Published:Updated:

கேலி, கலாய், கருத்து! - யூ-டியூப்பை தெறிக்கவிடும் ஸ்டாண்ட் அப் காமெடியன்கள் பார்ட் 2

கேலி, கலாய், கருத்து! - யூ-டியூப்பை தெறிக்கவிடும் ஸ்டாண்ட் அப் காமெடியன்கள் பார்ட் 2
கேலி, கலாய், கருத்து! - யூ-டியூப்பை தெறிக்கவிடும் ஸ்டாண்ட் அப் காமெடியன்கள் பார்ட் 2

யூ-டியூப் பக்கம் இறங்கியடிக்கும் ஸ்டேண்ட் அப் காமெடியன்கள் சிலரைப் பற்றி முன்பே பார்த்தோம். இவர்களின் லிஸ்ட் நீளம் என்பதால் அதன் அடுத்த பகுதிதான் இது. கேலி, கொஞ்சம் கருத்து நிறைய கலாய் எனக் கலக்கும் அந்த விகடகவிகளைப் பற்றி பார்ப்போமா மக்களே?

பிஸ்வ கல்யாண் ரத்:

ஐ.ஐ.டியில் பயோடெக்னாலஜி படித்த மூளைக்கார இளைஞர். முடித்துவிட்டு ஆரக்கிள் நிறுவனத்தில் கணினி முன் தவம் செய்துகொண்டிருந்தார். பின்னர் கண்ணன் கில்லி அறிமுகம் கிடைக்க, இருவரும் சேர்ந்து ஹிட்டான பாலிவுட் படங்களை விமர்சனம் செய்யத் தொடங்கினார்கள். அதில் கிடைத்த ரீச் இவரை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றது. அதன் பின் சோலோவாக கொஞ்ச நாள் காமெடி செய்தவர் இப்போது ஆல் இந்தியா டூரில் செம பிஸி.

கென்னி செபாஸ்டியன்:

மொழுமொழு அமுல்பேபி. பார்க்க பாப்கார்னை பறிகொடுத்த பாப்பா போல இருப்பது இவரின் பிளஸ். பெங்களூருதான் பூர்வீகம். இயக்குநராக வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. சில குறும்படங்களை இயக்கிய பின் முழுநேர ஸ்டாண்ட் அப் காமெடியன் ஆனார். நம்மைச் சுற்றி நடக்கும் சின்ன சின்ன விஷயங்களை காமெடி கலந்து சொல்வதில் ஆள் கில்லி. அதனாலேயே இளசுகளின் மோஸ்ட் வான்டட் லிஸ்ட்டில் கென்னிக்கு முக்கிய இடம் இருக்கிறது.

நீத்தி பால்டா:

அந்த ஊர் கோவை சரளா. ஸ்ட்ரிக்டான ஆர்மி ஆபிஸரின் மகள். விளம்பரத்துறையில் நல்ல சம்பளத்தில் வேலைக்கு இருந்தவர். வேலை போரடிக்கவே பட்டென விட்டுவிட்டு இந்தப் பக்கம் வந்துவிட்டார். சின்ன சின்ன பப்களில் காமெடி செய்யத் தொடங்கிய இவருக்கு இன்று இந்தியா தாண்டியும் ரசிகர்கள் இருக்கிறார்கள். கூட்டம் அள்ளினாலும் அசராமல் என் பணி காமெடி செய்து கிடப்பதே என விலா எலும்புகளை நோகடிக்கும் காமெடி ராணி

ஜாகீர் கான்:

மிடில் க்ளாஸ் சாமானியன். படிப்பில் விருப்பம் இல்லாத ட்ராப் அவுட். 2012-ல் காமெடி சென்ட்ரல் நடத்திய டேலன்ட் ஷோவில் இந்தியாவின் பெஸ் காமெடியன் விருதை வென்றார். அப்போது தொடங்கியது சுக்ரதிசை. மற்றவர்கள் நிறைய ஆங்கிலம் கொஞ்சம் இந்தி என பேசினால் இவர் நிறைய இந்தி கொஞ்சம் ஆங்கிலம் என வெரைட்டி காட்டுவார். ஜாகீர் சிறந்த தொகுப்பாளரம் கூட.

வீர் தாஸ்:

பிறந்தது டேராடூனில், வளர்ந்தது ஆப்ரிக்காவில். பொருளாதாரத்தில் பட்டம் பெற்றுவிட்டு நாடகக் கலைஞரானவர். அதன்பின் காமெடி பக்கம் கவனத்தைத் திருப்பினார். யூ-டியூப்பிற்கு எல்லாம் முன்னால் இவர் கோலோச்சியது டிவியில்தான். பல சேனல்களில் தொகுப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். அடுத்து யூ-டியூப் பக்கம் வந்தவர் இப்போது நெட்ப்ளிக்ஸிலும் கால் பதித்து கலக்கி வருகிறார்.

பின் செல்ல