Published:Updated:

குழந்தைகளோடு விளையாடி படைப்புத்திறனை மேம்படுத்துவோம்!

குழந்தைகளோடு விளையாடி படைப்புத்திறனை மேம்படுத்துவோம்!
குழந்தைகளோடு விளையாடி படைப்புத்திறனை மேம்படுத்துவோம்!

குழந்தைகளோடு விளையாடி படைப்புத்திறனை மேம்படுத்துவோம்!

கோடை விடுமுறை. குட்டீஸ் வாண்டுகளின் ஜாலி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரே எனர்ஜி லெவல் எகிறி இருக்கும். எப்போது கோடை வெயில் முடியும், பள்ளி மீண்டும் திறப்பார்கள் என்று காத்திருக்கும் பெற்றோர்களும் உண்டு. இந்தக் கோடை விடுமுறையில் குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு எந்தவிதமான குறையும் வைக்காமல் விளையாட்டுடன் படைப்புத்திறனையும் மேம்படுத்த வேண்டும்.

‘குழந்தைகளுக்குள் புதைந்திருக்கும் படைப்புத்திறனை வெளிக்கொணர்ந்தால் அவர்கள் வளரும் போது புதுமையான பல பொருட்களையும், படைப்புகளையும் உருவாக்கும் ஆற்றல் உள்ளவர்களாக மாறுவார்கள். பள்ளி மாணவர்களின் படைப்பாற்றல் திறனைப் பட்டைத்தீட்ட வேண்டும். இளம் வயதிலேயே படைப்பாற்றல் திறனை வளர்ப்பது என்பது செழித்து வருபவர்களுக்குச் செம்மைப்படுத்தும் ஒரு முயற்சி தான். இதனைக் குழந்தைகளை அவர்களது போக்கில் மகிழ்ச்சியுடன் கலந்துகொள்ளச் செய்து எளிதில் மேம்படுத்துவது என்பது சாத்தியம் ஆகும்' என்கிறார் உலக படைப்பாக்கல் மற்றும் புதுமையாக்கல் நிறுவனத்தின், இந்தியாவின் அங்கமாக விளங்கும் பொட்டன்சியல் ஜெனிசீஸ் நிறுவனத்தின் தலைவர் ராமமூர்த்தி கிருஷ்ணா.

புதுமை மற்றும் படைப்பாற்றல் திறனை வளர்க்கும் வகையில் 8 முதல் 12 வயது வரை உள்ள மாணவர்களுக்கான படைப்பாற்றலுக்கான பயிற்சிப் பட்டறையை விகடனுடன் இணைந்து பொட்டன்சியல் ஜெனிசீஸ் நிறுவனம் கடந்த வாரம் சென்னை மயிலாப்பூரில் மேரிபிரவுன் மையத்தில் ஏற்பாடு செய்திருந்தது. இது படைப்பாற்றல் தினத்தைச் சிறப்பிக்கும் வகையில் நடத்தப்பட்டது.

இந்த பயிற்சிபட்டறையில் பள்ளிக்குழந்தைகள் குதுகலத்துடன் கலந்துகொண்டார்கள். இதில் சிறப்பு விருந்தினர்களாக விகடன் குழும கார்ட்டூனிஸ்ட் ஹாசிப்கான் அவர்கள் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு புதிய உத்திகளைப் பயன்படுத்தி படம் வரைந்து காண்பித்தார். அதனை பள்ளிக்குழந்தைகள் அப்படியே உள்வாங்கி பல்வேறு கருத்துகளில் படம் வரைந்து சபாஷ் போட வைத்தார்கள். பயிற்சியின் ஒரு பகுதியாக கண்களைக் கட்டிக்கொண்டு படம் ஹாசிப்கான் படம் வரைந்து காண்பிக்க, அதைப் பார்த்து சுட்டிகளும் தங்கள் கண்களைக் கட்டிக்கொண்டு சார்ட்டில் வரைய ஆரம்பித்தனர்.  வேடிக்கை பார்த்த சுட்டிக்கள் லெஃப்ட், ரைட், அப், டவுன் எனக் கலகலப்பாக இன்ஸ்ட்ரஷன் கொடுக்க... முழுப் படத்தையும் ஒரு அட்வெஞ்சர் போல வரைந்து முடித்தார்கள்... சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு சுட்டி விகடன் பொறுப்பாசிரியர் கே.கணேசன் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.

பல்வேறு உத்திகளும், முறைகளும் இந்தப் பயிற்சிப் பட்டறையில் கையாளப்பட்டது. படைப்பாற்றல் பயிற்சிப்பட்டறையில் குழந்தைகள் வெற்றி பெறும் போது உடனுக்குடன் பரிசுகள் வழங்கும் போது உற்சாகமாகி எல்லாக் குழந்தைகளும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டுப் பல பரிசுகளை வாங்கினார்கள். இதன் மூலம் முழு படைப்பு திறனையும், சிந்தனையையும், ஹாசிப்கான் சொன்னபடி 'அவுட் ஆஃப் பாக்ஸ்' என்ற சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுத்து ஆச்சரியப்படுத்தினார்கள். இதன் மூலம் அவர்கள் முடிவெடுக்கும் திறன் அபாரமாக வெளிப்பட வாய்ப்புக் கிடைத்த சந்தோஷத்தில் சுட்டிகளின் பெற்றோருக்கும் அந்த நிகழ்வு பெருமையாக இருந்தது.

