Published:Updated:

‘நான் ராக்கோழி இல்ல ராக்குயிலாக்கும்!’ - ஆர்.ஜே விஷ்ணுபிரியா

வே.கிருஷ்ணவேணி
‘நான் ராக்கோழி இல்ல ராக்குயிலாக்கும்!’ - ஆர்.ஜே விஷ்ணுபிரியா
‘நான் ராக்கோழி இல்ல ராக்குயிலாக்கும்!’ - ஆர்.ஜே விஷ்ணுபிரியா

கிட்டத்தட்ட ஒன்பது வருட ரேடியோ ஜாக்கி அனுபவத்துடன் நமது செவிகளில் தேனாக நுழைந்து மனதை தித்திக்க செய்துகொண்டிருப்பவர் விஷ்ணுபிரியா. கடந்து மூன்று வருடங்களாக ஹலோ எஃப்.எம்-ல் 'ராக்கோழி' நிகழ்ச்சியை வழங்கி வருபவரோடு சில நிமிடங்கள்... 

“லைஃப் செம ஜாலியா போயிட்டு இருக்குங்க. தினம் தினம் புதுப்புது விஷயங்களை கத்துக்கிட்டே இருக்கேன். இளையராஜா, எஸ்.பி.பினு எனக்கு ரொம்ப பிடிச்ச ஆளுமைகளின் பாடல்களை கேட்டுக்கிட்டே இரவுகளை கழிக்கிறேன். சூரியன் எஃப்.எம்மில் ஏழு வருஷங்கள் ஆர்.ஜேவாக இருந்தேன். ரமேஷ் திலக், பிளேடு சங்கர் என பலருடன் சேர்ந்து புரோகிராம் பண்ணியிருக்கேன். ஹலோ எஃப்.எம் வாய்ப்பு கிடைச்சதில் பெரிய கதை இருக்கு. 

'இங்கே ஏதாவது ஓப்பனிங் இருக்கா?'னு சுரேஷ்கிட்ட கேட்டேன். ஆபீஸூக்கு வரச்சொன்னார். 'இப்போதைக்கு ஒரே ஒரு ஓப்பனிங் இருக்கு. ஆனா, அது உங்களுக்கு செட் ஆகாது'னு சொன்னார். 'செட் ஆகாதுனு நீங்களே முடிவுப் பண்ணாம என்ன விஷயம்னு சொல்லுங்க'னு கேட்டேன். 'நைட்ல ஒரு ஷோ பண்ற வாய்ப்பு இருக்கு. நிறையப் பெண்கள் ஓ.கே சொல்லிட்டு, வீட்டுக்குப் போனதும் வேண்டாம்னு போன் பண்ணி சொல்லிடுவாங்க. அநேகமா நீங்களும் அப்படித்தான் சொல்வீங்க' என்றார். ஆனால், நான் கொஞ்சமும் தயங்காமல் ஓ.கே சொன்னேன். 'அவரசரப்படமாக யோசிச்சு சொல்லுங்க'னு அனுப்பிட்டார். இரண்டு நாள் கழிச்சு போன் பண்ணி கேட்டார். 'நான் ஜாயின் பண்றேன் சார்'னு சொன்னேன். 

முதல் நாள் 'ராக்கோழி' புரோகிராம். நைட் பதினொரு மணியில் இருந்து ரெண்டு மணி வரைக்கும் நிகழ்ச்சி. இந்த நேரத்துல எப்படிப்பட்ட காலர்ஸ் இருப்பாங்கனு உள்ளுக்குள்ளே ஒரு பதற்றம் ஓடிட்டே இருந்துச்சு. பொதுவா, நைட் ஷோ என்றால், வேற மாதிரி இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். அதைப் பற்றி சுரேஷ்கிட்டே முன்னாடியே கேட்டுட்டேன். 'இது ஃபேமிலி, ஃபிரெண்ட்ஷிப், பாண்டிங் என்றுதான் இருக்கும். டோண்ட் வொர்ரி'னு சொல்லியிருந்தார். அவர் சொன்னது நூறு சதவீதம் உண்மைங்கிறது முதல் நாள் நிகழ்ச்சியிலேயே தெரிஞ்சுடுச்சு. பல நேயர்கள் அவ்வளவு நம்பிக்கையோடு கால் பண்ணி பெர்ஷனல் விஷயங்களை ஷேர் பண்ணிக்கிட்டாங்க. என்கிட்டே இருந்து கிடைக்கும் ஆறுதல் வார்த்தைகளுக்காக அவங்க வெயிட் பண்றது என்னைக் கண் கலங்க வெச்சுடுச்சு'' என்ற விஷ்ணு பிரியா, ஒரு சுவாரஸ்யமான நிகழ்வையும் பகிர்ந்துகொண்டார். 

