Published:Updated:

விரைவில் இந்த நாடுகளில் கார்களே ஓடாது! #CarBan

விரைவில் இந்த நாடுகளில் கார்களே ஓடாது! #CarBan
விரைவில் இந்த நாடுகளில் கார்களே ஓடாது! #CarBan

விரைவில் இந்த நாடுகளில் கார்களே ஓடாது! #CarBan

ஹார்ன் அடித்துக் கடுப்பேற்றும் கார்கள், ‘வ்வ்ர்ர்ரூம்’ எனக் கக்கத்தின் பக்கத்தில் கடந்து செல்லும் பைக்குகள், கரி அள்ளித் துப்பும் பஸ்/லாரிகள் எதுவுமே இல்லாத உலகத்தை நினைத்துப்பாருங்கள். சற்று கடினமாகவே இருந்தாலும், ‘திரும்பவும் அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி’ என்பதுபோல், சில நாடுகளில் அந்தக் காலத்துக்கே திரும்ப இருக்கிறார்கள். ஆம்! கார், பைக்குகளைத் தடைசெய்ய இருக்கின்றன சில நாடுகள். இதற்கு ஒரே காரணம், சுற்றுச்சூழல் மாசு. சில நகரங்களில் இப்போதே ‘கார்களுடன் யாரும் அன்னம், தண்ணி புழங்கக் கூடாது’ என்று அந்தந்த ஊர் நாட்டாமைகள் அறிவித்தே விட்டார்கள். கிட்டத்தட்ட 2020-ம் ஆண்டுக்குள் கார்களைத் தடைசெய்ய இருக்கும் நாடுகளின் பட்டியல்...

ஓஸ்லோ, நார்வே

இப்போதைக்கு, கிட்டத்தட்ட உலகின் சுத்தமான நாடு நார்வேதான். இப்போதே அங்கு முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் கார்கள் மட்டும்தான் ஓடுகின்றன. இதனால், நார்வேயில் புகை, தூசு போன்ற வஸ்துகளுக்கு இடமே இல்லை. நம் ஊரில் பெட்ரோல் பங்க்குகள் இருப்பதுபோல், அங்கு எலெக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன்கள் இருக்கின்றன. நீங்கள் விரும்பும் இடத்தில் இலவசமாக சார்ஜ் போட்டுவிட்டு, ஜூட் விடலாம். நார்வேயின் தலைநகரான ஓஸ்லோவில் இருந்துதான், கார்களின் தடையை முதலில் தொடங்க இருக்கிறது நார்வே அரசாங்கம். 2019-ம் ஆண்டுக்குள் நார்வேயில் இனி எந்த கார்களையும் பார்க்க முடியாது. அநேகமாக, குதிரை வண்டி, மாட்டு வண்டி, சைக்கிள் மற்றும் நடைப்பயணம்தான்.

பாரீஸ்

இங்கு இப்போதிருந்தே அதற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டார்கள். இந்தியாவில் சில ஊர்களில் ‘ODD / EVEN சிஸ்டம்’ மாதிரி, லண்டனில் ‘Car Free Sunday’ எனும் சிஸ்டம் வந்துவிட்டது. அதாவது, ஞாயிற்றுக்கிழமைகளில் காரை எடுத்தால் அதிகப்படியான அபராதம். ‘அப்போ ஞாயிற்றுக்கிழமை எங்க  சொந்தக்காரங்களை எப்படிப் பார்க்கிறது?’ என்பவர்கள், வேண்டுமானால் பழைய வின்டேஜ் கார்களை வாங்கிக்கொள்ளலாம். அதேமாதிரி, வின்டேஜ் கார்களுக்கு வார நாள்களில் தடா!