"பொதுவாகப் படைப்பாற்றல் என்றால் வரைவது, பெயிண்ட் செய்வது, டான்ஸ் ஆடுவது என்று நினைக்கிறார்கள். அது ஒரு பகுதியே. இன்றைக்கு வேகமாக வளர்ந்து வரும் வியாபார உலகில் சொந்தமாக முடிவெடுக்கும் திறனை குழந்தைப்பருவத்திலேயே வளர்த்துக்கொள்வதும் அவசியம். இளம்வயதில் வளர்த்துக்கொள்ளும் போது அது அவர்களுடைய பழக்கமாகி விடும். இதற்கு அவர்களுடைய எண்ணியல் (Numeracy), எழுத்தியல் (literacy), சிந்தனையுடன் கூடிய செயல்பாட்டியல் திறனை (Operacy) வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த மூன்று வழிகளை டாக்டர் எட்வேர்ட் டிபோ (Edward de Bono) அழகாக வடிவமைத்துத் தந்திருக்கிறது. அதனை நாங்கள் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறோம். இதன் மூலம் மாற்றுச் சிந்தனையை தூண்டுகிறோம். பள்ளிகளுக்கே சென்று நடத்தினால் அவர்கள் படிப்பதோடு சம்பந்தப்படுத்திக்கொள்வார்கள் என்பதால் வித்தியாசமான இடங்களைத் தேர்வு செய்து நடத்துகிறோம். இதன் மூலம் அவர்கள் மனதில் உள்ள இறுக்கங்கள் எல்லாம் விலகி வித்தியாசத்தை உணர்கிறார்கள். இந்த ஆண்டு முழுவதும் சென்னை முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களிடையே இந்தப் பயிற்சிப் பட்டறையை நடத்தத் திட்டமிட்டு இருக்கிறோம்" என்கிறார் ராமமூர்த்தி கிருஷ்ணா.

பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்ட நான்காம் வகுப்பு மாணவி மீனாவிடமும், பத்தாம் வகுப்பு மாணவியான காயத்ரியிடமும் பயிற்சி பட்டறையின் அனுபவங்களைக் கேட்டோம்.

"சின்னச்சின்ன வண்ணப்படங்களை தந்து அந்தப் படங்களைக்கொண்டு எங்களைக் கதை சொல்லச் சொன்னார்கள். இதுவரை நாங்கள் கதைகளைக் கேட்டிருந்தாலும் சொன்ன அனுபவம் இல்லை. கொஞ்சம் யோசித்துச் சொல்ல முயற்சித்தோம். எனக்கு கதைசொல்ல முடியும் என்ற தெரிந்துகொண்டேன். இதைப்போலவே, நான்கு வடிவத்தில் பொருட்களைக்கொடுத்து ப்ரமீடு செய்யச் சொன்னார்கள். பிரமீட்டு என்றால் முக்கோணமாகத்தான் இருக்கும் என்று பழகி இருந்த எங்களுக்கு வித்தியாசமான வடிவத்தை வைத்துச் செய்வது கடினமாக இருந்தது. அவர்கள் எப்படிச் செய்ய வேண்டும் என்று செய்து காண்பித்த போது எளிமையாக இருந்தது. பல்வேறு பள்ளிகளில் இருந்து கலந்துகொண்ட எங்களை எல்லாம் குழுவாக இணைந்து செயல்பட வைத்தார்கள்" என்று ஆர்வத்தோடு சொன்னார்கள். இந்த நிகழ்ச்சியின் மூலம் இன்னொரு சிறப்பு பல அக்காக்களின் ப்ரண்ட்ஷிப் கிடைத்தது'என்று சொல்லி சிரித்தாள் மீனா.

பள்ளியில் படிப்பு, தேர்வு என இருந்தவர்கள் பயிற்சிப் பட்டறையில் சுதந்திரம் பெற்ற பறவைகளாய் செயல்பட்டார்கள். நிச்சயம் இந்தப் பயிற்சிப் பட்டறை நிகழ்வுகள் குழந்தைகளின் அன்றாட வாழ்விலும் படிப்பிலும் வெளிப்பட்டு அவர்களை மேலும் சிறந்து விளங்கச் செய்யும் என்பது நேரில் பார்த்த போது புரிந்துகொள்ள முடிந்தது.

குழந்தைகளுக்கு வாழ்த்துகள் சொல்லி விட்டோம் ஜூட்.

அடுத்த கட்டுரைக்கு