'ஷோ முடியறதுக்கு முன்னால் 1.40 மணிக்கு 'ஸாரி சொல்ற டைம்' வரும். அப்போ, போன் பண்ணி தனக்கு நெருக்கமானவங்களுக்கு ஸாரி சொல்லலாம். ஒருமுறை அண்ணன், தம்பி ரெண்டு பேர் ஒருத்தருக்குப் பின் ஒருத்தராக போன் பண்ணினாங்க. என்ன கதைனா... அண்ணன் லவ் பண்ணி பிரேக் அப்ல முடிஞ்ச பொண்ணை தம்பி கல்யாணம் செய்துகிட்டார். அதாவது, அந்த அண்ணன் காலேஜ் விட்டுப்போனதும் தம்பிக்கும் அந்த பொண்ணுக்கும் லவ்வாகி, கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்னிருக்கார். அதை அண்ணனால் தாங்கிக்க முடியாமல் தனிக்குடித்தனம் போயிட்டார். இது ஒரு பக்கம் இருக்க, தன் காதல் மனைவியோட ஏற்பட்ட பிரச்னை விவகாரத்து வரைக்கும் போயிருக்குது தம்பிக்கு. இந்தக் குழப்பங்களுக்கு நடுவில் அண்ணன், தம்பி ரெண்டு பேருமே பல வருஷங்களாகப் பேசிக்கிறது இல்லை. தம்பிதான் முதலில் எங்களுக்கு போன் பண்ணி, 'நான் பெரிய தப்புப் பண்ணிட்டேன். நான் அந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்னப்போ அவருக்கு எவ்வளவு வேதனையா இருந்திருக்கும்னு இப்போ புரியுது. ஸாரி அண்ணா'னு ரொம்ப ஃபீல் பண்ணினார். அவர் போனை வெச்சதும் அண்ணனும் லைனுக்கு வந்து, 'தம்பியின் வாழ்க்கை நல்லா இருக்கணும்னுதான் நான் ஒதுங்கிப் போனேன். மத்தபடி தம்பி மேல எனக்கு எந்தக் கோபமும் இல்லை'னு சொன்னார். 

இப்படி எத்தனையோ பேர் தங்களோட பெர்சனல் பக்கத்தை ஷேர் பண்ணிக்கிறாங்க. 2015 டிசம்பரில் சென்னையே வெள்ளத்தில் மிதந்துட்டு இருந்தப்போ நிறையப் பேர் போன் பண்ணி, 'மழை அதிகமா பெய்துட்டு இருக்கு. இப்போதைக்கு வீட்டுக்குப் போக வேண்டாம். உங்களுக்கு நாங்க கம்பெனி கொடுக்கிறோம்னு' தைரியம் கொடுத்து பேசிட்டே இருந்தாங்க. நான் எப்பவும் காரில்தான் வருவேன். நைட் ரெண்டு மணிக்கு புரோகிராம் முடிச்சுட்டு கிளம்பும்போது ரோடே வெறிச்சோடி கிடக்கும். தைரியமா வண்டியை ஓட்டிட்டு வீட்டுக்கு வந்ததும், என் எட்டு வயசு மகள் லயாவுக்கு ஒரு முத்தம் கொடுத்துட்டு தூங்கப் போவேன். என் கணவர் லட்சுமி நாராயணன் என்னை எப்பவும் என்கரேஜ் பண்ணிட்டே இருப்பார். என்னை நம்பி வாய்ப்பு கொடுத்த சுரேஷுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லிக்கிறேன். நிறைய பாசிட்டிவ் விஷயங்கள் இந்த நிகழ்ச்சி மூலம் கிடைச்சு இருக்கு. நிறையப் பேர், 'உங்களை யார் ராக்கோழினு சொன்னது? நீங்க ராக்குயில்'னு சொல்வாங்க'' என கலகல சிரிப்புடன் முடிக்கிறார் விஷ்ணுபிரியா.