் காரணமாக, இந்திய அணி கேப்டன் விராட் கோலி உட்பட அணி வீரர்கள் அனைவரும், தொடர்ச்சியாக ஐபிஎல் போட்டிகள் விளையாடி வருவதால், அணி நிர்வாகிகளை ஒரே இடத்தில் சேர்ப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள், முதற்கட்டமாகச் சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் கிரிக்கெட் போட்டிகளால் ஐசிசிக்குக் கிடைக்கக்கூடிய வருமானத்தைப் பங்கிடுவதில், பிசிசிஐ ஒரு குறிப்பிட்ட தொகையை முன்வைக்க -  ஐசிசி ஒரு குறிப்பிட்ட தொகையை முன்வைக்க, இழுபறி ஏற்பட்டிருக்கிறது. இதன் விளைவாகவே, இந்திய அணியைத் தாமதமாக அறிவிப்பதை, பிசிசிஐ ஒரு மிரட்டல் உத்தி போலக் கடைபிடிப்பதாகச் சொல்லப்படுகிறது. 


(PC: ICC)

கடந்த ஏப்ரல் 24, 2017 அன்று துபாயில் நடந்த ஐசிசி கூட்டத்தொடரில், பிசிசிஐ சார்பில் அதன் செயலாளர் அமிதாப் சவுத்ரி மற்றும் CEO ராகுல் ஜோரி ஆகியோர் பிரதிநிதிகளாகப் பங்கேற்றனர். அப்போது புதிய நிதியமைப்பு குறித்து பேசப்பட்ட போது, உலகின் செல்வச் செழிப்பான கிரிக்கெட் வாரியம் என்ற புகழுக்குச் சொந்தக்காரரான பிசிசிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இருந்தாலும் மற்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியத்தின் ஆதரவுடன் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் எழுந்த பிரச்னையால், சாம்பியன்ஸ் டிராஃபி தொடரிலிருந்தே, நடப்புச் சாம்பியனான இந்திய அணியே விலகுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக யூகங்கள் எழுந்துள்ளன.

வருங்காலம் எப்படி இருக்கும்?

தற்போது ஐசிசியிடமிருந்து, கிரிக்கெட் போட்டிகளால் பிசிசிஐக்குக் கிடைக்கும் வருவானம், 570 மில்லியன் டாலர்கள்! ஆனால் ஐசிசியின் புதிய விதிமுறைகளால், அடுத்து வரவிருக்கும் 8 ஆண்டுகளில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருமானம், 290 மில்லியன் டாலர் வரையில் குறைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பிசிசிஐக்கு, 400 மில்லியன் டாலர்கள் வரை அளிக்க ஐசிசி முன்வந்திருப்பதாகத் தெரிகிறது.  இது தொடர்பாக பிசிசிஐ நிர்வாகி ஒருவர், வரும் சில நாட்களில் சாம்பியன்ஸ் டிராஃபி தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

அடுத்த கட்டுரைக்கு