லண்டன்

லண்டனில் முதலில் டீசல் கார்களுக்கு ஆப்பு விழக் காத்திருக்கிறது. லண்டன் மேயர் சாதிக் கான் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு, பலரின் எதிர்ப்புக்கு உள்ளானார். லண்டனில் அதிகமாகப் புகை கக்கும் வாகனங்களுக்கு 10 யூரோக்கள் வரை அபராதம் விதித்து அதிரடி கிளப்பினார். அதற்குப் பிறகு மர அடுப்புகளுக்கும் தடா போட்டார். லண்டனில் ‘ஸ்க்ராப்பேஜ் ஸ்கீம்’ 2009-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது, 12 மாதங்களுக்கு மேல் பயன்படுத்திய வாகனத்தை எக்ஸேஞ்ஜில்  புது கார் வாங்கினால் கணிசமான தள்ளுபடி உண்டு. லண்டனில் 2020-ம் ஆண்டுக்குள் டீசல் கார்களை எங்கும் பார்க்க முடியாது.

மேட்ரிட், ஸ்பெயின்

ஸ்பெயினின் தலைநகரமான மேட்ரிட் நகரில், முதலில் இந்தத் தடை அமலுக்கு வரும். ‘ஒவ்வொரு வியாழக்கிழமை காலை 6.30 முதல் இரவு 9 மணி வரை டீசல் கார்கள் ஓடக் கூடாது' என்று டிசம்பரில் தடை விதித்தார்கள். அதற்குப் பிறகு `ஒற்றை/இரட்டை இலக்கம்கொண்ட கார்கள், அந்தந்த இலக்க தேதிகளில்தான் ஓட வேண்டும்' என்று அறிவித்தனர். மீறினால், 50 டாலர்கள் அபராதம். 2020-ம் ஆண்டுக்குள் முழுவதுமாக கார்களே ஓடாது. ஆனால், ஊனமுற்றோருக்கான வாகனங்கள், பஸ்கள், டாக்ஸிகள், எமர்ஜென்சி வாகனங்களுக்கு விதிவிலக்கு உண்டு.

ஹேம்பர்க், ஜெர்மனி

ஜெர்மனியில் சைக்கிள் மற்றும் நடைப்பயணம் செல்பவர்களைத் தெய்வமாகப் பார்க்கிறார்கள். அடுத்த தலைமுறையில் இங்கு கார்களின் எண்ணிக்கைக் கணிசமாகக் குறைந்திருக்கும். வெறும் பாதசாரிகளும் பைக்கர்களும் மட்டும்தான் இருப்பார்கள். இந்தத் திட்டத்துக்கு ‘கிரீன் நெட்வொர்க்’ என்று பெயர். 2035-ம் ஆண்டுக்குள் ஹேம்பர்க் நகரத்துக்குள் பார்க்குகள், விளையாட்டு மைதானங்கள், சுடுகாடு எல்லாமே கிரீன் நெட்வொர்க்குக்கு மாறியிருக்கும்.

கோப்பன்ஹேகன், டேனிஷ்

ஐரோப்பாவில் குறைந்த எண்ணிக்கையில் கார் ஓனர்கள் இருக்கும் நகரம் இதுதான். டேனிஷின் தலைநகரான இதில், பைக்/கார் லேன்களைவிட சைக்கிள் லேன்கள்தான் அதிகம். கிட்டத்தட்ட 350 கி.மீ-க்கு கோப்பன்ஹேகனில் சைக்கிள் லேன் இருக்கிறதாம். இதுபோக, சைக்கிள்களுக்கான ‘சூப்பர் ஹைவே’ எனும் பாலம் கட்டுவதற்கும் திட்டம் தீட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது. 2025-க்குள் ‘கார்பன் ஃப்ரீ’ நகரமாக வேண்டும் என்பதுதான் கோப்பன்ஹேகன் நகரத்தின் லட்சியம்.

மெக்ஸிகோ, வட அமெரிக்கா

வார நாள்களில் இரண்டு தினங்கள், மாதத்தில் இரண்டு சனிக்கிழமைகள் மட்டும்தான் கார்கள் சாலையில் ஓட வேண்டும். இது சுழற்சி முறையில் நடைபெறும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம்தான் மெக்ஸிகோவில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. பெரிய நகரமான மெக்ஸிகோவில் மொத்தம் 20 லட்சத்துக்கும் மேல் கார்கள் ஓடுகின்றன. விரைவில் ‘Smoke Free’ நகரமாக மெக்ஸிகோ மாறும் என்று அறிவித்திருக்கிறது மெக்ஸிகோ அரசு.

