Published:Updated:

ஹெலன் கெல்லர் நயாகரா அருவியைப் பார்த்தது இப்படித்தான்!

வி.எஸ்.சரவணன்
ஹெலன் கெல்லர் நயாகரா அருவியைப் பார்த்தது இப்படித்தான்!
ஹெலன் கெல்லர் நயாகரா அருவியைப் பார்த்தது இப்படித்தான்!

ஹெலன் கெல்லர் - தன்னம்பிக்கை ஒளியைப் பிரகாசமாய் பாய்ச்சிய ஒரு பெயர். வாழ்க்கை எந்தளவு தன்னைப் பின்னுக்கு இழுத்தாலும் அதைக் கண்டு துளியும் அஞ்சாமல் போராடியவர்.

ஹெலன் கெல்லரின் பெற்றோர் ஆர்த்தர் கெல்லர், கேட் ஆடம்ஸ். ஹெலன் கெல்லர் பிறந்தபோது, எல்லா குழந்தைகளையும் போல இயல்பாகவே இருந்தார். ஆனால், 19 மாதங்களில் கடுமையான விஷக் காய்ச்சலுக்கு உள்ளானார். அதன்பின் ஹெலனின் வாழ்வில் ஒட்டிக்கொண்டது சோகம். அந்தக் காய்ச்சலில் ஹெலன் கண் பார்வையைப் பறிகொடுத்ததோடு, பேசும் திறனும் கேட்கும் திறனையும் இழந்தார்.

தன் தேவைகளைக்கூட வெளிப்படுத்தவியலாத ஹெலனை அவரது அம்மா மார்போடு அணைத்துக்கொண்டிருப்பார். அம்மாவின் அன்பு மிகுந்த ஸ்பரிசத்தை மட்டுமே ஹெலனால் உணர முடிந்தது. ஆனாலும், ஒவ்வொரு பொருளையும் தொட்டுப் பார்த்து அதன் தன்மையை உணர்ந்துகொண்டார். தலையை ஆட்டி அழைக்கவும் போகவும் சொல்லத் தொடங்கினார். சைகைகளை உருவாக்கிக்கொண்டார். தனக்கு ரொட்டித் துண்டுகள் வேண்டுமெனில் கைகளில் அதைக் காட்டச் செய்தார். இந்த சைகை மொழியைக் கொண்டு நண்பர்களிடம் உரையாடினார். ஹெலனுக்கு தங்கை பிறந்தாள். நாட்கள் செல்ல செல்ல, ஹெலனிடம் முரட்டுக்குணம் அதிகமானது. கிரஹாம் பெல்லைச் சந்தித்தனர் பெற்றோர். அவரது வழிகாட்டலில் ஆசிரியர் ஒருவர் ஹெலனுக்குக் கிடைத்தார். அவர் வெறும் ஆசிரியர் மட்டுமா... இல்லை ஹெலனின் எல்லாமுமாக மாறிபோனார்.

ஹெலனின் கையில் வைத்திருக்கும் பொம்மையிலிருந்தே பாடத்தைத் தொடங்கினார் ஆசிரியர் ஆன் சல்லிவன். அதன்பின் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஹெலனுடன் தன் வாழ்க்கையை இணைத்துக்கொண்டார் சல்லிவன். மெள்ள, மெள்ள கற்றலை மேற்கொண்டார் ஹெலன். தொப்பியை எடுத்து தன் தலையில் ஆசிரியர் வைத்தால், வெளியே செல்லப்போகிறோம் என்று அர்த்தம். ஆசிரியரிடம் கடுமையாக கோபப்பட்டார் ஹெலன். ஆனால், சல்லிவன் ஹெலனை நன்கு புரிந்துகொண்டதால் வருத்தப்பட வில்லை. ஏனெனில் சல்லிவனின் கதையும் ஹெலன் கதைபோல தான். அவருக்கு எட்டு வயதாக இருக்கும்போது பார்வைப் பறிபோனது. தான் உயிராக நேசித்த தம்பியையும் இழந்தார். பின், கடும்முயற்சிக்குப் பிறகு கல்விக் கற்றார். அந்த அனுபவத்தின் வழியாக ஹெலனை நன்கு புரிந்துகொண்டார். தண்ணீர் கொட்டும் நீர் குழாயில் ஹெலனின் கையைக் காட்டி, w a t e r எனக் கற்பித்தார்.

ஹெலனுக்கு 13 வயதாக இருக்கும்போது நயாகரா அருவியைப் பார்க்க, ஆசிரியருடன் சென்றார். பார்க்கும், கேட்கும், பேசும் திறனற்ற ஹெலனால் நயாகரா அருவியினை நேராக பார்த்த நிறைவை அடையச் செய்தது ஆசிரியரால்தான். ஹெலன் உடலில் அதிர்வினால் அருவியைப் பற்றிய வர்ணனையைச் சொன்னார் ஆசிரியர். ஹெலனின் மனக்கண்களில் மாபெரும் அருவி தன் குளிர்ந்த நீரலையை வீசச் செய்து, பெரும் சத்தத்தோடு வீழ்ந்துகொண்டிருந்தது.

ஹெலன் ஆசிரியரின் உதவியோடு பிரெய்லி முறையில் பல மொழிகளைக் கற்றுக்கொண்டார். நிறைய நூல்களை எழுதினார். தனது சுயசரிதையாக 'தி ஸ்டோரி ஆஃப் மை லைப்' எனும் நூலை எழுதினார். அதில் தனது ஆசிரியர் சல்லிவனை வானளாவ புகழ்ந்திருந்தார். தனது 24 வது வயதில் இளங்கலை பட்டத்தைப் பெற்றார். பார்க்க, கேட்க, பேச திறனற்ற மாற்றுத் திறனாளி ஒருவர் பட்டம் பெற்றது அதுவே முதன்முறை. ஒரு கட்டத்தில் ஆசிரியரின் உடல்நிலை மோசமாக, வேறொருவர் ஹெலனின் உதவியாளராக நியமிக்கப்பட்டார். 1936 ஆம் ஆண்டு ஆசிரியர் சல்லிவன் தன் இறுதி மூச்சை ஹெலனின் கைகளைப் பற்றியப்படியே முடித்துக்கொண்டார்.

ஹெலன் அரசியலிலும் ஈடுபட்டார். மாற்றுத்திறனாளிகான உரிமைகளுக்காக தனது மகத்தான பங்களிப்பை நிகழ்த்தினார். தன் நண்பருடன் இணைந்து ஹெலன் கெல்லர் சர்வதேச அமைப்பு' (HKI) எனும் அமைப்பைத் தொடங்கினார். அதில் பலவித ஆய்வுகளை மேற்கொண்டனர். இப்படி, ஹெலனின் எண்ணற்ற சாதனைகளைப் பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்.

முயற்சியை இறுகப்பற்றிக்கொண்டால் எதுவுமே நம்மால் சாதிக்க முடியும் என்பதற்கு ஹெலன் கெல்லர் மிகச் சிறந்த உதாரணம்.