Published:Updated:

இனி, ரயில்களை இப்படி ட்ராக் செய்யலாம்! #HowRFIDworks

கருப்பு
இனி, ரயில்களை இப்படி ட்ராக் செய்யலாம்! #HowRFIDworks
இனி, ரயில்களை இப்படி ட்ராக் செய்யலாம்! #HowRFIDworks

லகின் மிகப்பெரிய ரயில்வே துறைகளில் ஒன்று இந்தியன் ரயில்வே. சுமார் 2.51 லட்சம் வேகன்கள், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் பெட்டிகள் மற்றும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இன்ஜின்களை கொண்டுள்ள இந்தியன் ரயில்வே, இதுவரை இவை ஒவ்வொன்றையும் மேனுவலாக ட்ராக் செய்து வந்தது. இனி இவைகளை ட்ராக் செய்ய Radio-frequency identification (RFID) எனப்படும் ரேடியோ அதிர்வெண்கள் மூலம் கண்டறியும் சாதன முறையை இந்தியன் ரயில்வே பயன்படுத்த உள்ளது.

RFID டேக்கானது ரேடியோ அதிர்வெண் மூலம் இயங்கக்கூடியது. இந்தியன் ரயில்வே பயன்படுத்தவிருக்கும் RFID டேக் ரூ.1,000 மதிப்பு கொண்டதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டேக் வேகன், ரயில் பெட்டி மற்றும் இன்ஜினில் பொறுத்தப்படும். ஒவ்வொரு ரயிலிலும் பொறுத்தப்படும் டேக்குக்கும், தனித்தனியாகக் குறியீட்டு எண் தரப்பட்டிருக்கும். ரயில் பாதைக்கு அருகே ரேடியோ அதிர்வெண்ணைக் கண்டறியும் ரீடர் பொறுத்தப்பட்டிருக்கும். இந்த ரீடர் கணினியோடு இணைக்கப்பட்டிருக்கும். இரண்டு மீட்டர் தூரம் வரை இந்த ரீடரானது ரேடியோ அதிர்வெண்ணை வாசித்து, பாதையைக் கடக்கும் ரயில் பற்றிய விவரங்கள் குறித்து கணினிக்குத் தகவல் கொடுக்கும். இதன் மூலம் எந்த ரயில் எங்கு இருக்கிறது... ஒரே பாதையில் எத்தனை ரயில்கள் கடக்கின்றன போன்ற விவரங்களை உடனடியாகத் தெரிந்து கொள்ள முடியும்.

இந்தியன் ரயில்வே பயன்படுத்தும் RFID டேக்கின் ஆயுட்காலம் சராசரியாக 25 ஆண்டுகள் கொண்டது. அதன்பின், பழைய டேக்குகள் நீக்கப்பட்டு புதிய டேக்குகள் பொறுத்தப்படும். இனி தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகள் மற்றும் இன்ஜினில் RFID டேக்குகளைப் பொறுத்தவும் இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது.

RFID இயங்கும் முறை :

சூப்பர் மார்க்கெட்டில் பில் போடும்போது, ஒவ்வொரு பொருளையும் பார்கோடு ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்வதைப் பார்த்திருப்பீர்கள். பொருளின் மீது பதியப்பட்டிருக்கும் பார்கோடை ஸ்கேன் செய்ததும், ஏற்கனவே பதிவுசெய்த அப்பொருளின் பெயர், விலை போன்ற அனைத்து விவரங்களும் கணினியின் திரையில் தோன்றும். கிட்டத்தட்ட இதே போல் தான் ரேடியோ அதிர்வெண் மூலம் அடையாளம் கண்டுபிடிக்கும் முறையும் செயல்படுகிறது.

பார்கோடு ஸ்கேனருக்கும், பார்கோடு பொறிக்கப்பட்ட பொருளுக்கும் இடையே இடையூறு ஏற்பட்டால் ரீடரால் விவரங்களைப் படிக்க முடியாது. ஆனால், ரேடியோ அதிர்வெண்கள் மூலம் கண்டறியும் சாதன முறையானது ரேடியோ அதிர்வெண் மூலம் செயல்படுவதால் இந்தப் பிரச்னை கிடையாது. RFID டேக்கின் உள்ளே விரல் நுனி அளவில் உள்ள ஒரு ரியாக்டர் சிப் பொறுத்தப்பட்டிருக்கும். மேலும், சிக்னலைக் கடத்தக்கூடிய மெல்லிய ஆன்டென்னா ஒன்றும் பொறுத்தப்பட்டிருக்கும். எவ்வித வானிலையையும் தாங்கக்கூடிய பொருளால் இதன் மேற்பரப்பு மூடப்பட்டிருக்கும். ரீடர் மற்றும் ரியாக்டர் சிப் இடையே தொடர்பு ஏற்படுத்தும் வேலையை ஆன்டென்னா செய்யும். பேஸ்சிவ் வகை RFID டேக் இயங்க மின்சார இணைப்போ பேட்டரியோ தேவையில்லை. ரேடியோ மின்காந்த அலைகள் மூலமாகவே இதற்குத் தேவையான மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளும்.

பயன்பாடு :

RFID சிப் பொறுத்தப்பட்ட ஸ்மார்ட் கார் கீ-செயின்கள் சந்தைக்கு வந்துவிட்டன. கார் கதவின் லாக்கில் ரீடர் பொறுத்தப்பட்டிருக்கும். கீ-செயினில் இருக்கும் பட்டனை அழுத்தியதும் இன்ஃப்ரா ரெட் அலைகள் மூலம் ரீடருக்குத் தகவல்கள் அனுப்பப்பட்டு, கார் கதவின் லாக்கை திறக்கும் மற்றும் மூடும் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது. பல நிறுவனங்களில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஐ.டி கார்டுகளில் கூட இந்த RFID சிப் பொறுத்தப்பட்டிருக்கும். நிறுவனத்தின் கதவுகளின் அருகே இருக்கும் ரீடரில் RFID டேக்கைக் காண்பித்ததும், கதவு தானாகத் திறந்து அவர்களுக்கு அனுமதி வழங்கும். மேலை நாடுகள் பலவற்றின் சாலைகளில் RFID முறை மூலம் சிக்னல்கள் கண்காணிக்கப்படுகின்றன. சிக்னலை மீறிச் செல்லும் கார்களின் விவரங்கள் உடனடியாகக் கணினியில் பதிவாகிவிடும். இதே போல, RFID ஸ்மார்ட் டேக் பொறுத்தப்பட்ட கார்கள், டோல் கேட்டை கடக்கும்போது காரின் பதிவு எண், உரிமையாளர் உள்ளிட்ட விவரங்களை ரீடர் மூலம் தெரிதுகொள்ளும் வசதி மேலை நாடுகளில் உள்ளது.  கார்ப்பரேட் கம்பெனிகளில் ஊழியர்களின் ஐ.டி கார்ட்களோடு இந்த டேக்குகள் வழங்கப்படும். அதைப் பயன்படுத்தி கம்பெனியின் கதவைத் திறக்க முடியும். இது போன்ற வெவ்வேறு பயன்பாடுகளுக்காக RFID முறை கையாளப்படுகிறது.

இந்தியன் ரயில்வே பயன்படுத்தவிருக்கும் RFID முறை மூலம் ஒரு பாதையைக் கடக்கும் ரயில்கள் பற்றிய விவரங்கள், ஒவ்வொரு இன்ஜின் மற்றும் ரயில் பெட்டியும் எங்கு இருக்கிறது போன்ற அத்தனை விவரங்களையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும். தொலைதொடர்பில் இது மிகப்பெரிய உதவியாக இருக்கும்.