ஏதென்ஸ், கிரீஸ்

கிரீஸ் தலைநகரான ஏதென்ஸிலும் நம்பர் பிளேட் சிஸ்டம்தான். ‘‘சுத்தமான காற்றுதான் சுத்தமான நகரத்துக்கு ஆதாரம். அதுதான் இந்தத் திட்டம். 2025-ம் ஆண்டுக்குள் ஏதென்ஸ், உலகின் சுத்தமான நகரமாக மாறும்’’ என்று இந்தப் புத்தாண்டு தொடக்கத்தில்தான் சபதம் எடுத்திருக்கிறார் ஏதென்ஸ் மேயர், கியார்கோஸ் காமினிஸ். நகரத்தின் முக்கியப் பகுதிகளில் இப்போதே கார்கள் ஓடக் கூடாதாம்.

புரூஸெல்ஸ், பெல்ஜியம்

சிட்டி ஸ்கொயர், ஸ்டாக் எக்சேஞ்ஜ், ரியூநியூவ் என்ற மிகப்பெரிய ஷாப்பிங் மால் போன்ற புரூஸெல்ஸில் பல முக்கியத் தெருக்கள் இப்போதே ‘Car Free Zone’ ஆகத்தான் காட்சியளிக்கின்றன. ஆம்! இங்கு முழுக்க முழுக்க நடைபாதைவாசிகளுக்குத்தான் அனுமதி. கோப்பன்ஹேகனுக்குப் பிறகு இரண்டாவது ‘கார் ஃப்ரீ ஜோன்’ புரூஸெல்ஸ்தான். ‘மொபிலிட்டி வீக்’ என்பதும் புரூஸெல்ஸில் பிரசித்தம். அதாவது, வாரத்தில் ஒரு நாளாவது பப்ளிக் டிரான்ஸ்போர்ட்டைப் பயன்படுத்த வேண்டும். 2018-ம் ஆண்டுக்குள் டீசல் கார்களுக்கு இங்கு வேலையே இருக்காது.

நியூயார்க், அமெரிக்கா

நாளை, அடுத்த வாரம், அடுத்த மாதம், அடுத்த வருடம் என்று எப்போது வேண்டுமானாலும் டீசல் கார்களுக்குத் தடை விதிக்கத் தயாராக இருக்கிறது அமெரிக்காவின் நியூயார்க் நகரம். டைம்ஸ் ஸ்கொயர், ஹெரால்டு ஸ்கொயர், மேடிஸன் ஸ்கொயர் பார்க் என்று பிரபலமான ஏரியாக்களில் எல்லாம் கார்களே தென்படவில்லை. ஆகஸ்ட் 2016-ம் ஆண்டில் சென்ட்ரல் பார்க்கிலிருந்து புரூக்ளின் பிரிட்ஜ் வரை லட்சக்கணக்கான மக்கள் நடைப்பயணம் செய்து கார்களுக்கான தடையை அங்கீகரித்திருக்கிறார்கள். பெடஸ்ட்ரியன்களை உற்சாகப்படுத்த இன்னும் நிறைய பெடஸ்ட்ரியன் பிளாசாக்கள் நியூயார்க்கில் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன.

வான்கூவர், கனடா

‘கார் தடையை அப்புறம் பார்ப்போம். முதலில் எல்லோரும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள்’ என்று மென்மையாக அறிவித்திருக்கிறது வான்கூவர் நகராட்சி. ஒவ்வொரு ஜூன் மாதத்தையும் ‘கார் ஃப்ரீ மாதமாகக்’ கொண்டாடுகிறார்கள் வான்கூவர் மக்கள். ‘ஜூன் மாதம் மட்டும் யாருமே கார்களுடன் அன்னம், தண்ணி புழங்கக் கூடாது’ என்பது வான்கூவர் நாட்டாமையின் தீர்ப்பு.

அடுத்த கட்டுரைக்கு